Tuesday, February 19, 2013

இஸ்லாமிற்கு வழிகாட்டியது பைபிள்!!!



சகோதரர் யூஸா எவன்ஸ் (Yusha Evans), இருபத்தொன்பது வயது இளைஞரான இவர், இஸ்லாத்திற்கு வந்த கடந்த பனிரெண்டு வருடங்களில் செய்த பணிகள் இன்றியமையாதவை. மாதம் இருவராவது இவரது தாவாஹ் பணியால் இஸ்லாத்தை தழுவி வருகிறார்கள். பல்கலைக்கழகங்களால் விரும்பி அழைக்கப்படும் நபர்களில் ஒருவராய் இருக்கிறார்.
இன்றைய இளைய தலைமுறை முஸ்லிம்களுக்கு பெரும் உத்வேகமாய் இருக்கக்கூடிய இவர் மனோதத்துவம் பயின்றவர். இவர் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கலிபோர்னியாவில் “How the Bible Led me to Islam” என்ற தலைப்பில் தான் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறிய கருத்துக்கள் இங்கே உங்கள் பார்வைக்காக.
————————————————————–
அந்த சொற்பொழிவு சுமார் ஒன்றரை மணி நேர ஒன்று. முழுவதுமாக இங்கே எழுதினால் மிக நீண்ட பதிவாகிவிடும் என்பதால் சில விஷயங்கள் விடப்படுகின்றன.
“நான் தெற்கு கரோலினாவின் Greenville பகுதியைச் சேர்ந்தவன். சிறிய வயதிலேயே என் தாய் எங்கள் குடும்பத்தை விட்டு வெளியேறிவிட்டார். என் தந்தையோ இரண்டு வேலைகளில் இருந்தார். அதனால் நான் என் தாத்தா-பாட்டி கவனிப்பில் தான் வளர்ந்தேன். மிகுந்த கட்டுப்பாடு உள்ள குடும்பம். அதிக கடவுள் நம்பிக்கை உடையவர்களும் கூட (Methodist church).
நான் கிருத்துவத்தை விரும்பி என்னை அதனுடன் இணைத்துக் கொண்டவன். 12-13 வயதில் என்னை சர்ச்சின் இளைஞர் சேவைகளில் (Youth Services) இணைத்துக் கொண்டேன்.
அப்போது எனக்கு பதினைந்து வயதிருக்கும், என் நெருங்கிய நண்பருக்கு பதினேழு வயதிருக்கும். அவர் பாரம்பரியமிக்க பாப் ஜோன்ஸ் பல்கலைகழகத்தில் (Bob Jones University) புத்தக ஆராய்ச்சி படிப்பில் சேர்ந்திருந்தார். அப்படியென்றால், ஒரு நூலை எடுத்துக்கொண்டு அது எங்கிருந்து வந்தது, யார் எழுதினார்கள் என்பது போன்ற விஷயங்களை ஆராய்வது.
ஒருமுறை அந்த நண்பர் கேட்டார்,
“நீ பைளிளை படித்திருக்கிறாயா”
எனக்கு ஆச்சர்யம், “அதைத் தானே நாம் சர்ச்களில் செய்து கொண்டிருக்கிறோம்”
“இல்லை இல்லை நான் கேட்பது, நீ பைபிளை முழுவதுமாக படித்திருக்கிறாயா, முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை”
நாங்கள் பைபிளை அங்கொன்றும் இங்கொன்றுமாக படித்தவர்கள். முழுவதுமாக படித்தவர்கள் என்று எனக்கு தெரிந்து யாரும் கிடையாது.  புரிந்தது, அதைத்தான் அவர் கேட்கிறார்.
அவர் தொடர்ந்தார், “பைபிள் இறைவனின் வார்த்தைகள் என்று சொல்லக்கூடிய நாம் அதை ஏன் முழுமையாக படிக்க முயலவில்லை”
அவருடைய கேள்வி என்னை மிகவும் யோசிக்க வைத்து விட்டது. ஆம் அவர் கேட்பது நியாயம்தான்.
பிறகு அவர் கூறினார், “நாம் ஏன் பைபிளை முழுமையாக படிக்கத் துவங்கக்கூடாது?”
சரி, முழுவதுமாக படித்து விடுவோம் என்று “Genesis” (The first book of Old Testament) இல் இருந்து துவங்கினேன்.
அதிர்ச்சிகள் பல காத்திருந்தன…
ஏற்றுக்கொள்ள முடியாத அதிர்ச்சிகள். நான் என் வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாய் கொண்டிருந்த நபிமார்களா இவர்கள்?
உதாரணத்துக்கு, பைபிள், நூஹ் (அலை) அவர்கள் குடிகாரராக இருந்ததாக குறிப்பிடுகிறது.  லூத் (அலை) மற்றும் தாவூத் (அலை) அவர்களையோ………… …..
(மிகவும் சென்சிடிவ் தகவல்கள் என்பதால் தவிர்க்கப்படுகிறது).
இந்த நபிமார்களின் நல்ல தன்மைகளையே பாதிரியார்கள் எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள். ஆனால் உள்ளே போய் படித்துப் பார்த்தால் என்னென்னவோ இருக்கிறது.
* நபிமார்கள் இறைவனின் நற்செய்தியை கொண்டு வந்தவர்கள் அல்லவா?
* அவர்கள் தானே நமக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும்?
* அவர்களைத்தானே நாம் வாழ்விற்கு எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும்?
ஆனால் இங்கே அவர்களே பெரும் தவறு செய்பவர்களாக இருக்கிறார்களே…இதை எப்படி என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்? எப்படி இவர்களை பார்த்து என் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும்?
புரியவில்லை. மிகுந்த அதிர்ச்சி. Old Testament முழுவதும் இப்படி பல முரண்பாடுகள். என் பாஸ்டரிடம் சென்று கேட்டேன். அதே பதில், program செய்யப்பட்ட பதில். எல்லா பாஸ்டர்களும் சொல்லுவார்களே,
“இது நம்பிக்கை சம்பந்தபட்ட விஷயம், கடவுளை உள்ளூர உணர வேண்டும், கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது”…
அதையேத்தான் அவரும் கூறினார். “சரி, நீ New Testament படி, அதுதான் ஜீசஸ் (அலை) பற்றி பேசுகிறது”.
சரியென்று “New Testament” டை படிக்க ஆரம்பித்தேன்.
இங்கே துவக்கத்திலேயே குழப்பம். ஏனென்றால், Mathew, Mark, Luke and John என்று இவற்றை எழுதியவர்கள் யார் என்று யாருக்கும் தெரியாது. இப்போது மேலும் குழப்பம்.
ஈசா (அலை) அவர்கள் மூவரில் ஒருவர், கடவுளின் மகன் என்றெல்லாம் சர்ச்களில் படித்திருக்கிறோமே, இங்கே “New Testament”ல், ஈசா(அலை) அப்படியெல்லாம் கூறவில்லையே? அதுமட்டுமல்லாமல் old Testament முழுவதும் ஒரே கடவுள், ஒரே கடவுள் என்றுதானே இருக்கிறது. இது இன்னும் முரண்பாடாக அல்லவா இருக்கிறது. இப்போது மேலும் மேலும் குழப்பம்…
என்ன செய்வது? மறுபடியும் பாஸ்டரிடம். இந்த முறையும் அதே பதில்.
“இது நம்பிக்கை சம்பந்த பட்ட விஷயம், நம்ப வேண்டும்”
பிறகு என் நண்பர் பைபிளை பற்றி நன்கு தெரிந்த தன் பேராசிரியர் ஒருவரிடம் என்னை அழைத்துச் சென்றார். அவர் கூறினார்,
“இங்கே பாருங்கள், பைபிள் பல காலங்களில் பல பேரால் மாற்றப்பட்டு வந்துள்ளது.  அதனால் இது perfect Book இல்லை. நம்பிக்கையால் தான் இந்த புத்தகம் பூரண படுத்தப்பட்டுள்ளது. இதை நம்பிக்கையால் தான் நம்புகிறார்கள். (This is not a textually perfect book. But this is the book perfected through faith)”
என்ன? இறைவன் நமக்கு அறிவைக் கொடுத்து, அதை உபயோகப்படுத்த வேண்டாம் என்று சொல்லுவானா?
அதற்கு நம்மை சிந்திக்கும் திறன் இல்லாமலேயே படைத்திருக்கலாமே?
என் பாட்டி என்னை முட்டாளாக வளர்க்கவில்லை. பல காலங்களில் மாற்றப்பட்ட ஒரு நூலை எப்படி நான் கடவுளின் வார்த்தையாக நம்ப முடியும்? இதை எப்படி வழிகாட்டியாக ஏற்றுக்கொள்ள முடியும்?  நிச்சயமாக எனக்கு இதில் உடன்பாடு இல்லை.
1982 மாடல் காரை ஒருவர் கொண்டுவந்து, “நம்பு இது லேட்டஸ்ட் மெர்சிடிஸ் கார். நீ நம்பிக்கையுடன் பார்த்தால் அது உனக்கு மெர்சிடிசாக தெரியும்” என்று ஒருவர் சொன்னால் எப்படி இருக்கும். அப்படித்தான் இருந்தது எனக்கு.
கிருத்துவத்தை விட்டு வெளியே வந்துவிட்டேன்.
சரி பைபிளில் தான் பதிலில்லை, மற்ற மதங்களில் தேடுவோம் என்று Judaism, Hinduism, Buddism, Taoism என்று எல்லா இசத்திலும் (ism) தேடினேன். மற்ற மதத்துக்காரர்களை பார்க்கும்போது நான் அவர்களிடம் விளக்கமெல்லாம் கேட்க மாட்டேன், ஒரே ஒரு கேள்வியைத் தவிர.
அது, உங்களிடம் உங்கள் மதம் பற்றிய புத்தகம் ஏதாவது இருக்கிறதா என்பது மட்டும்தான்.
ஏனென்றால் அவர்கள் பேசக் கூடாது, அவர்கள் புத்தகம் தான் பேச வேண்டும். அதுமட்டுமல்லாமல், “உங்கள் மதம் உண்மையென்றால் அதற்கு சான்றாக நீங்கள் எதையாவது எடுத்து வையுங்கள். இனிமேலும் நம்பிக்கையால் தான் இது உண்மை என்பது போன்ற வாதங்களை நம்ப நான் தயாரில்லை. ஆதாரத்தை எடுத்து வையுங்கள்”.
பகவத் கீதை முதற்கொண்டு பல நூல்களை படித்தேன். ஏன், மந்திரம் சூனியம் சம்பந்தப்பட்ட நூல்களைக் கூட படித்திருக்கிறேன். அதில் கூட உண்மையை தேடியிருக்கிறேன்.
நான் பார்த்தவரை எல்லா புத்தகங்களிலும் கடவுளைப் பற்றிய  பல கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவை ஒன்று கூட முழுமையாக அறிவுக்கு ஒத்துவரவில்லை.
நான் இஸ்லாமை கணக்கிலேயே கொள்ளவில்லை. ஏனென்றால் இஸ்லாம் மிகச்சிறிதே அறியப்பட்ட காலம் அது.
பலவித தேடல்களுக்கு பிறகு வெறுத்து போய் விட்டேன். பதினேழு வயதிருக்கும், கடவுளைப் பற்றிய தேடலை நிறுத்தி விட்டேன்.
இறைவன் மீது மிகுந்த கோபம். நான் அவனை அறிந்து கொள்ள வேண்டும் என்று தேடுகிறேன். ஆனால் அவன் எனக்கு எந்த ஒரு உதவியும் புரியவில்லை.
பின்னர் திசை மாறியது. பார்ட்டிகள், குடி என்று வாழ்க்கை மாறியது. ஒரு நாள் நானும் என் நண்பரும் குடிபோதையில் கார் ஒட்டிச் சென்றபோது பெரும் விபத்து. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். அப்போது ரோந்து வந்த அந்த அதிகாரி சொன்னார், “உன் மூலமாக கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார், அதனால் தான் நீ இப்போது உயிரோடு இருக்கிறாய்”
நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயதானவர் ஏதோ சொல்கிறார் என்று விட்டுவிட்டேன். நான் கடவுளை தேடினேன், அவன் எனக்கு உதவி புரியவில்லை என்றால் நான் என்ன செய்வது? இது என்னுடைய தவறில்லையே…
நாட்கள் சென்றன. அதுபோல மற்றுமொரு சம்பவம். இந்த சமயம் துப்பாக்கி முனையில் இருந்து தப்பினேன். இப்போது என் பாட்டி முன்னர் அந்த அதிகாரி சொன்ன அதே வார்த்தைகளை கூறினார், “உன் மூலமாக  கடவுள் ஏதோ செய்ய நினைக்கிறார்”
ஒருமுறை நான் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த போது, இஸ்லாமைப் பற்றிய ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. நூலின் பெயர் மறந்துவிட்டது. அதில்,
“முஸ்லிம்கள் பாலைவனத்தில் இருக்கிற ஒரு பெட்டியின் உள்ளே வாழ்கிற அல்லாஹ் என்ற “Moon God” டை வணங்குகிறவர்கள். முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தான், பெண்களை அடிமையாக நடத்துகிறவர்கள். அதுமட்டுமல்லாமல், முஸ்லிம் அல்லாத யாரைக்கண்டாலும் கொன்று விட அவர்களுக்கு அனுமதி உண்டு. அதற்கு பெயர் ஜிஹாத், அப்படி அவர்கள் செய்தால் அவர்களுக்கு சுவர்க்கமும், எழுபது கன்னிகளும் கிடைப்பார்கள்” என்று என்னென்னவோ இருந்தது.
அவ்வளவுதான், அப்படியே அந்த புத்தகத்தை எடுத்த இடத்திலேயே வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். “நல்ல வேலை தெற்கு கரோலினாவில் முஸ்லிம்கள் யாரையும் நான் பார்த்ததில்லை”
பிறகு ஒரு முஸ்லிமை சந்தித்தேன். அவர் என்னுடன் பள்ளியில் படித்தவர்தான். ஆனால் அவர் முஸ்லிமாக இருப்பார் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. அதற்கு காரணங்கள். ஒன்று, அவர்தான் ஆப்ரிக்க அமெரிக்கர் ஆயிற்றே, முஸ்லிம்கள் என்றால் அரேபியர்கள் என்று தானே அந்த புத்தகத்தில் போட்டிருந்தது.
ஒரு வெள்ளிகிழமை, நண்பர்களுடன் மதங்கள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, இந்த நண்பர் என் அருகில் வந்து,
“இஸ்லாமைப் பற்றி தெரியுமா?” என்று கேட்டார்..
“இஸ்லாமைப் பற்றி எல்லாம் எனக்கு தெரியும்” என்று நான் படித்தவை பற்றி கூறினேன்.
“So, இஸ்லாமைப்பற்றி என்ன நினைக்கிறாய்”
“நினைப்பதற்கு என்ன இருக்கிறது, நான் பார்த்த மதங்களிலேயே மோசமானது அதுதான்”
“உனக்கு தெரியுமா, நான் ஒரு முஸ்லிம்”
“நீ ஆப்ரிக்க அமெரிக்கன் அல்லவா?”
“ஆம், அதனால் என்ன?”
“முஸ்லிம்கள் என்றாலே அரேபியர்கள் தானே”
“என்ன?” ஆச்சர்யத்துடன் கேட்டார் அவர்.
“இங்கே பார், நான் ஒரு நல்ல முஸ்லிமல்ல. ஆனால், என்னால் உனக்கு சிலரை அறிமுகப்படுத்த முடியும். அவர்கள் உனக்கு இஸ்லாமைப் பற்றி தெளிவாக கூறுவார்கள். நான் இப்போது ஜூம்மாஹ்விற்கு போகிறேன். என்னுடன் நீயும் வா”
“ஜும்மாஹ் என்றால்?”
“ஞாயிற்றுகிழமை சர்ச்களில் நடக்குமே அதுபோன்றுதான். என்ன இங்கே நாற்காலிகள் கிடையாது” (அரங்கத்தில் சிரிப்பு)
“எங்கே இருக்கிறது மசூதி?”
அவர் கூறினார். அவர் சொன்ன அந்த இடம் என் தெருவில் தான் இருந்தது. அதற்கு பக்கத்தில் உள்ளே சர்ச்சில் தான் நான் மிசனரி பணிகளை செய்தேன். இத்தனை நாளாய் எனக்கு தெரியாது அங்கு மசூதி இருக்கிறதென்று.
அப்போது ஒருவர் வந்தார், அவர் தான் இமாம் என்று பிறகு தெரிந்தது. அருமையான மனிதர். பண்பாக பேசினார். என்னை உள்ளே அழைத்து சென்றார். அந்த ஹாலின் கடைசியில் ஓரு நாற்காலி கொடுத்து உட்கார சொன்னார். என் முன்னே பலரும் அமர்ந்திருக்கிறார்கள். எனக்கு பின்னாலோ ஒரு திரை, திரைக்கு அந்த பக்கம் பெண்கள் குரல் கேட்டது.
என்னைச் சுற்றி முஸ்லிம்கள், நடுவில் நான். “என்னை ஜிஹாத் செய்யப் போகிறார்களா  இது அதற்குண்டான செட்அப்பா” ஒருவித பயம்.
பின்னர் குத்பா ஆரம்பித்தது “இன்ன அல்ஹம்துலில்லாஹ் நஹ்மதுஹு” என்று ஆரம்பித்தார் இமாம்.
அவ்வளவுதான் பயம் அதிகரித்தது…
“அட கடவுளே, சரியாப் போச்சு, என்னைப் பார்த்து தான் பேசுகிறார். நிச்சயம் ஜிஹாத் தான் நடக்கபோகிறது”, வெளியேறி விடலாம் என்றாலும் என்னைச் சுற்றி மக்கள்.
அந்த இமாம் நல்ல மனிதர் மட்டுமல்ல, அறிவாளியும் கூட. குத்பாவை  ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கூறிக்கொண்டிருந்தார். எனக்கு புரிய வேண்டும் என்பதற்காகவா?, இல்லை அவர் எப்போதும் இப்படித்தான் உரை நிகழ்த்துவாரா?, தெரியவில்லை. ஆனால் எனக்காகவே நிகழ்த்தப்பட்ட ஒன்றாக எனக்கு தோன்றியது.
இன்று வரை நன்கு நினைவிருக்கிறது அந்த உரை. என் உள்ளத்தில் பெரும் பாதிப்பை ஏற்ப்படுத்திய ஒன்று அது. உரையின் தலைப்பு, “இறைவன் யாவரையும் மன்னிப்பான், இணைவைப்பவரை தவிர”. அதுமட்டுமல்லாமல், இப்ராஹீம் (அலை), மூசா (அலை) என்று பைபிளில் உள்ளே நபிமார்களின் பெயரை உச்சரித்தார். எனக்கு ஆச்சர்யம், இவர் எங்கிருந்து இதையெல்லாம் எடுத்தார்?
குத்பா முடிந்தவுடன் எல்லாரும் எழுந்து வரிசையாக நிற்க ஆரம்பித்தார்கள்.
“என்ன செய்யப் போகிறீர்கள்” என்று பக்கத்தில் உள்ளவரிடம் கேட்டேன்.
“தொழ போகிறோம்”
“யாரை”
“இறைவனை”
“எந்த இறைவன்?”
“உலகில் உள்ள அனைத்தையும் படைத்தானே அவனை. பைபிளில் கூறப்படுகிறதே அவனை”
என்னுடைய கடவுளைத்தான் இவர்களும் வணங்குகிறார்களா?. எனக்கு புரிய ஆரம்பித்தது.
தொழுகை ஆரம்பித்தது. குரானின் வசனங்கள் ஓதப்படுவது அழகாக இருந்தது, மனதை ஊடுருவியது.
சஜிதா செய்தார்கள். “ஆ, இதுதானே நான் பல புத்தகங்களில் படித்தது”. முஸ்லிம்களின் தொழுகை என்னை மிகவும் பாதித்தது. இது பிரார்த்தனை (Prayer) அல்ல, பிரார்த்தனை என்றால் கடவுளிடம் கேட்பது, ஆனால் இது வழிபாடு (Worship). இது தான் நான் இத்தனை நாளாய் எதிர்ப்பார்த்தது.
தொழுகை முடிந்தது. எனக்கு, என்னைப் பார்த்து மிக வெட்கமாய் இருந்தது (I am ashamed of myself). மற்ற மதத்து நூல்களையெல்லாம் தெளிவாக ஆராய்ந்தவன், இஸ்லாமைப் பற்றி மட்டும் ஒரு புத்தகத்தை வைத்து யூகித்து விட்டேனே. வெட்கமாய் இருந்தது.
தொழுகை முடிந்தவுடன் நேராக அந்த இமாமிடம் சென்றேன். முன்னர் அவரிடம் சிறிது கடுமையாக நடந்து கொண்டதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டேன். பின்னர் அவர் என்னிடம் இஸ்லாத்தைப் பற்றி விளக்க முயன்றார். ஆனால் நான் அவரிடம்,
“இல்லை இல்லை, எனக்கு விளக்கம் தேவையில்லை. உங்களிடம் உங்களுக்கென்று புத்தகம் ஏதாவது இருக்கிறதா?”
“ஆம் இருக்கிறது, அதற்கு பெயர் குர்ஆன்”
“அதை நான் படிக்கலாமா”
“நிச்சயமாக, ஆங்கில மொழிபெயர்ப்பு இருக்கிறது. அதை எடுத்துக்கொள்ளுங்கள்”
எடுத்துக்கொண்டேன். அன்று இரவே படிக்கத் தொடங்கினேன். முதல் சூரா, அல் பாத்திஹா, பைபிளில் இருப்பது போன்று கடவுளை துதிக்கும் அழகான வார்த்தைகள். மேற்கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.
அதே பெயர்கள். ஆம் அதே நபிமார்கள். ஆனால் பெரிய வித்தியாசம். இங்கே இந்த நபிமார்கள், தூதர்களுக்குண்டான தன்மையுடன் இருக்கிறார்கள். அவர்கள் கொண்டுவந்த இறைச்செய்திக்கேற்ப வாழ்ந்து காட்டிருக்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் நான் பின்பற்றுவதற்க்குரிய தகுதியைக் கொண்டிருக்கிறார்கள். நிச்சயமாக மனிதர்களுக்கு ஒரு நல்ல முன்னுதாரணம் இவர்கள்.
ஆர்வம் கூடிக்கொண்டே இருந்தது. ஈசா (அலை) அவர்களைப் பற்றி என்ன கூறுகிறது இந்த புத்தகம் என்று பார்க்க மிகுந்த ஆவல். சூரத்துல் அல் இம்ரான் போன்ற சூராக்களில் கூறப்பட்டிருந்த ஈசா (அலை) அவர்களது வரலாறானது நான் இதுவரை New Testament டில் படித்த கதைகளையெல்லாம் விட மிக அழகாக, தெளிவாக இருந்தது. என் மனதில் இருந்த ஈசா (அலை) இவர்தான்.
குரானை மூன்று நாட்களில் படித்து முடித்துவிட்டேன். ஆனால் முதல் இரவில் சூரத்துல் அல் இம்ரான் படித்த போதே என் மனதை இந்த புத்தகத்திற்கு அர்ப்பணித்துவிட்டேன்.
முஸ்லிம்கள் என்றால் யார்,  எப்படி முஸ்லிமாவது என்று கூட அப்போது சரியாக எனக்கு புரிந்திருக்கவில்லை.
ஆனால் இதைப் பின்பற்றுபவர்கள் போல நானும் ஆக வேண்டும். இந்த புத்தகத்தில் இருக்கும் நபிமார்களை போலத்தான் நானும் வாழவேண்டும். இந்த புத்தகம் வாழ்க்கைக்கு  வழிகாட்டி.
“இது தவறென்றால் சோதனைக்கு வையுங்கள், இது தவறென்றால் இதுபோன்ற ஒன்றை கொண்டுவாருங்கள்” என்று சவால்விடும் இதுபோன்ற ஒன்றை நான் இது வரை பார்த்ததில்லை.
கடவுளைப்பற்றிய அனைத்து விளக்கங்ககளும் அர்த்தமுள்ளதாக, லாஜிக்காக இருந்தன. குரானின் போதனைகள் நேரடியானவை, நேர்மையானவை.
அந்த இரவு என் மனதை முழுவதுமாக இஸ்லாத்திற்கு அர்ப்பணித்து விட்டேன். அழுதேன், அழுதேன், அழுதுக்  கொண்டே இருந்தேன். உண்மையைத் தேடி அலைந்து கொண்டிருந்தவன் நான். எங்கெல்லாமோ அலைந்து திரிந்தவன்.
ஆனால் அதுவோ என் தெருவிலேயே, என் அருகிலேயே இருந்திருக்கிறது.
திங்கட்கிழமை அந்த பள்ளிக்கு இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள என்ன செய்யவேண்டும் என்று கேட்க போனேன்.  அதுமட்டுமல்லாமல், இத்தனை நாளாய் நீங்களெல்லாம் எங்கிருந்தீர்கள்? என்றும் கேட்க வேண்டும். ஆனால் பள்ளியோ பூட்டியிருந்தது. ஜும்மாஹ் மற்றும் இஷா தொழுகைக்கு மட்டும்தான் திறப்பார்களாம். எனக்கு தெரியாது. பின்னர் அடுத்த ஜும்மாஹ்வில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன். அல்ஹம்துலில்லாஹ்…
இங்கு என் கதையை கூறுவதற்கு முக்கிய காரணம், என்னைப் போல எத்தனை பேர் இந்த உலகில் உண்மையைத் தேடி அலைகின்றனர் என்று பாருங்கள்.
நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 1998 ஆம் ஆண்டு மட்டுமே லட்சகணக்கில் இருந்திருக்க வேண்டும். அமெரிக்கா முழுவதும், கலிபோர்னியாவில், நியூயார்க்கில் என்று எங்கு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளுங்கள்.
என்னைப் போல் நிறைய பேர் இருக்கிறார்கள். உண்மையை மறைப்பது முஸ்லிம்களாகிய நமக்கு அழகல்ல. அதனால் தயவுகூர்ந்து உங்களுடன் இஸ்லாம் என்ற உண்மையை மறைத்து வைத்துக் கொள்ளாதீர்கள். என்னைப் போல பலருக்கும் அது தேவைப்படுகிறது.
உலகில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் நம்மிடம் தீர்வு உண்டு. இதை புரிந்து கொள்ளுங்கள்.
என் நண்பன் ஒருவன் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டு, அதை தீர்க்கக்கூடிய மருந்து எனக்கு கிடைத்து, அதை நான் அவனிடம் கொடுக்காமல் மறைத்தால் எப்படி இருக்கும்?
அதைத்தான் நம்மில் பலரும் செய்து கொண்டிருக்கிறோம். நம்மைச் சுற்றி பலரும் இணைவைத்தல் என்ற தீவிர நோயால் பாதிக்கப் பற்றிருக்கின்றனர். அறிகுறிகள் இல்லாத நோய் இது. நம்மிடம் அதற்கு இஸ்லாம் என்ற மருந்து இருந்தும் அதை நாம் மறைக்கிறோம், கொடுக்க மறுக்கிறோம்.
இங்கே நான் பேசிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இஸ்லாம் என்றால் என்னவென்று தெரியாமலேயே இறக்கின்றனர்.
தாவாஹ் பல வழிகளில் செய்யலாம். நம் அனைவராலும் முடிகிற ஒன்றென்றால், அது நாம் முஸ்லிமாக வாழ்ந்து காட்டுவதுதான். ஆம், அது ஒரு மிகச் சிறந்த தாவாஹ். நீங்கள் முஸ்லிமென்பதை மறைக்காதீர்கள். ஒரு உண்மையான முஸ்லிமாக வாழ்ந்து காட்டுங்கள். உங்கள் நற்பண்புகளுக்கு இஸ்லாம்தான் காரணம் என்று தெளிவாக புரிய வையுங்கள்.
என்னுடைய முக்கிய தாவாஹ் பணிகளில் ஒன்று என்றால் அது DVD project. அமெரிக்காவில் உள்ள எவரும் இஸ்லாமைப்பற்றி தெரியாமல் இருக்கக்கூடாது. இஸ்லாமைப் பற்றிய தகவல்களை டிவிடிக்களில் பதிந்து முஸ்லிமல்லாதவர்களுக்கு கொடுக்கிறோம். நிச்சயமாக டிவிடிக்களை பலரும் பார்ப்பார்கள். இப்போது florida பகுதியில் என் கவனத்தை செலுத்தி வருகிறேன்.
நூறு டிவிடிக்கள் தயாரிக்கிறோம் என்றால் அதில் இருபத்தைந்தை முஸ்லிம்கள் வாங்கக் கொடுப்போம். ஏனென்றால் அவர்களும் தங்களை தாவாஹ் பணியில் இணைத்துக் கொண்டது போலாகும்.
அல்ஹம்துலில்லாஹ்…இந்த செயல் திட்டத்தால் மாதம் இருவர் இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்டு வருகிறார்கள்.
நான் என் கதையை பொழுதுபோக்குக்காக சொல்லுவதில்லை. அதற்கு பின்னால் இருக்கும் செய்தியைத்தான் இதனால் சொல்ல விரும்புகிறேன்.
இப்போது நான் சொன்ன தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருந்தால் அந்த புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே. நான் சொல்லியதில் தவறேதும் இருந்தால் அது என்னுடைய அறியாமையால் ஏற்ப்பட்டது.
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமின்”
அல்ஹம்துலில்லாஹ்…
——————————————————————————————————————
இஸ்லாம், அன்றும் சரி இன்றும் சரி, மிக வேகமாய் பலரையும் தன்பால் ஈர்த்து வருகிதென்றால், அதற்கு பின்னால் சகோதரர் எவன்ஸ் போன்ற கோடிக்கணக்கான உண்மையான முஸ்லிம்களும் ஒரு காரணம்.  இறைவன் இவருக்கு மென்மேலும் கல்வி ஞானத்தையும், மன உறுதியையும், உடல் வலிமையையும் அளிப்பானாக…ஆமின்.
நீங்கள் அமெரிக்காவில் வாழக்கூடிய மாணவராக இருந்தால், சகோதரர் எவன்ஸ் அவர்கள் உங்கள் கல்லூரிக்கு சொற்ப்பொழிவாற்ற வர வேண்டும் என்ற விருப்பம் இருந்தால், நான் கீழ கொடுத்துள்ள அவரது வலைதளத்தில் அவரை தொடர்பு கொள்ளலாம். இன்ஷா அல்லாஹ்…
இறைவன் நம்மை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவானாக…ஆமின்
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…
மேலும் விவரங்களுக்கு சகோதரரின் இணையதளம் சென்று பார்வை இடலாமே!

No comments:

Post a Comment