Tuesday, February 19, 2013

R.S.S முழு நேர ஊழியர் வேலாயுதம் இஸ்லாத்தை தழுவினார்.


முஸ்லிம்களை காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம் முஸ்லிம்களின் தாடியை, தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது.

ஒரு இஸ்லாமிய RSS எதிர்ப்பாளனாக இருந்து இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன்.
வேலாயுதன் என்ற பிலால்.


அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள்.
 

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - முன்னுரை. 


"கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர்குல மாதவிக்குட்டியை பறையனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது. 

ஆனால் இஸ்லாம் என்ற கோட்பாட்டின் கீழ் நாங்கள் (பிலாலும், சுரையாவும்) இணைந்ததால் எங்களுக்குள்ளே பேச வாய்ப்பு கிடைத்தது. 

ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்: நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. 

நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ள இஸ்லாமே நன்மருந்து. தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வாருங்கள்." - வேலாயுதன் என்ற பிலால். 

முன்னாள் தாழ்த்தப்பட்ட தலித் சமூகத்தைச் சார்ந்த வேலாயுதனின் வாசகங்கள் இவை. 

ஆர் எஸ் எஸ்ஸில் முழு நேர ஊழியனாக பணியாற்றியதிலிருந்து எர்ணாகுளம் கவுன்சிலர் பதவிக்கு பாஜக வின் சார்பாக போட்டியிட்டது வரை முழுமையாக ஒரு இஸ்லாமிய எதிர்ப்பாளனாக இருந்து

இன்று ஒரு முஸ்லிமாக இருக்கும் வேலாயுதன் தனது வாழ்க்கைப்பயணத்தில் தான் சந்தித்த சில முக்கிய கால கட்டங்களைக் குறித்து மனம் திறக்கும் நூல் இது. 

ஆரம்பத்தில் வறுமை என்னும் அரக்கனின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து சின்னாபின்னமாகிப் போன தனது இளம் வயது குடும்ப வாழ்வைக் குறித்து அவர் விவரிக்கும் பொழுது நமது கண்களில் கண்ணீர் திரைமாலை இடுகிறது. 

பின்னர் ஆர் எஸ் எஸ்ஸின் வெளிப்புற செயல்பாடுகளால் கவரப்பட்டு ஆர் எஸ் எஸ்ஸில் இணைந்த காலகட்டத்திலும் பின்னர் அதனுள் தீவிரமாக செயல்பட்ட காலகட்டத்திலும் அவர் ஆர் எஸ் எஸ்ஸை நேசித்த வீரியத்தைக் குறிப்பிடும் போது கண்களில் நிற்கின்றார். 

ஆர் எஸ் எஸ்ஸிற்காக ஒருவரை கொலை செய்ய போய் அதில் காலை இழக்க வேண்டிய சூழ்நிலை வந்தபோது தன்னை கைகழுவிய ஆர் எஸ் எஸ், அதன் சுயரூபத்தை தொடர்ந்த நாட்களில் அனுபவப்பட நேர்ந்த போது தான் அடைந்த துன்பங்களை அவர் விவரிக்கும் பொழுது நெஞ்சடைக்கிறது. 

பல்வேறு விதமான உண்மைகளை தங்களது படைப்புகளின் மூலம் வெளிக்கொணர்ந்த "இலக்கியச்சோலை" வெளியீட்டகத்தார் வேலாயுதன் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களின் மூலம் மீண்டும் சில உண்மைகளை இக்கைப்பிரதி மூலம் வெளிக் கொணர்ந்திருக்கின்றனர். 

தான் அனுபவித்த அனுபவங்களை தன் சக தலித் சகோதரர்களுக்கும், உலகுக்கும் கொண்டு சேர்க்க விரும்பும் வேலாயுதன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி ,

"இலக்கியச்சோலை" வெளியீட்டகத்தார் பல்வேறு சிரமங்களுடன் கேரளத்திற்கு நேரடியாக சென்று வேலாயுதன் அவர்களிடமிருந்து தொகுத்த இக்கைப்பிரதியை வலையுலக அன்பர்களும் அறிந்து கொள்ள இங்கு வெளியிடுகின்றோம். 

நன்றி: இலக்கியச்சோலை. 

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம். 
ஆர்.எஸ்.எஸ் முழு நேர ஊழியனான வேலாயுதன் பிலால். 
ஆனது........ 


ஒர் ஆர்.எஸ்.எஸ். காரனாக இருந்த வேலாயுதன் என்ற நான் பிலாலானதை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். 

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் குன்னத்துக்காடு பஞ்சாயத்தில் பிணர்முண்டா என்ற கிராமத்தில் பிறந்தேன்.

எனது தகப்பனார் பெயர் ஐயப்பன். தாய் காளி. 1962-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10-ம் நாள் என்னுடைய பிறந்ததினம். எனது தகப்பாரின் மூன்று திருமணத்தில் 7 குழந்தைகள். அண்ணன் குமாரன், தம்பி சுரேஷ், சகோதரிகள் அம்மிணி, கிரிஜா, பிந்து மஞ்ஜுளா பின்னர் நான். 

நானும் தங்கை அம்மிணியும் ஒரே தாயின் பிள்ளைகள். தந்தை ஒரு செங்கல் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். அம்மா விவசாயம் செய்யக் கூடியவளாகவும் இருந்தாள். 

எனக்குப் பதினோரு வயது இருக்கும்போது......., 

எனது தந்தை வேலைக்குச் சென்றால் திரும்புவதற்கு சில நாட்கள் ஆகும். 

கோலஞ்சேரிக்குப் பக்கத்தில் கடையிருப்பு என்ற இடத்தில் கொன்னனின் வீட்டில்தான் எனது தந்தை தங்குவார். எனது தந்தை அந்த [கொன்னனின்]வீட்டில் தங்குவதில் எனது அம்மாவிற்கு சில சந்தேகங்கள் எழுந்தன. அந்த சந்தேகங்கள் சில நாட்களுக்குப் பிறகு நிஜங்களாயின. 

எனது அப்பாவிற்கும் கொன்னனின் மனைவிக்கும் சில தொடர்புகள் ஏற்பட்டு அது திருமணம் வரை சென்று முடிந்தது. 
அப்பா தினசரி இரவு குடித்து விட்டு வந்து அம்மாவை சித்ரவதை செய்வது தொடர்ந்து கொண்டே இருந்தது. 

அப்பாவின் சித்ரவதை தாங்க முடியாமல் கடைசியில் அது விவாகரத்து வரை சென்றது. எனது கண்முன்னே வைத்து அம்மா தன் கழுத்தில் தொங்கிய தாலியை அறுத்து அப்பாவின் முகத்தில் விட்டெறிந்தாள். இது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வாக அமைந்து விட்டது. 

எனது தங்கை அம்மிணியையும் அழைத்துக் கொண்டு, அம்மா வீட்டை விட்டு வெளியேறினாள். அம்மாவுடன் செல்வதற்கு எனது மனம் அனுமதிக்கவில்லை. நான் எனது அப்பாவின் அம்மாவுடன் எனது சிறு வயது வாழ்க்கையைக் கழித்தேன். 

அம்மா வீட்டை விட்டுப்போன இரண்டாவது வாரத்தில் அப்பா புதிய மனைவியை அழைத்து வந்து வீட்டில் குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டார். அப்போது நான் நான்காம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். 

உணவுக்காக மேல் ஜாதி இனத்தைச் சார்ந்த தேவர்களின் வீட்டு மனையை மிதிப்பதற்குக்கூட எங்களுக்கு அனுமதியில்லை. ஏனென்றால் நான் தாழ்ந்த இனத்தைச் சேர்ந்தவன். 

பசி பொறுக்க முடியாமல் நானும் எனது பாட்டியுமாக [அப்பாவின் அம்மா] முஸ்லிம்கள் வீட்டில் ஏதாவது திருமணம் மற்றும் சடங்குகள் நடந்தால் அங்கு செல்வோம். அவர்கள் சாப்பிட்டுவிட்டு வெளியே வீசுகின்ற அந்த எச்சில் மாமிசத்திற்காக நாங்கள் காத்து நிற்போம். 

இந்த எச்சிலை சாப்பிடுவதற்காக காகமும் நாயும் எங்களது நண்பர்களாக அங்கே நின்று கொண்டிருக்கும். எச்சில் இலையை அப்படியே எடுத்து அவர்கள் கடித்துத் துப்பின எலும்பில் ஏதாவது மாமிச துண்டுகள் இருக்கிறதா என்று ஆவலோடு எடுத்து, இருப்பதை சந்தோஷமாக சாப்பிட்டுவிட்டு மீதியை அப்படியே எடுத்து எனது பாட்டியின் மடியில் கட்டி சந்தோஷமாக வீட்டிற்கு எடுத்துச் செல்வோம். 

அன்று மிகவும் சந்தோமான நாளாக இருக்கும். இரவு சப்பாடு கிடைத்துவிட்டதே என்ற சந்தோஷம் தான். எச்சில் இல்லாத நல்ல சாப்பாடு கிடைக்காதா? என்று நாங்கள் ஆவலுடன் இருந்த நாட்கள் பலப்பல. 

விடிந்தவுடன் நானும்,எனது பாட்டியும் சாப்பாட்டிற்காக பல இல்லங்கள் ஏறி இறங்குவோம். 

அதிகமாக முஸ்லிம் வீடுகளில் இருந்துதான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைக்கும். நோன்பு நாட்களில்தான் எங்களுக்கு திருப்தியான சாப்பாடு கிடைத்தது. 

சாப்பாட்டிற்காக வீடு வீடாக செல்லும்போது எனது பள்ளி நண்பர்களின் வீட்டை அடையும் போது அவர்கள் என்னைப் பார்த்து விடாமல் நான் மறைந்து நின்று பாட்டியை மட்டும் அனுப்பிவிடுவேன். 

6-ம் வகுப்பு வரை எனது படிப்பு நீடித்தது. பள்ளிக்கு செல்வதற்கு அப்பா கட்டாயப்படுத்தினதும் கிடையாது. பள்ளியில் படிக்கின்ற காலத்தில்,சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அப்பா என்னை கல் வெட்டுகின்ற வேலைக்கு அழைத்துச் செல்வார். அப்பாவிற்கு எடுபிடியாக வேலை செய்வேன். காலை 10 மணி ஆகும் போது நல்ல கிழங்கும்,சுண்டல் கடலையும் கிடைக்கும். அதன் சுவை தனி ருசிதான். மதிய நேரம் வீட்டில் இருந்து கொண்டுவந்த சோற்றை சாப்பிடுவேன். மாலைவேளையில் நல்ல ஒரு டீ கிடைக்கும். 

இப்படியாக வேலைக்குச் சென்றதனால் எனது படிப்பும் அத்தோடு முடிந்து போனது. இப்படி நான்கு வருடம் அப்பாவுடன் வேலை பார்த்து எனது மழலைப் பருவத்தைக் கழித்தேன். 

வேலை செய்து திரும்பும்போது அப்பா என்னையும் அழைத்துக்கொண்டு சாராயக் கடைக்குச் செல்வார். அப்பா இரண்டு லிட்டர் சாராயத்தை அருந்துவார். நான் கிழங்கும் மீனும் சாப்பிடுவேன். 

இப்படி சாராயக் கடைக்குச் சென்றுச் சென்று சில நாட்களில்அப்பா கையாலேயே எனக்கு சாராயம் குடிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சந்தோஷமாக நான் பயன்படுத்தினேன். அன்று இரவு சாராய மந்தத்தால் நிம்மதியாக தூங்கினேன். 

இவ்வாறிருக்க அப்பாவுடன் வேலை செய்வதற்கு எனக்கு கண்ணியக்குறைவாக இருந்தது. சொந்தமாக வேலை பார்ப்பதற்காக நான் ஊரிலிருந்து அதிகாலையில் புறப்பட்டுவிடுவேன். 

அங்கிருந்து நான் ராமபுரம் என்ற இடத்தைச் சென்றடைந்தேன். அங்கு கொச்சுவர்கிச்சன் என்ற ஒருவரின் வீட்டில் வேலை பார்த்து வந்தேன். இரவு வேளையில் ஒரு சாக்கை விரித்து விட்டு வராண்டாவில் தான் தூங்குவேன். எனது முதலாளி கொச்சுவர்கிச்சன் ஒரு கிறிஸ்தவராக இருந்தார். 

அவர் அடிக்கடி என்னிடம் "வேலாயுதா நீ ஒரு கிறிஸ்தவனாகி விடு; நல்ல ஒரு கிறிஸ்தவப் பொண்ணை உனக்குத் திருமணம் செய்து தருகிறேன் என்றெல்லாம் சொல்வார்". அதற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. 

காரணம் அந்த ஊரில் ஏற்கனவே என் இனத்தைச் சார்ந்த தலித் மக்கள் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இருந்தார்கள். இந்தத் தலித் மக்களை கிறிஸ்தவர்கள் மிக மோசமாகத்தான் நடத்தி வந்தார்கள். தலித் கிறிஸ்தவர்கள் என்ற கண்ணோட்டத்தில்தான் அவர்களைப் பார்த்தார்கள். 

கிறிஸ்தவனாக மாறினால் எனக்கும் இந்த நிலைதான் என்ற அச்சத்தால் தான் நான் கிறிஸ்தவனாக மாறவில்லை. 


மாட்டுச் சாணம் சுமப்பதுதான் எனக்கு அங்கு முக்கிய வேலையாக இருந்தது. சில நாட்கள் அங்கு தங்கிவிட்டு என் சொந்த ஊருக்குத் திரும்பிவிட்டேன். இப்போது நான் ஒரு இளைஞனாக மாறியிருந்தேன். 

இந்த வாலிப பருவத்தில் அம்மாவைப் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசை என்னுள் எழுந்தது. நான் மனிதனாகி விட்டதால் அப்பாவும் ஒன்றும் சொல்ல மாட்டார் என்று நினைத்து வீட்டிற்குச் சென்றேன். 

அங்கு சென்ற பிறகுதான் தெரிகிறது அம்மா வேறு திருமணம் செய்து விட்டாள் என்று. என் ஆசைகளும் கனவுகளும் அத்தோடு உடைந்துபோயின. 

அம்மாவின் சொந்த இடத்தில் ஒரு குடிசையில் நானும் அம்மாவும் என் தங்கை அம்மிணியுமாக சந்தோஷமாக இனிவரும் நாட்கள் வாழலாம் என்று நினைத்தேன். எனது ஆசை மண்ணாகிப்போனது. ஒரு போதும் மறக்க முடியாத ஒரு கவலையாக எனது வாழ்வில் அது நின்று நிலைத்தது. 

அம்மாவை இழந்த எனக்கு ஒரே அறுதலாக என் தங்கை மட்டும் மனதில் தென்பட்டாள். உடனே நான் என் அன்புத் தங்கையைத் தேட ஆரம்பித்தேன். 

அம்மாவிடம் விசாரித்த போது தங்கையை எனது அம்மாவின் தம்பி வீட்டில் அதாவது எனது மாமா வீட்டில் விட்டு விட்டதாக அம்மா சொன்னாள். மாமா எங்கு தங்கியிருக்கிறார் என்று தெரியாமல் அலைந்து ஒரு விதமாக வீட்டைக் கண்டு பிடித்தேன். 

அது ஒரு வாடகை வீடாக இருந்தது. நான் சென்றடைந்தபோது மாமா இல்லை.அத்தையிடம் விசாரித்தபோது தங்கை வெளியில் சென்றிருப்பதாக சொன்னார்கள். வீட்டை விட்டு வெளியே வந்தபோது அம்மிணி வேலைக்குச் சென்றிருப்பதாகப் பக்கத்து வீட்டில் உள்ள ஒரு முஸ்லிம் பெண் என்னிடம் சொன்னாள். அங்கே ஒரு டீ கடை இருக்கிறது. அங்கு உன் தங்கையை நல்லா வேலை வாங்குகிறார்கள் என்று அப்பெண்மணி சொன்னாள். 

நான் அந்த டீ கடை பக்கம் விரைந்து சென்றேன். அங்கு சென்று பார்த்த போது எனது மனம் திடுக்கிட்டுப்போனது. எனது தங்கையா இது? அந்த டீ கடையின் பின்வாசலில் ஆட்கள் சாப்பிட்டுவிட்டு போடுகின்ற எச்சில் இலைகளுக்கிடையில் எனது தங்கையின் வாடிய முகம் தெரிந்தது. 

அங்கு அவள் சகிக்க முடியாதத் தோற்றத்தில் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தாள். இதைப் பார்த்தபோது எங்கேனும் அமர்ந்து அழ வேண்டும் போல் இருந்தது. 

உடனே நான் அவளை அங்கிருந்து அழைத்துவந்தேன். கை முழுவதும் சொறி பிடித்து, தலை முழுவதும் புண்ணாகவும் அந்தப் புண்களுக்கும் மேலாக பேன் ஊரிக்கொண்டும் இருந்தது. 

எனது 12 வயதான தங்கையைப் பார்ப்பதற்கு எனக்கு சகிக்கவில்லை. கொஞ்சம்கூட ஈவிரக்கமில்லாமல் என் இளம் தங்கையை படாதபாடு படுத்தியிருக்கிறார் எனது அம்மாவின் வீட்டார்கள். அவளை ஒரு குளத்தில் குளிக்கச் செய்து அங்கிருந்து வீட்டிற்கு அழைத்துச் சென்றேன். 

அம்மாவோ வேறு திருமணம் முடித்துவிட்டாள்; அப்பாவிற்கோ புது மனைவி; எனது தங்கையின் நிலைமையோ அந்தோ பரிதாபம். இவற்றையெல்லாம் பார்த்து நொந்த மனதோடு வீட்டைச் சென்றடைந்தேன். 

இரண்டாவது அம்மாவிடம் எனது தங்கையை விடுவற்கு எனது மனம் இடம் கொடுக்கவில்லை. எனது அத்தை அவளுக்கு இழைத்த கொடுமையை அவள் திரும்பவும் அனுபவிக்க வேண்டுமா? 

அப்படியிருக்க என்னிடம் மிகவும் அன்பு செலுத்துகின்ற அப்பாவின் தங்கை ஒருத்தி இருந்தாள். அவளின் பெயர் குஞ்ஞாளி. எனது தங்கையை குஞ்ஞாளியின் வீட்டில் விட்டேன். 

நான் சம்பாதிப்பதை எனது தங்கைக்காக சேகரித்து வைக்காலானேன். அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுப்பதுதான் இலட்சியமாக இருந்தது. இப்படிச் சிறிது காலம் சென்றது. 

என் தங்கை பருவமடைந்தாள். குஞ்ஞாளி வீட்டில் அவளை விட்டு ஒரு வருடம் கடந்து விட்டது. இனி அவளை அங்கு விடுவது சரியல்ல என்று எனக்குத் தோன்றியது. அப்பாவின் சம்மதத்தோடு நான் தங்கையை வீட்டிற்கு அழைத்து வந்து எனது சித்தியிடம் விட்டேன். அப்போது சித்தி நாலாவது பிள்ளையைப் பெற்றெடுத்தாள். 

ஒரு விதமாக எனது தங்கை 17 வயதை அடைந்தபோது, நான் சம்பாதித்ததின் மூலம் மூன்று பவன் நகையும் ஆயிரம் ரூபாய் வரதட்சணையும் கொடுத்து எனது தங்கையின் திருமணத்தை நடத்தி முடித்தேன். 

அம்மாவிடம் சென்று திருமணத்திற்காக அழைத்தேன். அம்மாவோ அவள் பெற்ற பிள்ளையின் திருமணத்திற்கு வரவே இல்லை. புது கணவனும் பிள்ளையுமாக அவள் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தாள். 

சொந்தம் என்று சொல்லிக்கொள்ள எனக்கு இருந்த ஒரே சொத்து எனது தங்கை. தங்கையை ஒரு மாதத்திற்கு ஒரு முறை சென்று பார்த்து வருவேன். என்னால் முடிந்தளவு பொருட்களை வாங்கிச் செல்வேன். என் தங்கையைப் பார்த்துவிட்டு வரும்போது தான் எனது மனதுக்கு ஒரு நிம்மதி. மூன்று பிள்ளைகளைப் பெற்று அவள் சந்தோஷமாக வாழ்ந்து வந்தாள். நான் தனியாக இருந்தேன்

இதன் பிறகுதான் எனது முழுக் கவனமும் ஆர் எஸ் எஸ் மீது சென்றது. ஆர்.எஸ்.எஸ். ன் பணியில் நான் தனியொரு சுகத்தைக் கண்டேன். கல் வெட்டும் தொழில் முடிந்தால் முழு கவனமும் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காகத்தான். 

சிறு பருவத்தில் நான் ஊரில் கோவிலுக்குச் சென்றுவிட்டு வெளியே வரும் போது சில இளைஞர்கள் வெளியில் நின்று
“ இந்துக்களெல்லாம் ஒன்று; இந்து நடைமுறை ஒன்றாகும்; “ என்று பாடுவர். இவர்கள்தான் இந்த ஆர்.எஸ்.எஸ் காரர்களா? என்று எனது சிறு வயதில் நான் பார்த்தவற்றை வைத்துக் கணித்துக் கொள்வேன். 

ஒரு கும்பலாக கோவிலுக்கு வெளியே இருந்து ஒரு நபர் சொல்லிக்கொடுக்க மற்றவர்களெல்லாம் இணைந்து பாடுவதும், கோவிலில் வேறு சில வணக்கங்களில் ஈடுபடுவதும்தான் என்னை அந்த அமைப்பில் ஈர்த்த்து. சொந்த பந்தம் எதுவுமில்லாத எனக்கு ஆர்.எஸ்.எஸ்.ஒரு சொந்தமாக மாறியது. 

அதற்காக கடுமையாக உழைக்க நான் உறுதி பூண்டேன். 

எனது நாடு முஸ்லிம்கள் அதிகமாக வாழக்கூடிய ஒரு நாடாகும்; முஸ்லிம்கள் இந்த நாட்டின் கொள்ளைக்காரர்கள்; குழப்பக்காரர்கள்; கோவில்களை இடிக்ககூடியவர்கள்; என்றெல்லாம் அவர்கள் பாடம் சொல்லித்தந்தார்கள். 

இதையெல்லாம் கேட்ட எனக்கு அவர்களோடு ஒரு விதமான நெருக்கம் ஏற்பட்டது. அவர்களது சாகாவிலும் நான் கலந்து கொண்டேன். ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் சாகாவில் கலந்து கொள்வேன். 

அந்த ஒரு மணி நேரத்தில் இரண்டு விதமான பயிற்சிகள் தருவார்கள். மனதைக் கட்டுப்படுத்துவதற்கான பயற்சியும், உடல் பயற்சியும் தருவார்கள். சவர்ணர் என்ற இனத்தைச் சார்ந்தவர், தாழ்த்தப்பட்ட என்னைப் போன்றவர்களுக்குத்தான் பயற்சிகள் தருவார். இவர்களின் இயக்கத்திற்கு தாழ்த்தப்பட்ட நாங்கள் நன்றாகப் பயன்பட்டோம். 

இந்தப் பயற்சிகளைப் பெறும் பொழுது ஆர்.எஸ்.எஸ். மீது எங்களுக்கு ஆழமான அழுத்தமான பிடிப்பு ஏற்படும். 

இந்தப் பயற்சியைப் பெறுபவர்கள் தங்களை முழுமையாக ஆர்.எஸ்.எஸ். ல் இணைத்துக் கொள்வார்கள். 

இந்த அமைப்பில் சேர்ந்த உடனேயே கிறிஸ்தவர்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பு உண்டாயிற்று. முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் இவர்களின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்தியாவிற்கெதிரானதென்று எங்களை நம்பவைத்தார்கள். அது முதல் முஸ்லிம்களையும், கிறிஸ்தவர்களையும் எதிரிகளாகவே பார்த்தேன். 

ஆர்.எஸ்.எஸ். காரர்கள் முதலில் முஸ்லிம்களுக்கெதிராக எடுத்து வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால், 

* நாமெல்லாம் கிழக்குப் பக்கம் நின்று கடவுளை வணங்கும் போது, முஸ்லிம்கள் மேற்குப் பக்கம் நோக்கித் தொழுகிறார்கள். 

* நாம் கோமாதாவை[பசுவை] சாப்பிடக்கூடாது என்றால் அவர்கள் சாப்பிடுகிறார்கள். 

* நாம் வலது பக்கம் வேட்டி கட்டினால் அவர்கள் இடது பக்கமாக வேட்டியைக் கட்டுகிறார்கள். 

மொத்தத்தில் முஸ்லிம்கள் இந்து ஆச்சாரங்களுக்கு எதிராவே தங்களது வழ்க்கையை ஓட்டுகிறார்கள். இந்துக்களாகிய நாம் தான் இந்த நாட்டுக்குச் சொந்தக்காரர்கள். 


ஆனால் இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட நான் ஒரு பகுதியல்ல என்ற விவரம் எனக்குத் தெரியாது. 

இந்து என்ற மதத்தில் தாழ்த்தப்பட்ட எனக்கு எந்த மதிப்பும் எந்த உரிமையும் இல்லை. ஒரிரு சாதியினரும், பிராமணர்களும் தான் இந்து மதத்திற்குச் சொந்தக்காரர்கள் என்ற விவரம் அப்போது எனக்குத் தெரியாது. 

இந்து மதத்திற்காக உயிரை அற்பணிக்க இவர்கள் மூளைச் சலவைச் செய்து தாழ்த்தப்பட்ட எங்களை பயன்படுத்திக் கொள்வார்கள். இதையெல்லாம் தெரியாமல் அப்போது நான் முழுநேர ஊழியனாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணியாற்றி வந்தேன். 

இவர்கள் திப்பு சுல்தானைப் பற்றி ஒரு அபாண்டமான பொய் வரலாற்றைக் கூறுவார்கள். 

திப்பு போர் செய்யும் போது நமது மதத்தின் ஆண்களையெல்லாம் வெட்டி வீழ்த்திவிட்டு நம் சகோதரிகளான இந்துப் பெண்களைச் சிறை வைத்து ஆசை தீர கற்பழிப்பான். 

ஆலுவாமணிப்புரத்தைச் சேர்ந்த சிவனின் அனுக்கிரகத்தால் நமக்கு அப்போது அதிக நஷ்டம் ஏற்படவில்லை. என்றெல்லாம் வெறுப்பூட்டும் பொய்களை எங்களுக்குச் சொல்லித் தருவார்கள். 

இதையெல்லாம் இதயத்தில் சுமந்த என்னைப் போன்றவர்கள் முஸ்லிம்களை கடுமையாக வெறுத்தோம்; எதிர்த்தோம்; அழிக்க ஆசை கொண்டோம். 

முஸ்லிம்களின் தாடியைக் கண்டால் வெறுப்பு; அவர்களின் தோற்றத்தைக் கண்டால் வெறுப்பு; அவர்களை முழு உருவத்தில் காணும் போது கடித்துக் குதறிவிடலாம் என்ற எண்ணம். அதிலிருந்து முஸ்லிம்களை எதிர்ப்பதும் அவர்களுக்கெதிராகப் பிரச்சாரம் செய்வதும்தான் எனது முழுநேர தொழிலாக மாறியது. 


அப்போது ஒப்பந்த ஊழியர்களின் சங்கம்[contract workers sangh] என்ற அமைப்பு ஆர்.எஸ்.எஸ்ஸின் கீழ் உருவானது. 

இந்த ஒப்பந்த ஊழியர்களின் சங்கத்தின் செயலராக நான் வேலை பார்த்து வந்தேன். மேடைப் பேச்சுக்கு தகுதியானவன் என்றதால்தான் எனக்கு அந்தப் பதவி கிடைத்தது. அந்த சமயத்தில் எங்களது எதிரியாக CITU இருந்தது. அதற்கெதிராகப் போராடிட நாங்கள் தீர்மானித்தோம். குடிலில் பாஸ்கர மேனோன் என்பவர் CITU என்ற தொழிற் சங்கத்தின் தலைவர். 

இந்த இரண்டு அமைப்பைச் சேர்ந்தவர்களும் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவர்கள். சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர் [அதாவது ஆர்.எஸ்.எஸ். காரர்கள்] இந்தச் சண்டைகளில் கலந்து கொள்ளமாட்டார்கள். 
எங்களைத் தூண்டிவிட்டு விட்டு இவர்கள் அமர்ந்திருப்பார்கள். 

சொகுசாக வாழவேண்டும் என்ற சுயநலவாதிகளாக இருந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களான சவர்ணர் என்ற மேல் ஜாதிக்காரர்கள். 

இவற்றையெல்லாம் அறியாமல் ஏதோ இந்து விடுதலைப் போராட்டம் என்ற நினைப்பில் மூடத்தனமாக நான் இயக்கத்துக்காக என்னை முழுமையாகத் தந்து கொண்டிருந்தேன். 


ஒரு நாள்,………… 

வேணுகோபாலன் நம்பியார் என்ற எங்களது BMS தலைவன் [இது ஆர்.எஸ்.எஸ்ஸின் தொழிலாளர் பிரிவு]என்னிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தார். CITU வைச் சார்ந்த தங்கப்பன் என்ற நபரை கொலை செய்யவேண்டும் என்பதுதான் அந்தப் பொறுப்பு. 

பெரும்படம் என்ற இடத்தைச் சேர்ந்த பிரகாசன், சித்திரப்புழையில் உள்ள ப்ரதீப்குமார், தலைவர் வேணுகோபாலன் நம்பியார் இவர்கள் எல்லாம் சேர்ந்து [தங்கப்பனை கொல்வதற்கு] ஒரு இரவு இரகசியத் திட்டம் தீட்டினோம். 

அடுத்த நாள் காலையில் தங்கப்பனின் எல்லா அசைவுகளையும் நாங்கள் கண்காணித்தோம். இரவில் தங்கப்பனை கொலை செய்ய வேண்டும் என்றுதான் தலைவரது கட்டளை. 

சூரியன் மறையும் நேரத்தில்தான் தங்கப்பன் வீட்டிற்குச் செல்வான். இரவு நேரத்தில் தங்கப்பன் ஸ்கூட்டரில் வருவதை பார்த்தோம். அம்பல மேட்டில் உள்ள ரிபனரி வழியாக HOC க்கு சமீபமுள்ள சித்திரப்புழை பாலத்தில் ஸ்கூட்டர் வந்து கொண்டிருந்தது. 

அருகில் வந்ததும் தங்கப்பனை உருட்டுக் கட்டை கொண்டு தலையில் அடித்தேன். பிரகாசன் கத்தியை உருவி ஒரு குத்து குத்திய அதே மாத்திரத்தில் திடீரென ஒரு பஸ் எங்களது முன்னில் வந்து நின்றது. உடனே அங்கிருந்து நாங்கள் ஓடினோம். திரும்பி BMS ஆபீசுக்கு செல்ல முடியாமல் கலகலப்பானதும் சிறிது நாள் நாங்கள் தலை மறைவாக வாழ்தோம். 

சில நாட்கள் கழித்து திரும்பவும் BMS க்கும், CITU க்கும் சண்டைகள் உருவானது. நான் BMS, RSS தொழிற்சங்கத்திற்காக CITU பார்ட்டியோடு போராட வேண்டி வந்தது. 

இரு பார்ட்டிகளுக்கும் சண்டைகள் தொடங்கிற்று. இந்தச் சண்டைகளுக்கும், துன்பங்களுக்கும் இரையானேன். 

இந்தப் போரில் எனது ஒரு கால் முறிந்து தொங்கியது. இரத்தம் மடமடவென கொட்டிக்கொண்டிருந்தது. 

போலீஸ் சம்பவ இடத்திற்கு வந்ததும் நாங்கள் ஓடி தலைமறைவாக முற்பட்டோம். ஆனால் கொஞ்சம் கூட ஈவு இரக்கமில்லாமல் முறிந்து தொங்கும் எனது ஒரு காலையும், வடிகின்ற இரத்ததையும் பொருட்படுத்தாமல் போலீஸ் என்னைக் கடுமையாகத் தாக்கியது. 

இவ்வளவு துன்பங்களையும் அனுபவித்த பிறகு நான் தொங்குகின்ற காலோடு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன். சிறிது காலம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தேன். 

இத்தனை துன்பங்களுக்குப் பிறகும் மருத்துவமனையில் நான் இருக்கும் பொழுது ஒரு ஆர்.எஸ்.எஸ். காரர்கூட என்னை வந்து சந்திக்கவே இல்லை. 

ஆர்.எஸ்.எஸ்ஸின் திட்டத்தின் கீழ் நடந்த சண்டையில் மீன் விற்று தனது வாழ்க்கையை ஓட்டுகின்ற தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த உண்ணி கிருஷ்ணன் ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக தனது உயிரை இழந்தான். அவனது இறுதி சடங்குகளில் பங்கெடுப்பதற்குக் கூட எனக்கு முடியாமல் போயிற்று. 

எங்களை வெறியூட்டி களத்தில் இறக்கிய நம்பியாரின் கூட்டத்திற்கோ எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை. எங்களுக்கு ஊக்கம் கொடுத்துவிட்டு அவர்கள் தப்பித்துக் கொண்டார்கள். 

40 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். இந்தமருத்துவமனை வாழ்க்கையில் எனக்கு ஒரு உற்ற துணையாக ஒருவள் இருந்தாள். அவள் வேறு யாருமில்லை நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் சாகா பயற்சிப் எடுக்கும் பொழுது பக்கத்தில் சாந்தா என்ற ஒரு பெண்ணுடன் பழகிவந்தேன். அந்தப் பழக்கம் காதலாக உருவானது. அவள் ஒரு தேவர் இனத்தைச் சார்ந்த ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தில் பிறந்த பெண். 

மருத்துவமனையில் எனது காலின் நிலைமை மிக மோசமாக இருந்தது. காலைத் துண்டித்து மாற்ற வேண்டும் என்று டாக்டர் சொல்லிவிட்டார். தனிமையான வாழ்க்கை அப்போதுதான் எனது மனதில் துக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் காலை முறித்தால் பிழைப்பிற்கு வழியில்லாமல் கஷ்டப்படுவேன் என்ற எண்ணத்தில் காலை துண்டித்து எடுக்க நான் சம்மதிக்கவில்லை. 

உடனே நான் ஆஸ்பத்திரியை விட்டு வெளியே வந்து ஒரு ஆர்.எஸ்.எஸ். காரனான எனது தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்தவனிடம் உதவி தேடினேன். அவன் என்னை ஒரு நாட்டு வைத்தியரிடம் அழைத்துச் சென்றான். கடுமையான முயற்சியின் போது சிறிது நாளில் எனது காலும் சரியானது.

உடனே நான் எனது வீட்டிற்குத் திரும்பினேன். அப்பொழுது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் என்னை அமைப்பிலிருந்து வெளியேற்றியிருந்தார்கள். 

சாந்தா என்ற அந்த ஆர்.எஸ்.எஸ். உயர் குடும்பத்தைச் சார்ந்த பெண்ணுக்கும் எனக்கும் தொடர்புகள் அதிகமாயின.

நான் தாழ்த்தப்பட்ட இனத்தை சார்ந்தவனாக இருப்பதால் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் இதைக் கடுமையாக எதிர்த்தார்கள். அப்போது தான் எனக்குத் தெரிந்தது: 

இந்துக்கள் எல்லோரும் சமமானவர்; இந்து மதத்தை நாம் நன்றாக பேணிக் காப்போம்; என்ற இவர்களது கோஷம் வெறும் பொய்யானது என்று. 


இதிலிருந்து ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக வேலை செய்வதை நான் தவிர்க்கலானேன். 

ஆர்.எஸ்.எஸ்ஸில் உயர் ஜாதி இனத்தைச் சார்ந்தவர்கள் சொகுசாக வாழ தாழ்த்தப்பட்ட மக்களான நாங்கள் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு எங்களது சொந்த வாழ்க்கையைப் பற்றியே சிந்திக்காமல் ஏமாந்தவர்களானோம். 

1991 ல் திரும்பவும் எனக்கு ஆர்.எஸ்.எஸ்ஸின் அரசியல் கட்சியான BJP யில் ஒரு பதவி கிடைத்தது. எர்ணாகுளம் மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு நிறைய நிறைய பதவி கிடைத்தது. 

இதிலிருந்து கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல் கொடுக்கலாம் என்று நினைத்தேன். இதிலும் ஆர்.எஸ்.எஸ். காரர்கள் தலையிட்டு அதையும் கலைத்தார்கள். B.J.P.யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கெதிராக மாறின. 

நான் அங்கிருந்து சாந்தாவையும் அழைத்துக் கொண்டு இரவோடு இரவாக சொந்த உருக்குச் சென்று விடலாம் என்று எண்ணினேன். ஒரு இரவு நேரத்தில் நான் சாந்தாவை யாரும் பார்க்காமல் வீட்டில் இருந்து அழைத்து வந்தேன். 

இரவு முழுவதும் ஒரு முஸ்லிம் பெண்ணின் வீட்டில் தங்க வைத்தேன். 


நாங்கள் இருவரும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்று தெரிந்தும் அந்த முஸ்லிம் பெண் எங்களுக்கு அடைக்கலம் கொடுத்தாள். 

இப்படி ஒரு விதமாக நான் ஊரை வந்தடைந்தேன். திருமணம் முடிந்த சில மணிகளுக்குள்ளாகவே காவல் துறையினர் எனது வீட்டிற்கு வந்தார்கள். ஸ்டேஷன் வருமாறு அவர்கள் என்னிடம் கூறினார்கள். இன்று என்னால் வர இயலாது நாளைக்கு வருகிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன். 

மறுநாள் காலை ஸ்டேஷன் செல்லும்போது சாந்தாவின் அப்பாவும், அம்மாவும் அங்கே இருக்கிறார்கள். இருப்பத்தி ஐந்தாயிரம் ரூபாயையும், பத்து பவுன் நகையையும் இவன் திருடிக்கொண்டு போய் விட்டான் என்று சாந்தாவின் அப்பா சப் இன்ஸ்பெக்டர் கோவிந்தனிடம் புகார் கொடுக்கிறார். 

இவர் இப்படி பேசமாட்டார் என்று எனக்கு நன்றாக தெரியும்.இதற்குப் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் செயல்படுகிறார்கள் என்று எனக்குத் தோன்றியது. அது நிஜமாகவும் இருந்தது. 

இதிலிருந்து எனது வீட்டில் பல பிரச்னைகள் உருவாகத் தொடங்கின. நாங்கள் இருப்பது இரண்டாவது அம்மாவின் வீடானதால் அவர்களுக்கு இத்திருமணத்தில் கொஞ்சம் கூட விருப்பமே இல்லை. 

உடனே நான் தனியாக இவர்களை விட்டு பிரிந்து செல்வோம் என முடிவெடுத்து இரண்டு பேருமாக ஒரு சின்ன குடிசையில் எங்களது வாழ்கையைத் தொடங்கினோம். அப்போது நான் ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்தேன். அதனால் கொஞ்சம் வருமானம் இருந்தது. 

வேலை செய்து கொஞ்சம் பணம் சேர்த்து எனது ஊரில் அம்பேத்கர் காலனியில் ஒரு மூன்று செண்டு இடம் வாங்கினேன். அங்கே ஒரு சின்ன செட் கட்டினோம். அங்கே வைத்து எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. மீரா என்று அதற்குப் பெயர் சூட்டினேன். இப்போது ஜாஸ்மின் என்பது அவளது பெயர். 

குழந்தை பிறந்ததும், திரும்பவும் பொருளாதாரச் சிக்கல் ஏற்பட்டு மிகவும் கஷ்டப்பட வேண்டியதாயிற்று. வேறு வழியில்லாமல் எனது ஆட்டோவை விற்று பழைய தொழிலான கருங்கல் உடைப்பதற்கும், மரம் சுமக்கவும் செய்தேன். 

சில நாட்கள் சென்றபோது தலித் விகஸன் கார்ப்பரேஷன், தலித் மக்களுக்காக வீடும் இடமும் வாங்குவதற்கு அரசு பணம் கொடுக்கின்றது என்று கேள்விப்பட்டேன். எனது இப்போதைய ஷெட்டை மாற்றிவிட்டு வீடு கட்டுவதற்கு மனு கொடுத்தேன். 

அன்றும் நான் BJP யின் ஒரு மெம்பராகத்தான் இருந்தேன். கருத்து வேறுபாடுகள் இருந்தால் கட்சிக்காக வேலை ஒன்றும் செய்ய முற்படவில்லை. 

இப்படி இருக்க பிஜேபி யும், ஆர்.எஸ்.எஸ்ஸும் சேர்ந்து எனக்கு கிடைக்கப் போகின்ற அந்த பதவியைத் தடுப்பதற்கு பல வழிகளையும் கையாண்டார்கள். 

எல்லா வழியிலும் என்னை ஒதுக்க வேண்டும் என்ற ஒரே இலட்சியத்தில் அவர்கள் செயல்பட்டார்கள். 


ஆனால் அரசு எனக்கு சாதகமானதால் அவர்களது திட்டம் நடை பெறாமலும் எனக்கு வீடு கட்டுவதற்கு உதவியும் கிடைத்தது. உடனே வீடு கட்டவும் செய்தேன். 

ஆர்.எஸ்.எஸ்ஸிற்காக உயிரைக் கொடுத்து எனது சொந்த வாழ்க்கையைக் கூட பொருட்படுத்தாமல் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆளான நான் அவர்களின் உயர் குலத்து பெண்ணை திருமணம் முடித்தற்காக எல்லாவற்றையும் மறந்து கொஞ்சம் கூட நன்றியில்லாமல் எனக்குத் துரோகம் செய்வதற்கு முன்வந்தார்கள் அந்த ஆர்.எஸ்.எஸ்காரர்கள். 

பிஜேபி யும் ஆர்.எஸ்.எஸ்ஸும் எனக்கு ஒரு பிரச்னையாக மாறியவுடன், அவர்களுக்கெதிராக நான் போராட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த சில இளைஞர் குழுவை நியமித்து பிஜேபி, ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றின் சதி வேலைகளை இந்தத் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட வேண்டும் என்று தீர்மானித்தேன். 

இதனை அம்பேத்கார் கல்வி மையம் மூலம் வெளிப்படுத்திக் காட்டினேன். சிறிது நாட்களில் நியமித்த அந்த இளைஞர்கள் ஆர்.எஸ்.எஸ். பயத்தால் என்னை தனிமைப்படுத்தினார்கள். 

சில சதி வேலைகளில் என்னை சிக்கவைக்க முயற்சிகளைச் செய்தார்கள். 

அம்பேத்கார் கல்வி மையத்தை ஆர்.எஸ்.எஸ்காரர்கள் கைப்பற்றிக் கொண்டார்கள். 

இந்த நேரத்தில்தான் அப்துல் நாசர் மஹ்தனியின் பாபரிமஸ்ஜித் பற்றிய தீப்பொறி பிரசங்கம் நடந்து கொண்டிருந்தது. 

ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளுக்கெதிராக கடுமையான முடிவுகளை எடுக்கக்கூடிய ஒரு நபர் தான் நாஸர் மஹ்தனி என்ற எண்ணம் தான் எனக்கு இருந்தது.

அம்பேத்கர் கல்வி மைத்தை சங்கபரிவாரிடமிருந்து மீட்க எனக்கு நாஸர் மஹ்தனியின் உதவி தேவைப்பட்டது. அவரைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை என்னை தொற்றிக்கொண்டது. 

நான் ஆர்.எஸ்.எஸ்ஸை விட்டு ஊரில் தனிமையாக நிற்கும் போது ஒரு சில முஸ்லிம் இளைஞர்கள் எனது நண்பர்களானார்கள். 

எனது வாழ்க்கையில் முதல் முதலாக பழகிய இரண்டு முஸ்லிம் நண்பர்கள்தாம் ரபீக்கும், அஃப்சலும். 

ஒரு நாள் இவர்கள் என்னிடம், "வேலாயிதா, நீ மஹ்தனியோடு சேர்ந்து நின்று பணியாற்று. ஆர்.எஸ்.எஸ்ஸுக்கும் பிஜேபி க்கும் பதிலடி கொடுப்பவர் அவர்தான்" என்று சொன்னார்கள். 

ஒரு இரவில் அவர்கள் என்னை மஹ்தனியைப் பார்ப்பதற்கு அழைத்துச் சென்றார்கள். அன்று தான் முதன் முதலாக முஸ்லிம் நண்பர்களுடன் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. 

மஹ்தனியின் அந்த விகாரமான தோற்றத்தை பார்ப்பதற்கு எனக்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது. 

தலித் இனத்தை, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த என்னை அவர் ஏற்றுக்கொள்வாரா? என்னிடம் பேசுவதற்கு விருப்பப்படுவாரா? என்றெல்லாம் எனது மனம் கலங்கியது. 

இவ்வாறாக ஒரு விதத்தில் எர்ணாகுளம் ஃபிரீடம் சாலையில் இருக்கின்ற என்.எம்.மெஹ்பூபின் வீட்டிற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். வீட்டின் மேல் மாடிக்கு என்னை அழைத்துச் சென்று தனிமையாக ஓரிடத்தில் உட்கார வைத்தார்கள்.
நாஸர் மஹ்தனியை பார்ப்பதற்கு ஒரு வித அச்சமாகத்தான் இருந்தது. 

ஏனென்றால் நானும் ஓர் ஆர்.எஸ்.எஸ். காரனாகத்தானே இருந்தேன். 

மஹ்தனி மீது வெடிகுண்டு எறிந்து அவரது காலை முறித்தது ஆர்.எஸ்.எஸ். காரர்கள் அல்லவா?. 

என்னை ஏதாவது செய்யப்போகிறாரா?. தனிமையில் சிக்கிக்கொண்டேனோ? என்றெல்லாம் எனது மனம் அச்சத்தால் அல்லாடிக்கொண்டிருந்தது. 

சிறிது நேரம் கழிந்ததும் அதி விகாரமானத் தோற்றத்தில் பிரகாசமான முகத்தோடு நாஸர் மஹ்தனி படியேறி வந்தார். ஒரு கால் ஊனமானதால் வேறொரு நபரின் தாங்கலோடு ஏணிப்படி ஏறி வந்து என் முன்னே உட்கார்ந்தார். 

பத்து நிமிடம் நாங்கள் இருவரும் பேசிக்கொண்டோம். என்னைப் பற்றியும் வீட்டு நிலவரம் பற்றியும் ரொம்ப அக்கரையோடும் ஆவலோடும் விசாரித்தார். 

எர்ணாகுளத்தில் மஹ்தனி கட்சியின் மாநாடு நடக்கிறது. கட்சியில் முழுமையாகச் செயல்பட வேண்டும் என்று கூறி பி.டி.பியை எனக்கு அறிமுகப் படுத்தினார்கள். நாஸர் மஹ்தனியின் கட்சியின் பெயர் மக்கள் ஜனநாயக கட்சி [PEOPLES DEMOCRATIC PARTY] PDP எனச் சுருக்கமாக கூறுவார்கள். 

எர்ணாகுளத்தில் கட்சியின் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் நானும் கலந்து கொண்டேன். மஹ்தனியின் தீப்பொறி பறந்த பேருரையை நான் கேட்டேன். 

ஆர்.எஸ்.எஸ்., பிஜேபி க்கு எதிராக அவரது பேச்சும், ஆவேசமும் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்கமுள்ள அவரது மன ஈர்ப்பும் என்னை நன்றாக கவர்ந்தது. 

மேடையில் வேலாயுதன் என்று என்னையும் அறிமுகப்படுத்தினார்கள். 

பிஜேபியையும்,ஆர்.எஸ்.எஸ்ஸையும் எதிர்த்து வரும்போது உன்னை ஒரு மேடையிலும் சேர்க்கமாட்டாங்கடா. 

பறைய இனத்தைச் சார்ந்த உனக்கு யாரும் அடைக்கலம் தரமாட்டார்கள் என்றெல்லாம் பிஜேபி மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் இதற்கு முன் என்னிடம் கூறியிருந்தார்கள். 

பல மேடைகளில் எனக்கு பேசுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆர்.எஸ்.எஸ்ஸின் சதி வேலைகளை சொல்வதும், தலித்துகளுக்காக மேடையில் பேசுவதற்கும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டேன். 

இப்படி நாஸர் மஹ்தனியின் கட்சியான ஜனநாயக மக்கள் கட்சியின் ஒரு முக்கியப் பங்காளியாக நான் மாறினேன். முஸ்லிம் மக்களின் அரவணைப்பும் அவர்களுக்கு என்னிடமிருந்த பாசகுணமும் என் மனதை பெரிய அளவில் மாற்றியது. 

இருந்தாலும் கட்சியின் ஒரு கமிட்டிக் கூட்டம் எர்ணாகுளத்தில் நடக்கும் போது நாஸர் மஹ்தனியின் மாவட்ட செயலாளர் சித்திரபானு என்ற நபர் என்னிடம் கூறினார்: 

"வேலாயுதா நீ உஷாராக இரு. மஹ்தனி உன்னை கொலை செய்து விட்டு ஆர்.எஸ்.எஸ். காரன் கொன்றதாக கூறிவிடுவார்." 

கட்சிக்காக ஒரு இரத்த சாட்சி என்ற முறையில் இந்த விஷயம் எனது மனதை உறுத்திக் கொண்டிருந்தது. இதை நான் நேரடியாக மஹ்தனியிடம் கூறினேன். மஹ்தனி கோபப்பட்டார். 

கட்சியின் பொதுச் செயலாளர் இருக்கும் போதுதான் இதை நான் மஹ்தனியிடம் கூறினேன். 

அப்போதுதான் வெடித்தது கலகம். சித்திரபானுவின் மகன் ஒரு ஆர்.எஸ்.எஸ்காரன். சித்திரபானுவும் இரகசியமாக ஆர்.எஸ்.எஸ்ஸில் பணிபுரிந்து வந்தார். என்னை மக்கள் ஜனநாயக கட்சியிலிருந்து மாற்றுவதற்கு ஆர்.எஸ்.எஸ் கை கொண்ட தந்திரம் இது. 

தலித் இனத்தவர்களை எப்படியேனும் அழிக்க வேண்டும் என்ற கூட்டு ஆலோசனைதான் ஆர்.எஸ்.எஸ். நடத்திக் கொண்டிருந்தது. அன்றைய நாள்களில் சவர்ணர்கள், தலித்துகளை வீதியில் போட்டுக் கொன்றார்கள். 

இன்றோ இந்த சவர்ணர்கள்தான் உயர்ஜாதியினர் ஆர்.எஸ்.எஸ். ரூபத்தில் அவர்களை சதி செய்து கொலை செய்கிறார்கள். 


ஒரு காலத்தில் நாசர் மஹ்தனி பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்டதை முன்னிறுத்தி மேடைப் பேச்சுக்களை தீவிரமாக பேசும் போது அது கேட்க கேட்க கோபம்தான் வந்து கொண்டிருந்தது எனக்கு. 

ஏனென்றால் சிறு வயதில் அம்மா சொல்லிக் கொடுக்கின்ற ஒரு ராம வசனம் நினைவுக்கு வரும். 

ராம ராம ராம ராம் பாஹிமாம் [ராமபாதம் சேரணே முகுந்தராம பாவரிமாம்]. 

இப்படி ராமபாதம் சேருவதுதான் மிகவும் உயர்ந்தது என்று அம்மா சிறு வயதில் எனக்குச் சொல்லிக்கொடுப்பார்கள். 

அந்த ராமன் பிறந்த இடத்தில்தான் திரும்பவும் பாபரி மஸ்ஜிதை நாங்கள் கட்டுவோம் என்று மேடையில் பேசுகின்ற மஹ்தனியை பார்க்கும் போதேல்லாம் எனக்கு வெறுப்பும், கோபமும் பொத்துக் கொண்டுவரும். 

மாலை நேரம் சுமார் 4 மணிக்குத்தான் பாபரி மஸ்ஜித் தகர்க்கப்பட்ட செய்தியை நான் அறிகிறேன். அன்று முழுவதும் நானும் எனது ஆர்.எஸ்.எஸ். நண்பர்களும் மிகுந்த சந்தோஷத்தில் இருந்தோம். 


எனது சாகாவின் எதிரொலி கேரளத்தில் நடக்கவில்லையென்றாலும், பைசாபாத்தில் நடந்தேறியது எனக்கு மிகுந்த சந்தோஷத்தையும், சாகாவின் மீது அதிக ஈர்ப்பும் ஏற்பட்டது. 

இதற்கெல்லாம் மறுப்பாகவும், எதிர்ப்பாகவும் பாபரி மஸ்ஜித் திரும்பவும் கட்டப்பட வேண்டும் என்ற ஓரே எண்ணத்தோடுதான் பி.டி.பி. யின் பின் துணையோடு அயோத்தி சென்றேன் 1996 ல். 

1996 டிசம்பர் 30 -ம் தேதிதான் எர்ணாகுளத்திலிருந்து ரயில் ஏறினேன். அந்த இரண்டு நாள்களிலும் கடந்த நிகழ்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன். 

லக்னோவில் சென்றிறங்கினால் ஒரு பெரும் முஸ்லிம் சமூகம் எங்களை வரவேற்கும் என்ற எண்ணம் எனது மனதில் இருந்தது. அங்கு சென்று இறங்கும் போதுதான் தெரிகிறது. போலீஸ் பட்டாளம் தெரு முழுவதும் நிறைந்து நின்றது. 

டிசம்பர் 6 முதல் அங்குள்ள முஸ்லிம்கள் பயத்தால் செத்துப் பிழைத்துக் கொண்டிருந்தார்கள். 

பாபரி மஸ்ஜித் என்று பேசுவதற்குக்கூட அவர்கள் அஞ்சி நடுங்கினார்கள். 


கேரளத்தின் மக்கள் தொகைக்கு சமமான உத்திரப்பிரதேசத்தின் முஸ்லிம் மக்களின் இந்த உள்ளத்தைப் பார்த்து எனக்கு மிகவும் வேதனையாக இருந்தது. 

கேரளத்தில் தாழ்த்தப்பட்ட தலித் இனத்தாரும் உ.பி.யில் முஸ்லிம்களும் சங்கபரிவாரின் சக்திகளுக்கும் அவர்களது தந்திரங்களுக்கும் இரையாகி தரைமட்டமாக ஆகிவிடுகிறார்களே என்ற எண்ணம்தான் எனது உள்ளத்தில் வேதனையில் ஆழ்ந்து கொண்டிருந்தது. 

இத்துணை எளிமையாகவும், இனிமையாகவும் பாசமும் காட்டுகின்ற முஸ்லிம் சமூகத்தையா மிகவும் கீழான இட்டுக்கட்டப்பட்ட அவதூறுகளைச் சொல்லி அழிக்கத் துடிக்கின்றார்கள். அவர்களின் சின்னங்களையும் பள்ளிகளையும் அவதூறு பேசுகிறார்கள் என்று எனது மனம் கவலையில் வாடிற்று. 

அயோத்தி நோக்கி நாங்கள் மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் இதையெல்லாம் நான் தெரிந்திருக்கவே முடியாது. 

அயோத்தி அணிவகுப்பிற்காக சென்ற பிறகுதான் தெரிகிறது இந்த ஆர்.எஸ்.எஸ் வெறியர்கள் இல்லாத ஒரு பழியை முஸ்லிம்கள் மீது வேண்டுமென்றே போட்டு குற்றம் சுமத்தி அவர்களை அழிப்பதற்கு ஆயத்தமாகின்றார்கள் என்ற உண்மை. 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் இதனை நடத்திக்காட்டிவிட்டார்கள். இதனை நான் கண்கூடாகக் கண்டேன். 

அயோத்திக்கு மேற்கொண்ட பயணத்தில் நான் கலந்து கொள்ளவில்லையென்றால் முஸ்லிம்களைப் பற்றி இன்னும் மிக கேவலமான கருத்துக்களைக் கொண்டவனாகவே வாழ்ந்திருப்பேன். 

இந்தியாவில் முக்கியமான இஸ்லாமிய கேந்திரங்கள் நிறைந்த உத்திரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் இவ்வளவு பிற்போக்குவாதிகளாகவும் கிஞ்சிற்றும் விழிப்புணர்வு இல்லாதவர்களாகவும் போனது ஏன்? என்ற கேள்வி இப்போதும் எனது மனதை உறுத்திக் கொண்டே இருகின்றன. 

அது மட்டுமல்லாமல் இவ்வளவு சுலபமாக முஸ்லிம்களுக்கு இந்த அவமானம் நடந்த பிறகும் இன்னொரு முஸ்லிம் சமூகம் அதற்காக கொஞசம்கூட வருத்தப்படவில்லையே ஏன்?

அதற்கெதிராக பேசுவதற்கு முயற்சி செய்யாமல் இருப்பது என்னுள் வியப்பை ஏற்படுத்தியது. 

இப்படியாக முதன் முதலில் கொல்லம் மாவட்டத்தில் முன்னத்தூர் சட்டமன்ற தொகுதியில் மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிட்டேன். 

இப்படித்தான் எனக்கு மஹ்தனியின் அன்வாருஷ்ஷேரியுமாக [ஸ்தாபனம்] பந்தம் ஏற்பட்டது. இந்த ஸ்தாபனம் நாசர் மஹ்தனியால் ஆர்.எஸ்.எஸ்ஸிற்கு எதிராக நிறுவப்பட்டது. 

இந்த நிறுவனத்தைப் பற்றித்தான் நான் எனது ஆர்.எஸ்.எஸ் வாழ்க்கையில் மிகவும் கோபமாக உரையாற்றினேன். 

இந்துக்களை கொன்றொளிப்பதற்காக நாசர் மஹ்தனியால் ஸ்தாபிக்கப்பட்ட ஒரு நிறுவனம்தான் அன்வாருஷ்ஷேரி என்றும், 

தீவிரவாதத்தை வளர்க்கின்ற ஒரு முக்கிய நிறுவனம் என்றும், சிறுவர்களுக்கு ஆயுதப்பயற்சி கொடுக்கின்ற ஒரு நிறுவனம் என்றெல்லாம் பொய்யைப் பேருரையாக ஆற்றியது எனது நினைவுக்கு வந்தது. 


ஓர் இஸ்லாமிய நிறுவனத்தில் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த நான் தங்குவதும், அது மட்டுமல்லாமல் முஸ்லிம்களுக்கு என் மேலுள்ள பாசமும் பரிவும் என் மனதை நன்றாக கவர்ந்தது. 

எங்களை இவர்கள் தாழ்வாக பார்ப்பார்கள் என்றெல்லாம் நான் முன்னால் நினைத்ததுண்டு. இதற்கெல்லாம் நேர் மாறாகத்தான் அவர்களது[முஸ்லிம்களது]பழக்க வழக்கங்கள் இருந்தன. 

சொல்லித் தீர்க்கமுடியாத அரவணைப்பு, அவர்களுடன் ஒன்றாக இருந்து சாப்பிடுவது, அவர்களோடு ஒன்றாக ஒரே இடத்தில் துங்குவது, இதெல்லாம் என் மனதில் வேலாயுதன் என்ற நான் ஓர் பிலாலாக மாறுவதற்கு பாதை போட்டுத்தந்தன. 


அன்வாருஷ்ஷேரி என்ற நிறுவனம் குறிப்பாக சொல்லப்போனால் ஒரு யத்தீம்கானாவாகும் [அநாதைகள் விடுதி]. அங்குள்ள அநாதைப் பிள்ளைகள் என்னோடு கொண்டிருந்த மரியாதை இதெல்லாம் தாழ்ந்த இனத்தைச் சார்ந்த எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

ஆர்.எஸ்.எஸ்ஸின் ஒரு தலைவரிடம் கூட இப்படிப்பட்ட எளிமையான, அன்பான குணங்களை நான் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை. 

யத்தீம்கானாவில்(அநாதைகள் விடுதியில்) நான் கொஞ்சம் நாள் பி.டி.பியின் ஒரு ஸ்ஷார்த்தியாக[வேலாயுதனாக] தங்கினேன். 

எல்லா வியாழக்கிழமையிலும் அந்த அநாதைகள்: 
"இறைவா, எங்களுக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக! எங்களுக்கு உதவி செய்கிறவர்களுக்கு நீ உதவி செய்வாயாக!" 

என்றெல்லாம் பிரார்த்தனை செய்வதை நான் பார்த்தேன். அப்போது தான் எனது மனதில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வாழ்க்கை தென்பட்டது. 

இந்த பிள்ளைகளைப் பற்றியா நாங்கள் தீவிரவாதிகளென்றும், தீவிரவாதத்தை ஊட்டுகின்ற நிறுவனம் என்றும் இந்நிறுவனத்தில் தீவிரவாதத்தை பிஞ்சு உள்ளங்களில் ஊட்டுகிறார்கள் என்றும் பொய்யைப் புனைந்துரைத்தோம்?. 

இந்த ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள் அபாண்டமான பொய்யைச் சொன்னார்கள் என்ற எண்ணம் எனது மனதில் தெரிந்தது. 

மேலும் நாசர் மஹ்தனியையும் இவ்வாறுதான் தீவிரவாதி என்று முத்திரை குத்தினார்கள் என்ற உண்மையும் எனக்குத் தெரிந்தது. 


அன்வாருஷ்ஷேரியின் வாழ்க்கை எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்து கொள்வதற்கு முதலில் ஒரு வாய்ப்பாக அமைந்தது. 

ஒவ்வொரு நாளும் ஓர் புது அனுபவம் கிடைத்தது. என்னை இஸ்லாத்தின் பக்கம் கொண்டு சென்று கொண்டிருந்தது. 

இதிலிருந்துதான் இஸ்லாத்தைப் பற்றி மேலும் தெரியவேண்டும் என்ற ஆர்வம் என்னுள் எழுந்தது. 


பல இஸ்லாமிய அறிஞர்களையும் நான் நாசர் மஹ்தனி மூலம் அறிந்து கொண்டேன். இந்தப் பழக்கவழக்கம் தான் வேலாயுதன் என்ற எனக்கு இஸ்லாத்தைத் தெரிந்திட வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தது. 

உயர்ந்த அந்த ஆலிம்கள் சாதாரண மக்களோடு காட்டுகின்ற அன்பு, பாசம் இவற்றைப் பார்த்து இஸ்லாம் அன்பினாலும் மக்களை அரவணைத்துச் செல்லக்கூடிய ஒரு நல்ல மார்க்கம் என்பதை நான் மேலும் புரிந்து கொண்டேன். 

முஹம்மது(ஸல்) அவர்களின் எதார்த்த அடியார்கள் இவர்கள்தான் என்பதை நான் உணர்ந்தேன். 

மேன்மையான நல்ல அன்பும் பாசமும் மிகுந்த அந்த முஹம்மது(ஸல்) அவர்களின் முன் மாதிரியைப் பின்பற்றும் அந்த நல்ல உள்ளத்தையா ஆர்.எஸ்.எஸ். வெறியர்கள், தீவிரவாதிகள் என்றும் இஸ்லாம் தீவிரவாதத்தின் மதம் என்றும் கூறினார்கள் என்று எனது மனதில் தோன்றி நான் மிகவும் வருத்தப்பட்டேன். 

அவ்வூரில் பிரார்த்தனை நடக்கும் போது நான் வெளியில் நின்று பார்த்தேன். பிறருக்காக பிரார்த்தனை செய்கின்ற அந்த அநாதை குழந்தைகளை பார்த்த பொழுது,

எந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்களும் பிறருக்காக பிரார்த்தனை செய்வதை நான் பார்த்ததில்லை. அவர்களின் கீழ் இயங்குகின்ற எந்த அநாதை ஆலயத்திலும் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுப்பதுமில்லை. இவர்களது மத்தியில் நல்ல கலாச்சாரம் இருந்தால் தானே நல்ல குணங்கள் இருக்கும்? 

நான் பி.டி.பியின் ஓர் அங்கமானதால் அதன் கீழுள்ள நாசர் மஹ்தனியின் தொண்டர்கள் நியாயத்திற்காக எந்த ஒரு இன வேறுபாடுமில்லாமல் ஒன்றாய் நின்று போராடுவது எனது உள்ளத்தை மேலும் கவர்ந்தது. 

இவ்வாறாக குன்னத்தூரில் தங்கிவிட்டு திரும்ப கிளம்பும் போதுதான் எனது மனது முழுவதும் அந்த அநாதை விடுதியின் நினைவுகளும் அங்குள்ள ஆலிம்களின் நல்ல பணிவான தோற்றமும் தான் இந்த தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த எனக்கு இஸ்லாத்தைப் பற்றி நன்றாகப் புரிய ஒரு வாய்ப்பைத் தந்தது. 

முஸ்லிகளைப் பற்றி அந்த சங்பரிவார கும்பல்கள் கூறுவது: 

நமது இனத்தைச் சார்ந்த ஒரு இந்து பெண்ணையும் இந்த முஸ்லிம்கள் விட்டுவைப்பதில்லை. இவர்களுக்கு ஆசைவரும் போதெல்லாம் நமது இனப் பெண்களைத்தான் இவர்கள் வெறும் போகப்பொருளாக பயன்படுத்துவார்கள். என்றெல்லாம் மிக மோசமாக முஸ்லிகளைப் பற்றி பேசுவார்கள். 


ஆனால் இப்போதுதான் எனக்கு தெரிகிறது, முஸ்லிம்கள் இத்துனை கண்ணியத்தோடும் ஒழுக்கத்தோடும் வாழக்கூடியவர்கள் என்று. 

அன்னியப் பெண்களைப் பார்ப்பது கூட ஹராம்(தடுக்கப்பட்டது) என்று இஸ்லாம் போதிக்கின்றது. எனது வீட்டில் முஸ்லிம்கள் வந்தால், எனது மனைவியைப் பற்றியும், குழந்தையைப்பற்றியும் விசாரிப்பது மட்டும் தான் அவர்கள் செய்திருக்கிறார்கள். எனது மனைவியின் முகத்தைக்கூட அவர்கள் ஏறெடுத்துப் பார்ப்பதே இல்லை. 

நான் வீட்டில் இல்லாத நேரத்தில் எனது மனைவி உட்காரச் சொன்னால்கூட தலையை குனிந்தவண்ணமாக சலாம் கூறி விட்டு கண்ணியத்தோடு திரும்புவார்கள். 

இப்படி நல்லுள்ளம் கொண்ட அந்த சமுதாயத்தையா இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தவறாக சித்தரிக்கிறார்கள் என்று நான் பல நாளும் நினைத்து வருந்தியதுண்டு. 


முஸ்லிம் பெண்களை பாதுகாப்பான முறையிலும் தங்களது பார்வையை தாழ்த்திக்கொண்டும் பணிவோடு நடக்கவும் வலியுறுத்தி பர்தா முறையை இஸ்லாம் பெண்களுக்கு கற்றுக்கொடுக்கின்றது. 

பண்டைய ஆர்.எஸ்.எஸ்ஸின் கோரப்பிடியில் சிக்கிக்கொண்ட அவர்களோடு சேர்ந்து நின்று முஸ்லிம் பெண்மணிகளைப் பற்றியும் அவர்களது பர்தாவைப் பற்றியும் கிண்டல் செய்த காலம் தான் எனக்கு நினைவிற்கு வருகிறது. 

ஆனால் இந்த சங்பரிவார்களோ தங்களது இந்து பெண்கள் ஆடை அணிவதையும் அதிலும் குறிப்பாக அவர்கள் மார்பை மறைப்பதையும் கண்டிக்கும் நிலை உடையவர்கள். 

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சார்ந்த பெண்களை கண்டால் அவர்களை தேவைக்கேற்ப பயன்படுத்திவிட்டு விட்டுவிடுவதுதான் இந்த இந்து சமுதாயத்தவரின் பழக்கமாக இருந்து வந்தது.
 

ஆனால் இஸ்லாத்திலோ அது போன்று காணவே முடியாது. பெண்களை மிகவும் கண்ணியமாக நடத்துகிறார்கள். 

இப்படிப்பட்ட மோசமான கலாச்சாரத்தை உடைய இந்து ஆர்.எஸ்.எஸ். [தம்புராக்கள்] தேவர்கள்தான் கண்ணியத்திற்குரிய முஹம்மது நபியை குறை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். 

கடைசியாக நாசர் மஹ்தனியின் ஒரு பேருரை ஒன்றை கேட்க வாய்ப்பு கிடைத்தது. அந்தப் பேருரையில் மஹ்தனி எடுத்துக்கொண்ட தலைப்புதான் பல இன்னல்களுக்கும், துன்பங்களுக்கும் ஆட்பட்டு நின்ற கறுப்பு நிற முஸ்லிம் பிலால்(ரலி) பற்றியது. 

இந்தப் பேருரை நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ள ஒரு முக்கிய காரணமாக இருந்தது. 


இவ்வாறாக மஹ்தனி தியாக பிலாலின் வாழ்வை ஒவ்வொன்றாக எடுத்துச் சொன்னார். அரங்கம் நிசப்தமாக காதை கொடுத்து கேட்டுக்கொண்டிருந்தது. 

புனிதமான அந்த இஸ்லாத்தை தழுவிய ஒரே காரணத்திற்காக பிலால்(ரலி) அவர்களை சுடு மணலில் கிடத்தி பாரமான பளுவை அவரின் நெஞ்சின் மீது வைத்து கொடுமைப்படுத்தினர் அந்த முஷ்ரிக்குகள்(இஸ்லாத்தை எதிர்த்தவர்கள்). 

மேலும் பிலால்(ரலி) அவர்களின் உணர்வுகளைப் பற்றி மஹ்தனியின் உருக்கமான உரை என் உள்ளத்தை உருக்கிற்று. மஹ்தனியின் அந்த பிலாலைப் பற்றிய உரை எனது கண்ணில் இருந்து கண்ணீர் துளியை வரவழைத்தது. 

மேடையில் இருந்து கொண்டே நான் தேம்பித் தேம்பி அழத்தொடங்கினேன். 

ரசூல் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அந்த நீக்ரோ இன அடிமையை கட்டி அணைத்தது மட்டுமல்லாமல், அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) இவர்கள் எல்லாம் இருந்த பொழுதும் பிலால்(ரலி) எங்கே? என்று அவர்கள் கேட்டு, "கஃபா ஆலயத்தை திறப்பதற்கு இங்கே நிற்பவரில் நீ தான் அதற்கு தகுதியானவன்" என்று சொல்லி அந்த கறுப்பு இன மாமனிதனை மகிழ்வித்தார்கள். 

கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நின்று தொழுகின்ற அந்த கஃபா ஆலயத்தை திறந்து, அல்லாஹு அக்பர் என்ற பாங்கைச் சொல்வதற்கு முதலில் பாக்கியமடைந்தவர் அந்த அடிமை பிலால். 

எப்படிப்பட்ட பாக்கியம்!. அது மட்டுமல்லாமல் கஃபாவின் மேல் ஏறுவதற்கு முடியாமல் தவிக்கின்ற அந்த அடிமை பிலால்(ரலி) அவர்களிடம் நாயகம் திருமேனி முஹம்மது(ஸல்) அவர்கள் தன் கரம் மிதித்து ஏறுவதற்கு சொன்னதும், அந்த வெண்ணிற மேனியின் கையில் கறுப்பு நிற பாதங்கள் மிதித்து ஏறுவதும், அடிமைத் தனத்தை முற்றிலுமாக அது அடித்து நொறுக்கிற்று. 


இப்படி அந்த மஹ்தனியின் பிரசங்கத்தை கேட்டதும் எனது பூர்விகன் பிலாலை நான் ஒரு நிமிடம் மனதில் பதித்தேன். 

இவ்வாறாக நான் சிந்திக்க ஆரம்பித்தேன். 

ஆர்.எஸ்.எஸ்.காரர்களுடன் பழகியதால் எனக்கு என்ன கிடைத்தது? 

கேவலம் தாழ்ந்த இன மக்களுக்குக்கூட தன்னுடைய மதத்தைப் பகிர்ந்து கொள்ள கொடுக்காத ஒரு வெறிபிடித்த இனம். 


அது மட்டுமல்லாமல் நாஸர் மஹ்தனி மலபாரிலே கோட்டக்கல் ஜும்ஆ மஸ்ஜிதில் ஒரு இரவு தொழுகை தொழுவதற்காக காரை விட்டு இறங்கினார். நானும் அவரோடு இருந்தேன். மஹ்தனி பள்ளியின் உள்ளே செல்லும் போது நான் வெளியில் நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். 

முன் வரிசையில் நிற்கின்ற ஒரு கூலிப்பணிக்காரனது காலின் கீழ் மஹ்தனியின் தலை. அது மட்டுமல்லாமல் பல பணக்காரர்களும், ஏழை மக்களும் ஒரே அணியில் நின்று தோளோடு தோள் சேர்ந்து தொழுவது என்னை நன்றாக கவர்ந்தது. 

ஆகா என்ன சமத்துவம் இது! என எனது மனம் மகிழ்ந்தது. 


முன்பெல்லாம் கோவில்களுக்குச் செல்லும்போது தாழ்ந்த இனத்தைச் சார்ந்த என்னை கோவிலுக்குள் நுழைய விடமாட்டார்கள். வெளியே நின்று கும்பிட வேண்டியதுதான். 

அது மட்டுமல்லாமல் ஏதாவது நாட்டின் முக்கியமான நபர் கோவிலுக்கு வந்தால் பிற மக்கள் அன்று முழுவதும் சாமிக்கு லீவு போட வேண்டியதுதான். 


அப்போதுதான் எனக்கு ஞாபகம் வருகிறது. முன் ஒருநாள் நான் சபரிமலை ஐயப்பனை தரிசிப்பதற்காகச் சென்றேன். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக ஒரு மலையாள சினிமா நடிகர் சாமி தரிசனதிற்காக வந்திருந்தார். அவர் வந்திறங்கியதுதான் தாமதம், ஐயப்பனை தரிசிப்பதற்கு வந்த அந்த இந்து இளைஞர் எல்லாம் ஐயப்பனை மறந்து விட்டு அந்த சினிமா நடிகரை தரிசிக்க முன் வந்தார்கள். அது மட்டுமல்லாமல் முதலில் சென்ற எங்களை நிறுத்திவிட்டு நடிகரை உள்ளே விடுகிறார்கள். 

இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில். 

அது தவிர தமிழ்நாட்டைச் சார்ந்த ஒரு முதலமைச்சர்(முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவைக் குறிப்பிடுகிறார்.) சாமி தரிசிக்க குருவாயூர் சென்றார். சென்றிறங்கியதுதான் தாமதம் அங்கு நின்று கொண்டிருந்த பக்தர்களுக்கு அடி,உதை. 


இப்படிப்பட்ட வேறுபாடு இந்து கலாச்சாரத்தில். இதே சமயம் நான் முஸ்லிம்களின் நிலைமையை சிந்தித்தேன். 

முஸ்லிம் மந்திரி தொழுவதற்காக பள்ளியில் ஏறும் பொழுதும் மற்ற முஸ்லிம்கள் எல்லாம் வெளியே நிற்க வேண்டும் என்று சொன்னால் என்னவாகும் நிலைமை? மந்திரியும் அதை எதிர்பார்ப்பதில்லை. மக்களும் அதை செய்வதில்லை. 

இப்படிப்பட்ட சமத்துவ, சகோதரத்துவத்தை நான் அந்த பள்ளிவாயிலின் வெளியே நின்று பார்த்துக் கொண்டிருந்தேன்.


அது மட்டுமல்லாமல் அங்கிருந்து நானும் மஹ்தனியும் மலப்புரம் மாவட்டம் திருவங்காடி என்ற இடத்தில் பானு காக்கா என்ற முஸ்லிம் நண்பனின் வீட்டிற்குச் சென்றோம். 

தாழ்த்தப்பட்ட என்னை மிகவும் கண்ணியமாகவும் பாசத்தோடும் அரவணைத்து நல்ல சாப்பாடும் தந்து அங்கேயே தங்க வைத்தார்கள். 

இப்படிப்பட்ட தன்மைகளை வலியுறுத்துகின்ற இஸ்லாம் மார்க்கத்தில் நானும் இணைந்து கொண்டால் என்ன? என்ற கேள்வி என்னை ஆட் கொண்டது. 


நான் இதை ஒரு நாள் மனைவி சாந்தாவிடம் கூறினேன். அவள் இதற்கு சற்று தயக்கம் தெரிவித்தாள். 

உடனே நான் முஸ்லிம்களாலும், ஆர்.எஸ்.எஸ். காரர்களாலும் நமது வாழ்க்கையில் ஏற்பட்ட வித்தியாசங்களையும் இஸ்லாத்தின் தன்மைகளையும் எடுத்து விவரித்தேன். 

இருந்தாலும் அவளது மனம் அதற்கு இடம் கொடுக்கவில்லை. 

ஏனென்றால் முஸ்லிம்கள் என்னை ஏற்றுக்கொள்வார்களா? நான் ஒரு ஆர்.எஸ்.எஸ் காரி அல்லவா? என்ற எண்ணங்கள் எல்லாம் அவளுக்குள் உதித்தது. 

நான் விடவேயில்லை. 

முஸ்லிம்கள் என்னிடம் காட்டின அந்த பணிவையும், பாசத்தையும், அவர்களது உபசரிப்பையும் பற்றி விவரமாக அவளிடம் சொன்னேன். கடைசியில் அவளது மனம் எனது ஆசைகளை ஏற்றுக் கொள்வதற்குத் தயாரானது. நான் மனைவியையும் அழைத்துக் கொண்டு நாசர் மஹ்தனியின் வீட்டிற்குச் சென்றேன். 

அவர் இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளையெல்லாம் எனக்கு சொல்லித் தந்து விட்டு புனிதமான எங்களது பூர்விகன் பிலால்(ரலி) உச்சரித்த அந்த கலிமாவை மொழிந்து தந்தார்கள். நாங்கள் சந்தோஷமாக மனதில் அந்த புனித கலிமாவை மொழிந்தோம்; ஏற்றோம் இஸ்லாத்தை. 

“அஷ்ஹது அன்லா இலாஹ இல்லலாஹ் வ அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. மேலும் முஹம்மது(ஸல்) அல்லாஹ்வின் தூதராக இருக்கிறார் என்று நான் சாட்சியம் கூறுகிறேன்) “
என்று சொல்லி விட்டு மஹ்தனி அந்த தியாகி பிலாலின் பெயரைத்தான் எனக்கும் சூட்டினார்கள். 


தாழ்ந்த இனத்தவனாக இருந்த நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக எனது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். 

"பிலால், நீ கலிமா சொன்ன இந்த நிமிடத்தில் இருந்து இன்று பிறந்த பாலகனைப் போலாவாய்" என்று மஹ்தனி சொல்லிக் கற்பித்தார். இதைக் கேட்ட பொது மனம் திரும்பவும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தது. 

எனது முந்தைய பாவங்களையெல்லாம் மன்னிக்கக்கூடிய இறைவனையா நான் ஏற்றுக்கொண்டேன் என்று எனது மனம் திருப்தியடைந்தது.


அன்று இரவு முழுவதும் நான் தூங்கவேயில்லை. 

36 வருடம் வாழ்ந்த வாழ்க்கையில் இருந்து ஒரு புது வாழ்க்கையை துவங்குகின்ற அந்த ஆனந்தத்தில் எனது மனம் மூழ்கியது. 

இப்படியாக நாங்கள் இருவரும் இஸ்லாத்தைத் தழுவினோம். மனைவிக்கு பாங்கோடு ரபீக் மெளலவி கலிமா சொல்லிக்கொடுத்து ஃபாத்திமா என்று பெயர்ச் சூட்டவும் செய்தார். 

இப்போது இருக்கின்ற இடத்தை விட்டு மாறி வேறு இடத்தில் வாடகை வீட்டில் தங்கினோம். முஸ்லிமான பிறகு எனக்கொரு இப்னு பிலால் என்ற மகனும் பிறந்தான். 

தாழ்த்தப்பட்ட தலித் இனத்தைச் சார்ந்த பழைய வேலாயுதனாக நான் மரணம் அடைந்தால் எனது மனைவியும் மக்களும் பிச்சை எடுக்கக் கூடியவர்களாக மாறியிருப்பார்கள். 

ஆனால் பிலாலான எனக்கு இப்போது அல்லாஹ்வின் கருணையால் தனது உயிரைக்கூட கொடுக்கக்கூடிய முஸ்லிம் சமுகம் இருக்கின்றது. அந்த இஸ்லாமிய சகோதர சமூகம் இருக்கும் காலம் வரை நான் அஞ்சத் தேவையில்லை. 

இப்போது அல்லாஹ்வின் கருணையினால் நானும் எனது மனைவி மக்கள் அனைவரும் மிகவும் சந்தோஷமாக குர்ஆனுடைய நிழலின் கீழ் பாதுகாப்பாக சந்தோஷமாக வாழ்க்கையை நடத்துகின்றோம். 


கேரளத்தின் மாதவிக்குட்டி சுரையா இஸ்லாத்தை தழுவியபோதும் நாங்கள் குடும்பத்தோடு சென்று அவர்களைச் சந்தித்தோம். 

ஈமானின் பிரகாசம் அவர்களது முகத்தில் தெளிந்து நின்றது. 

கேரளத்தில் குறுப்பு இனத்தைச் சார்ந்த உயர் குல மாதவிக்குட்டியை பறயனான இந்த வேலாயுதன் ஒரு போதும் சந்திக்க வாய்ப்பே இருந்திருக்காது. 

ஆனால் இஸ்லாம் கோட்பாட்டின் கீழ் (பிலாலும், சுரையாவும்) நாங்கள் இருவரும் இணைந்ததால் எங்களுக்குள்ளே அக விவரங்கள் பேச வாய்ப்பு கிடைத்தது. 

ஆதலால் எனது சமூகமான தாழ்த்தப்பட்ட தலித் இனத்திற்கு ஒரு வேண்டுகோள் வைக்கின்றேன். 

நீங்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை. 

நீங்கள் அடிமைத்தனத்திலிருந்து உங்களை விடுவித்துக்கொள்ள இஸ்லாமே நன்மருந்து. 


தைரியமாக அல்லாஹ்வின் இந்த அழகிய மார்க்கத்தில் பிரவேசியுங்கள். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் குர்ஆன் உங்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கும் வாருங்கள்…..
அல்லாஹ்வின் மார்க்கத்தில் எனக்கும் என் மனைவி பிள்ளைகளுக்கும் நேர் வழியைத் தந்த வல்ல இறைவன் அல்லாஹ்விற்கே புகழனைத்தும் உரித்தாகுக. 

எனது பாங்கின் ஒலி என்றும் தொடரும். அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர்; அல்லாஹ் அக்பர். 


இஸ்லாத்தில் இபாதத்துகள்: 

நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் இருக்கும் பொழுது முஸ்லிம்கள் தங்களுக்குள் கூறிக்கொள்ளும் சலாத்தைப் பற்றி ஒரு தப்பான வாதத்தை எனக்கு போதித்தார்கள். 

அதாவது இவர்கள் எங்கு சென்றாலும் தங்களுக்கு மத்தியில் அஸ்ஸலாமு அலைக்கும் என்று கூறிக்கொள்வார்கள். 

தன் இனத்தைச் சார்ந்த யாரை சந்தித்தாலும் சரியே. இது எதற்கென்றால் பிற மதங்களை தனிமைப்படுத்துவதற்கும் முஸ்லிம்களை ஒன்றுபட வைப்பதற்கும் ஆகும் என்ற இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின் கூற்றினால் தப்பான எண்ணத்தில் இருந்துவந்தேன். 

இங்கு வந்த பிறகுதான் தெரிகிறது இந்த ஸலாத்தின் பொருள் எவ்வளவு மிகையானது என்று. 

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும் சமாதானவும் என்றென்றும் உங்கள் மீது உரித்தாகுக;). ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்வது. அதைக் கேட்ட முஸ்லிமும் தனக்காக துஆ செய்த அந்த முஸ்லிமுக்கு "உன்மீதும் இறைவனின் சாந்தியும், சமாதானமும் உரித்தாகட்டும்"(வ அலைக்குமுஸ்ஸலாம்) என திருப்பிக்கூறும் மிக அருமையான முறையை எந்த மதம் இவ்வாறு நமக்குத் சொல்லித்தருகிறது?. 

இந்து மதத்தை எடுத்துக் கொண்டால் வணக்கம்(நமஸ்தே) என்று கூறுவார்கள். 

என்ன பொருள் இதற்கு?. 
"உன்னை நான் வணங்குகின்றேன்" என்றல்லவா இதன் பொருள்?. 

என்ன கீழ்த்தரமான வார்த்தை இது? இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்காக வணக்கம் செலுத்துவது. 


வணக்கத்திற்கு தகுதியானவன் இறைவனைத் தவிர வேறு யாரும் இல்லை என்று இஸ்லாம் மிக அருமையாக நமக்கு போதிக்கிறது. 

இதையும் நான் இஸ்லாத்தில் வந்த பிறகுதான் தெரிந்து கொண்டேன். 

தனக்கு மத்தியில் சகோதரத்துவத்தை வெளிப்படுத்துகின்ற இந்த அருமையான வாசகத்தை குறித்து இந்த ஃபாசிஸ்டுகள் எனக்கு தப்பாக போதித்தார்கள். 

முஸ்லிம்கள் சம்பந்தமான எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதன் பொருளை முழுமையாக விளங்காமல் தப்பான நச்சுக் கருத்துக்களால் போதிப்பது இந்த ஃபாசிஸ்டுகளின் தந்திரமாக இருந்து வருகிறது. 


இந்த ஃபாசிஸ்டுவாதிகளின் சமூகத்திலிருந்து என்னை மட்டும் தேர்ந்தெடுத்து புனித இஸ்லாத்தின் உண்மைகளை எனக்கு போதித்த வல்லான் அல்லாஹ்வுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் மிகையாகாது. 

இதைப்போல் சாப்பிடக்கூடிய விஷயமாக இருந்தாலும் சரியே; இஸ்லாம் மிக அருமையாக போதிக்கிறது. 

சாப்பிடும்போதும் உட்காரும் நிலை, விரல்களைக் கொண்டு சாப்பிடுவது, சாப்பிட்ட பிறகு விரலை நன்றாக உறிஞ்சுவது, சாப்பாட்டிற்கு நாம் கொடுக்கும் மரியாதை இது. 


ஆர்.எஸ்.எஸ்ஸில் இந்த மரியாதை நிலையெல்லாம் எனக்கு சொல்லிக்கொடுக்கவில்லை. அவர்களின் கோட்பாட்டில் இந்த தன்மையே இல்லை. 

இதைப் போலத் தான் இறந்தாலும்; பறையன் இறந்தால் அவனை அடக்கம் பண்ணுவதும் ஒரு முறை. புலயன் இறந்தால் அவனை அடக்கம் செய்வது இன்னொரு முறை. இரண்டு வழி முறையும் அதனுடைய சடங்குகளும் மிக வித்தியாசமாகத்தான் இருக்கும். 


ஆனால் ஒரு முஸ்லிம் இறந்து விட்டாலோ அவனுக்காக அந்த ஊர் ஜமாஅத்தார்கள், ஊர்மக்கள், பக்கத்துவீட்டார்கள் இவர்களெல்லாம் நின்று அந்த மய்யித்தை(இறந்த உடலை) குளிப்பாட்டி விட்டு கண்ணியமான முறையில் நல்லடக்கம் செய்வார்கள். இறப்பு விஷயத்திலும் இஸ்லாம் ஒன்றை போதிக்கிறது. 

நான் இஸ்லாத்தை அடைவதற்கு முன்னால் ஒரு கம்யுனிஸ்ட்வாதியின் மகளின் இறப்பு சடங்கில் பங்கு கொண்டேன். அந்த வீட்டில் ஒரே அலறல் சத்தம் கேட்கிறது. தனது மகளின் பிரேதத்திற்கு முன் அமர்ந்து அலறி சத்தமிட்டு அழுகிறார் கம்யூனிஸ்ட்வாதியான அந்த முஸ்லிம் நபர். 

இதேபோல் அதன் பிறகு வேறொரு முஸ்லிம் மரணவீட்டிற்கு நான் சென்றேன். தெரிந்த ஒரு முஸ்லிம் நபரின் மகன் ஸ்கூட்டர் விபத்தில் இறந்து விட்டார். இறந்த மகனின் தந்தை அழாமல் வருத்தத்தோடு இருப்பதை நான் கவனித்தேன். 

இதை பார்த்த பிறகு எனக்குள் ஒரு சந்தேகம் எழுந்தது. இதை நான் ஒரு மார்க்க அறிஞரிடம் விசாரித்தேன். 

அப்போது அவர் கூறினார், முதலில் இறந்த மய்யித்தின் தந்தை ஒரு பெயர் தாங்கிய முஸ்லிமாக மட்டும் இருக்கிறார். அவருக்கு இஸ்லாத்தின் கோட்பாடே தெரியாது. அதனால் தான் தனது மகளின் மய்யித் முன் நின்று சத்தம் போட்டு அழுது கொண்டிருந்தார். 

இரண்டாவது பார்த்த அந்த நபரோ இஸ்லாத்தின் கோட்பாட்டை நன்றாக தெரிந்தவர். இஸ்லாம் மய்யித்திற்கு முன் நின்று கதறி அழுவதை போதிக்கவில்லை. தனது கவலைகளையெல்லாம் மனதில் மூடி மறைத்துக்கொண்டு தனது மகனுக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்த வண்ணம் மிக கண்ணியமாக மகனை அடக்கம் செய்கிறார். 

மகனை எனக்குத் தந்தவனும் இறைவன் தான்; அவனை எடுப்பதும் இறைவன் தான் என்ற நம்பிக்கையும், நாளை நானும் இறந்து விட்டால் மகனை நிச்சயம் அல்லாஹ் நாடினால் மறுமையில் சந்திப்போம் என்ற நம்பிக்கையும் தான் அந்த நபரின் உள்ளத்தில் இருந்த இஸ்லாமியக் கோட்பாடாகும். 

இஸ்லாத்தின் இந்த கோட்பாடும் என்னை நன்றாக அதன் பக்கம் ஈர்த்தது. 

நான் இஸ்லாத்தை தழுவுவதற்கு முன்னால் எனது அப்பாவும் தண்ணி அடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது நான் இஸ்லாத்தைத் தழுவியிருந்தால் எனது அப்பாவிற்காக என்னுடைய இறைவனிடம் நான் பிரார்த்திக்கவும், இஸ்லாம் தற்கொலையை போதிக்கவில்லை என்றும் அப்பாவிற்கு எடுத்துச் சொல்லியிருப்பேன். இப்போது நான் அதைப்பற்றி மிகவும் வருந்துகிறேன். 

அதே போல் முஸ்லிம்களின் வியாபார விஷயத்திலும் நல்ல ஒரு கோட்பாட்டை கண்டேன். 

ஒரு முஸ்லிம் வியாபாரம் செய்தால் அவனுக்கு இலாபம் வந்து விட்டால் அல்லாஹ்வை துதிக்கின்றான். அவனுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டாலோ கடவுள் மீது பாரத்தைப் போட்டுவிட்டு திருப்திபடுகிறான். ஏனென்றால் அவனுக்குத் தெரியும், இந்த வியாபாரத்தை தந்ததும் இறைவன் தான் என்று. எல்லாம் இறைவனின் நாட்டப்படிதான் நடக்கிறது என்று நினைத்து திருப்திப்படவும் செய்கிறான். 


இன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்னை போன்று தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த புலயன், குறவன், பறயன், வேலன் இவர்களையெல்லாம் தனது காரியத்தை சாதிப்பதற்காகவும் தனது ஆதிக்கத்தை நிலைநாட்டிடவும் பயன்படுத்தி வருகிறார்கள். 

நான் கேட்கிறேன் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்களைப் பார்த்து: எங்களது முன்னோர்களெல்லாம் எந்த ஒரு ஜாதி வேறுபாடுமில்லாமல், இந்து மதத்தை ஒன்றாக பகிர்ந்து தானே வாழ்ந்து வந்தார்கள். 

அப்படியிருக்க அவர்களது மத்தியிலே ஒரு பிளவை ஏற்படுத்தி பள்ளன் என்றும், பறையனென்றும் ஏற்படுத்தி தீண்டத்தகாதவர்கள் என்ற பட்டத்தையும் பெற்று தந்ததெல்லாம் நீங்கள் தானே? 

அதோ எதிரி என்று நீங்கள் சொல்கின்ற முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களுமா இந்த பாகுபாட்டிற்குச் சொந்தக்காரர்கள்? 

இந்து ஒற்றுமை; இந்து ஒற்றுமை; என்று சொல்லிக்கொண்டு எங்களது காதில் பூவை சுற்றுகிறீர்கள். 

இந்த கேடுகெட்ட இயக்கத்தில்தான் நான் பன்னிரண்டு வருடமாக பணியாற்றினேன். 


படிப்பறிவு இல்லாத ஒரே காரணம் தான் இந்த பாவப்பட்ட தலித் இனத்தை மிக மோசமான ஒரு கட்டத்திற்கு அன்றிலிருந்தே கொண்டு சென்றிருக்கிறது. 

இவர்கள் வரலாற்றை ஆராய்ந்திருந்தால் இந்த ஆர்.எஸ்.எஸ்ஸின், பார்ப்பன சுயநலத்தின் தெளிவான தோற்றம் இவர்களுக்கு அன்றே தெரிந்திருக்கும். அது தெரியாததால் இன்றும் இந்த பார்ப்பன வெறியர்களின் அடியாட்களாகவும் வாழ்ந்து வருகிறார்கள். 

இந்து மதம் காப்போம்; இந்து மதம் காப்போம்; என்று சொல்லிக்கொண்டு உரிமை கொண்டாடி வருகிறார்களே? 

இவர்கள் எப்போது இந்து நடை முறைப்படி வாழ்ந்தார்கள்? 

டாக்டர் அம்பேத்கார், ஸ்ரீநாராயணன் குரு, அய்யங்காளி, ஐயப்பன், எம்.எல்.சி., வள்ளுவர் இவர்களது வாழ்க்கை முறையெல்லாம் (இவர்களுக்கு)தேவையில்லை. 

இவர்களெல்லாம் இந்து மதத்தில் இருந்து கொண்டு இப்படியா வாழ்ந்தார்கள்?. 

முஸ்லிம்களையும் கிறிஸ்தவர்களையும் எதிர்க்க வேண்டும் என்று இவர்கள் சொல்லிக்கொடுத்தார்களா? 


இவர்களுக்கெல்லாம் வராத இந்து பற்றுதான் உங்களுக்கு தோன்றியிருக்கிறது? 

சாகாவில் இந்த தியாகிகளின் வாழ்க்கை முறைகளைப் பற்றி போதிக்காமல் இவர்கள் போதிப்பதெல்லாம் இந்து வெறிபிடித்த சுயநலம் கொண்ட பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஹெட்கேவர், வீர சாவர்கர், ராணாபிரதாப், அரவிந்தன் இவர்களது வாழ்க்கை முறையைத்தான் போதிப்பார்கள். 

தியாகி அம்பேத்கர் தலித் இனத்தை ஒருங்கிணைப்பதற்காக இந்து மதத்தில் தலித் இனத்தவர்களுக்கும் தனி உரிமை உண்டு என்று போதிப்பதற்காக 1956 ல் இந்து கோர்ட் பில் என்ற ஓர் நியமத்தை(சட்டத்தை) சட்டசபையில் சமர்ப்பித்தார். 

இதை அன்று இந்த ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். 

நாம் இந்துவல்ல. ஒரு தலித் இனத்தவர்கள் ஒரு போதும் இந்துவாக முடியாது. இந்து மதத்திற்கே சொந்தக்காரர் அந்த பார்ப்பன வெறியர்கள்தான் என்று தான் அம்பேத்கர் மொழிந்தார்கள். 

இதையெல்லாம் சாகாவில் சொல்லிக் கொடுப்பதில்லை. 

அம்பேத்கர் ஒரு மகான் என்று கூறிகிறார்களே இவர்கள். ஏன் அம்பேத்கரின் கூற்றை இவர்கள் மறைக்கின்றார்கள்? 


எனது தலித் இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான்: 

ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர்களின் சூழ்ச்சி தெரியாமல் நீங்கள் செயல்படுகிறீர்கள். உங்களை படிப்பற்றவர்களாக்கி, பிற மக்களை கொன்று குவிப்பதற்கு உங்களை ஓர் ஆயுதமாகத்தான் இந்த ஆர்.எஸ்.எஸ். காரர்கள் பயன் படுத்துகிறார்கள். 

இந்த பார்ப்பன ஆதிக்கத்திலிருந்து விடை பெற வேண்டுமென்றால் நீங்கள் என்னைப்போன்று இஸ்லாம் என்ற கண்ணியத்தைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். அதில் ஒன்றில்தான் உங்களுக்கு மோட்சம்(விடுதலை) இருக்கிறது. குர்ஆனின் நிழலில்தான் உங்களுக்கு விடுதலை உள்ளது. 


அன்று இந்து மதத்தை எதிர்த்த டாக்டர் அம்பேத்கருக்கு என்னைப்போன்று இஸ்லாமிய சிந்தனை ஏற்பட்டிருந்தால் முதல் கணமே அந்த தலித் மக்களை, அடிமை இன மக்களை இந்த சத்திய மார்க்கத்திற்கு செல்ல வழி வகுத்து தந்திருப்பார். அவர் அதற்கு வலியுறுத்தியும் இருப்பார். 

இந்த சத்திய மார்க்கத்தின் நிழல் தெரியாததால்தான் அன்று அந்த மக்களை புத்த மதத்திற்கு அனுப்பினார். புத்தனை கடவுளாக ஏற்றுக்கொண்டதைத் தவிர விடுதலை என்ற கோட்பாட்டிற்கு அவர்கள் தள்ளப்படவில்லை. 

நான் ஆர்.எஸ்.எஸ்ஸில் ஆரம்பத் தொண்டனாக இருந்த போது, கேரளாவைச் சார்ந்த இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்கள் ஒரு மாநாட்டை நடத்தினார்கள். இந்த மாநாட்டின் தலைப்பு: "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்." இந்தத் தலைப்பைக் கண்ட நான் பீறிட்டு எழுந்தேன். 

அடக்கவியலாத ஆத்திரம் என்னுள். நாங்கள் எதிர்ப்பை காட்டினோம். 

"அரசே! இபுறாஹீம் சுலைமான் சேட்டையும், இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தைச் சார்ந்தவர்களையும் உடனேயே கைது செய்" என்று சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டினோம். 

நான் வேகந்தாழாமல் இந்தச் சுவரொட்டிகளை காவல் நிலையங்களிலேயே ஒட்டினேன். 

அப்போதும் என் வேகம் அடங்கவில்லை. காவல் நிலையங்களுக்கு உள்ளே சென்று இன்ஸ்பெக்டர் அறையில் அவருடைய தலைக்கு மேலையே ஒட்டினேன். 


ஆனால் இப்போது இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட பின்னர்தான் எனக்கு நன்றாகப் புரிகின்றது அது. இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தவர்கள் முன் வைத்த முழக்கம் எத்துனை அர்த்தம் நிறைந்துள்ளது என்பது. 

உண்மையில் இஸ்லாம் மட்டுமே இந்தியாவைக் காப்பாற்றிடும் வழி காட்டுதலை வழங்கிடும் மார்க்கம். அதைப் புறக்கணித்தால் அழிவும் அட்டூழியங்களுமே விஞ்சும். 


RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - பதிப்புரை.

தீவிர ஆர்.எஸ்.எஸ் முழுநேர ஊழியராக இருந்த வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை புத்தகவடிவில் "இலக்கியச் சோலை" வெளியீட்டகத்தார் வெளியிட்டிருந்தனர். 

அதில் வேலாயுதன் என்ற பிலால் அவர்களின் ஓர் சிறு நேர்காணலும் இடம் பெற்றுள்ளது. வேலாயுதன் என்ற பிலால் அவர்களை மு. குலாம் முஹம்மது அவர்கள் நேரடியாக கேரளம் சென்று சந்தித்து அந்த நேர்காணலையும் இந்த புத்தகத்தில் சிறு இணைப்பாக இடம் பெற செய்துள்ளார். இனி இப்புத்தகத்தின் பதிப்புரையாக மு. குலாம் முஹம்மது அவர்களின் ஒரு சில வரிகளும் வேலாயுதன் என்ற பிலால் அவர்களுடனான நேர்காணலும். 

பதிப்புரை 

1996 ன் இறுதியில் வேலாயுதன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட 
செய்தியை அறிந்தேன் 

அன்பு நண்பர் E .M. அப்துற் றஹ்மான் அவர்களிடம் பிலால் அவர்களைச் சந்திக்க வேண்டும் என்றேன். அவரும் இசைவு தந்தார். 

பிலால் அவர்களைப் பேட்டி கண்டேன். விடியல் (விடியல்வெள்ளி மாத இதழ்)ஜனவரி 1997 -ல் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்தேன். இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு எனத் தலைப்பிட்டிருந்தேன். என்னுடைய சந்திப்பின் போது இனி நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள் என்று நான் கேட்ட போது, என்னுடைய மக்களின் (தலித் பெருங்குடி மக்களின்) விடுதலைக்காகப் போராடப் போகிறேன் என பதில் தந்தார். 

உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்து மக்களிடையே புழங்கவிடுங்கள். அதைப் படித்து பலரும் பயன் பெறுவார்கள் என்றேன். அந்தப் பேட்டியையும் இத்துடன் இணைத்துள்ளேன். 

2003 -ல் நான் கேரளா சென்றிருந்த போது பிலால் அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றை வெளியிட்டிருக்கின்றார்கள் என்ற செய்தியைக் கேளிவிப்பட்டேன். நண்பர் E.M. அப்துற் றஹ்மான் அவர்களே ஒரு பிரதியைப் பெற்றுதந்தார்கள். அதையே தமிழில் தந்திருக்கின்றோம். 

தமிழில் மொழி பெயர்க்கும் பணியை விரைந்து செய்து முடித்தவர் தம்பி முஷம்மில். அவருடைய முதல் முயற்சி இது. இது போல் ஆக்கப்பூர்வமான பணிகள் பலவற்றை அவர் செய்ய இறைவனிடம் இறைஞ்சுகின்றேன். 

வழக்கம்போல் இலக்கியச் சோலையின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் தொடர்கின்றது. 

யா அல்லாஹ்; உன்னுடைய பாதையில் எடுத்து வைக்கும் இந்த முயற்சியை ஏற்றுக்கொள்வாயாக; 

நிறைகள் எல்லாம் நிறைந்த அல்லாஹ்வைச் சாரும்; குறைகள் எங்களைச் சாரும்; 

வஸ்ஸலாம் 
மு. குலாம் முஹம்மது. 

RSS.முழு நேர ஊழியனின்.. பேட்டி - 1. 
இருட்டிலிருந்து வெளிச்சத்திற்கு .

உங்களைச் சந்திக்க வேண்டும், வருகின்றோம் என்றோம் காலை 10 மணிக்கு. பகல் 12 மணிக்கு நேரம் கொடுத்தார். 

எப்போதும் சிலர் அவரைச் சந்திக்க வந்து கொண்டேயிருந்தார்கள். அதனால் தான் அவரால் கேட்டவுடன் நேரம் தந்திட இயலவில்லை. 

சென்றோம் நானும் தேஜஸ் என்ற மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரும். நாங்கள் அவரது வீட்டைத் தேடிக் கொண்டிருந்த போது…., 

எங்கள் பின்னால் இரண்டு முஸ்லிம் சகோதரர்கள் வந்தார்கள். எங்களைப் புரிந்து கொண்டவர்கள் போல் கேட்டார்கள்: "பிலால் சாஹிப் அவர்களைப் பார்க்கவா?" 

"ஆமாம்" என்றோம். 

அழைத்துச் சென்றார்கள். 

தொடராக இருந்த மூன்று சிறிய வீடுகளில் ஒன்றில் அவர் தன் இஸ்லாமிய வாழ்கையைத் தொடங்கியிருந்தார். அந்தச் சிறு வீட்டில் ஒரு சிறு பகுதி வரவேற்பறையாகச் செயல்பட்டது. 

இந்த சின்னப் பகுதிக்கு "தாருஸ்ஸலாம் " எனப் பெயர் வைத்திருந்தார். பெயர் வைத்துக் கொள்ளத்தக்க அளவில் உள்ள வீடில்லை அது. 

ஆனாலும் இஸ்லாம் தனக்குத் தந்த மன அமைதியைப் பிரதிபலிக்க, "அமைதியின் வீடு" எனப் பெயர் வைத்திருந்தார். ஆமாம்.. பல ஆண்டுகள் அலைக்கழிந்த கடினமான வாழ்க்கைக்குப் பின் இஸ்லாம் தந்த அமைதி; 

"பிலால் சாஹிப்", எங்களுக்கு வழி சொன்னவர்கள் குரல் கொடுத்தார்கள். 

நியாயமான உயரம் கொண்ட சங்கையான தாடியுடன் சடுதியாக வந்தார் பிலால் சாஹிப். உடனே கண்டுபிடிக்க இயலாத அளவுக்கு ஒரு பரம்பரை முஸ்லிமை விஞ்சும் தோற்றமும், பார்வையும்; எங்களுக்கு வழிகாட்டிய சகோதரர்கள் புடை சூழ எங்களை அழைத்துக் கொண்டு போய் அந்தச் சின்னக் குடிலின் வரவேற்பு அறையில் அமரச்செய்தார். அமர்ந்தோம். 

தேஜஸ் ஆசிரியரை எளிதாகப் புரிந்து கொண்டார். நான் ஒரு வழியாக அறிமுகமாகி முடித்தேன். 

பிலால் சாஹிப்: உங்கள் ஊர்? 

நான்: நாகர்கோவில். 

பிலால் சாஹிப்: நாகர்கோவிலில் எந்தப் பக்கம்? 

நான்: நான் சென்னையிலிருக்கின்றேன். 

பிலால் சாஹிப்: நான் நாகர்கோவில், காயல்பட்டினம் ஆகிய இடங்களுக்கு வந்திருக்கின்றேன். மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கிய பேச்சாளராக இருந்தேன். காயல்பட்டினம் நிகழ்ச்சியில் பி.டி.பி.யின் தலைவர் அப்துல் நாசர் மஹ்தனியால் கலந்து கொள்ள இயலவில்லை. நான் தான் தலைமைதாங்கி தலைமை உரையாற்றினேன். 

நான்: மிக்க மகழ்ச்சி… நீங்கள் இஸ்லாத்தை ஏற்றக்கொண்ட வரலாற்றைச் சொல்லிட இயலுமா? 

பிலால் சாஹிப்: நான் ஹிந்துத்துவா அமைப்புகளில் மிகவும் தீவிரமாகப் பணியாற்றியவன். அவர்கள் எங்களுக்குச் சொல்லித் தந்த பாடங்களின் வழி முஸ்லிம்களை வெறுக்கக் கற்றுக் கொண்டேன். 

என்னுடைய வெறுப்பு என்பது சாதாரணமாக இந்து தீவிர அமைப்புகளில் இருப்பவர்கள் கொள்ளும் வெறுப்பல்ல. நான் கொண்ட வெறுப்பு மிகவும் கடுமையானது. 

முஸ்லிம்களைக் கண்டால் நான் அளவுக்கு மீறி வெறுப்பைக் கொட்டுவேன். நீங்கள் ஆட்சேபிக்கவில்லையென்றால் சொல்வேன். 


நான்: கொஞ்சமும் குறைக்காமல் சொல்லுங்கள். 

பிலால் சாஹிப்: எனக்கு சொல்லித் தந்த பாடங்களின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கு இந்த நாட்டில் வாழ்ந்திட எந்த உரிமையும் இல்லை என்றே நான் நினைத்தேன். 

அவர்களை இங்கே வாழவிட்டவர்கள் மிகப் பெரிய தவறையே செய்து விட்டார்கள் என்று கருதினேன். 

தொடர்ந்து தந்த பயிற்சிகளால் என்னைப் போன்றவர்கள் இஸ்லாத்தைப் பற்றியும், முஸ்லிம்களைப் பற்றியும் வெறுப்பு மட்டும்தான் கொண்டோம் என்றில்லை; கோபமும், ஆத்திரமும் கொண்டோம்; முஸ்லிகளைத் தாவி, அழித்திடும் வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கினோம். 


இந்த ஹிந்து தீவிர இயக்கங்களில் நான் என்னை இணைத்துக் கொண்டிருந்த காலங்களில், தாழ்த்தப்பட்ட மக்களின் எதிர்காலம் ஹிந்துத்துவாவில்தான் இருக்கின்றது என நம்பினேன்; அதற்காகக் கடுமையாக உழைத்தேன். 

நான் தாழ்த்தப்பட்ட குடுபத்தில் பிறந்தேன் என்பதோடு மட்டுமில்லாமல் நான் என் உழைப்பை நம்பியே வாழ்பவன். 

இருந்தாலும் என்னுடைய உழைப்பையும், அந்த உழைப்பில் உதிரம் சிந்திக் கிடைக்கும் சிறுகூலியையும் நான் ஹிந்துத் தீவிரவாத அமைப்புகளிலிருந்த போது அவற்றிற்காகச் செலவிட்டவன். 

இப்படி நான் வீறுகொண்டு உழைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. 

அவற்றுள் ஒன்று நான் முஸ்லிம்கள் மேல் கொண்ட வெறுப்பு,கோபம். 

ஆர்.எஸ்.எஸ்.ஸில் நான் காட்டிய ஈடுபாட்டால் பல்வேறு முக்கிய பொறுப்புகளில் அமர்த்தப்பட்டேன். 

மாநிலப் பொறுப்பாளர், பிரதேச பொறுப்பாளர் போன்ற முக்கிய பொறுப்புகளில் பணியாற்றியிருக்கின்றேன். 

அதேபோல் ஹிந்துத்வாவின் தொழிலாளர் அணியிலும் நான் பொறுப்பேற்றிருந்தேன். 

அங்கும் பம்பரமாய் பணியாற்றினேன். இங்கெல்லாம் நான் ஹிந்து மதத்தின் வணக்கங்களில் ஆழ்ந்த பக்தியுடன் ஈடுபட்டிருந்தேன். 

பணம் வேண்டும் என்றால் அங்கே ஒரு கடவுளை நோக்கி ஓட வேண்டியதிருக்கிறது. 

என் சமுதாயம் லோன் என்று கடன்பட்டே வாழ்ந்து பழகிப்போன சமுதாயம். ஆனால் பணத்திற்காக இருக்கும் கடவுளின் பற்று இவர்களின் மேல் இன்றளவும் விழுந்ததாகத் தெரியவில்லை. 

இந்தக் கடவுளைச் சந்தித்துக் கடன் கேட்கவே என் மக்களுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. 

அதேபோல் கல்விக்காக ஒரு கடவுளை வைத்திருகின்றார்கள். 

இந்தக் கடவுளையும் என் மக்கள் இன்றும் சந்திக்க உரிமை பெறவில்லை. 

வாங்கும் கடனில் வரும் தொல்லைகளுக்கும் அதுபோல் வரும் இதரதொல்லைகளுக்கும் ஒரு கடவுளை நியமித்திருக்கின்றார்கள். என் மக்களுக்கு என்று வரும்போது இந்தக் கடவுளும் இல்லை. 

இப்படிப் பிரச்சனைக்கொரு கடவுள் என வைத்துக் கொண்டு அலைவது சதாசர்வகாலமும் என்னை அழுத்தி வந்திருக்கின்றது. 
எனினும் நான் எல்லாம் சரியாகிவிடும் எதிர்வரும் நாட்களில் என்றிருந்தேன். 

ஆனால் எதுவும் உண்மையாகவில்லை. என் மக்களுக்கு விடுதலை என்பது ஹிந்துத்துவாவில் இல்லை என்பதை உணர்ந்தேன். 

ஜாதிப்பிரச்னைக்கு ஹிந்துத்துவாவில் தீர்வு இல்லை என்பதே உண்மை. 


இதற்கிடையில் நான் ஒருமுறை ஐய்யப்பன் கோயிலுக்குப் போக மாலை போட்டேன். 

நான் ஐய்யப்பன் பால் கொண்ட பக்தியால் என்னை ஐய்யப்பன் என்றே எல்லோரும் அழைப்பார்கள். நான் அங்கிருக்கும் போது முதலமைச்சர் அந்தஸ்தில் கருணாகரன் அங்கே வந்தார். நான் அது போது பி.ஜே.பி.யின் முக்கியஸ்தர்களில் ஒருவன் எனக்கருதப்பட்டவன். 

இது நான் ஆர்.எஸ்.எஸ்., பி.எம்.எஸ். மற்றும் பி.ஜே.பி. ஆகியவற்றிற்குத் தாரை வார்த்துத் தந்த உழைப்பால் ஏற்பட்ட ஏற்றம். 

தலைமை அமைச்சர் அங்கே வந்தார் என்பதற்காகப் பாமரர்கள் அங்கே புறக்கணிக்கப்பட்டார்கள்; புறந்தள்ளப்பட்டார்கள்; 
எனக்கு எதுவுமே புரியவில்லை. 

ஏன் ஆண்டவனின் சந்நிதானத்தில் இவ்வளவு பெரிய அநியாயம்? 
கடவிளின் முன்னால் கூட இங்கே சமத்துவமில்லையே என நான் அங்கலாய்ந்தேன். 

ஆண்டவனின் சந்நிதானத்தில் மனிதர்களில் மேலானவர்கள் - மேல் ஜாதிக்கார்கள் வந்தால் சிறப்புப் பூஜை; தங்கத் தட்டில், வெள்ளித் தாம்பாளத்தில் ஆரத்திகள்; 

என்னவர்கள் என்ன கண்டார்கள்? 

நான் பி.ஜே.பி.யில் வேட்பாளனாகக் கூட நின்றேன். கண்ணியம் என்பது எப்படி வரும் என் மக்களுக்கு? சலிப்புற்ற நான் பி.ஜே.பி.யில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போதே, தாழ்த்தப்பட்ட மக்களுக்காகத் தன்னை அர்ப்பணித்த டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பெயரில் ஓர் அமைப்பை ஏற்படுத்தினேன். 

அதன் பெயர் அம்பேத்கர் யுவசரணி. இந்த அமைப்பை பி.ஜே.பி.யால் சகித்துக்கொள்ள இயலவில்லை. 

அம்பேத்கரின் பெயரால் வரும் எதையும் அவர்கள் பொறுத்துக் கொள்வதாக இல்லை என்றே எனக்குப்பட்டது. 

எதிர்ப்புகள் வலுத்தது பி.ஜே.பி.யிலிருந்து நான் வெளியேறினேன். இது நடந்தது 1991 -ல். 

சுமார் இரண்டாண்டு காலம் நான் அம்பேத்கர் யுவசரணிக்காக என் மக்களின் ஈடேற்றத்திற்காகப் பணியாற்றினேன். 

என் மக்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநியாயங்களை ஆழ்ந்து கவணித்தேன். 

அவன் பிறக்கும் முன் தாயின் கருவிலேயே அடிமையாய் கிடக்கின்றான். 

அடிமையாய் வாழ்கின்றான்……….. 
அடிமையாய் மரிக்கின்றான்………… 

அவன் வாழும் சமயத்தில் அடிமையாய் அழிகின்றான்…… 

அவனுக்கு மதுவும், போதையுமே வாழ்க்கையாக அமைத்துத் தரப்படுகின்றது. 

அவன் இறந்த பின்னரும் அவனது புதை குழியில் சாராயத்தை தெளிக்கின்றார்கள். 

எங்கள் பெண்களை காலா காலத்திற்கும் அடிமைகளாகத் தங்கள் பாத்திரப் பண்டங்களைவிட கேவலமாக நடத்துகின்றார்கள். 


(தனது பெண்களைப் பற்றி பேசிடும் போது உணர்ச்சி வசத்தால் பல சொற்களைச் சொல்கின்றார். அவற்றை இங்கே விட்டு விடுகின்றோம். தன் மக்களின் விடுதலையைப் பற்றிப் பேசிடும்போது நமது முஹம்மது பிலால் உருக்கமாகவும், உணர்ச்சி வயப்பட்டும் பேசுகின்றார். தாழ்த்தப்பட்ட மக்களின் விடுதலையில் அவர் காட்டும் ஆர்வம் அலாதியானது) 

என் சமுதாய இழிவுகளைப் பற்றியும், அதன் விடுதலையைப் பற்றியும் நான் சிந்தித்துக் கொண்டிருந்த போதுதான் நாசர் மஹ்தனி எனக்கு அறிமுகமானார்கள். 

அமுக்கப்பட்ட மக்களின் - ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான குரல் நாசர் மஹ்தனியிடமும், அவருடைய இயக்கத்திலும் எதிரொலிக்கக் கண்டேன். 

ஆகவே நான் நாசர் மஹ்தனியின் கூட்டங்களைத் தொடர்ந்து கவனிக்கலானேன். 

அவருடைய உத்வேகம் முஸ்லிகள், தாழ்த்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள் இப்படிப் பலரும் அங்கம் வகிக்கும் ஓர் பெரும் இயக்கமாக பி.டி.பி. வளர்ந்து வருவதைக் கண்டேன். 

என்னையும் அந்த இயக்கத்தில் இணைத்துக் கொண்டு பணியாற்றினேன். 

என் இயல்பான, எதார்த்தமான ஈடுபாடு எல்லோரையும் கவர்ந்தது. பி.டி.பி.யிலும், நான் மெல்ல மெல்ல உயர்ந்தேன். 

பி.டி.பி.யின் தொண்டர்கள் என்னிடம் பாரபட்சமின்றி காட்டிய பாசம் என்னுள் உண்மையான அன்பைப் பிரவாகம் எடுத்து ஓடச்செய்தது. 

பி.டி.பி.யிலுன், நான் கொட்டிய உழைப்பால் அதன் முன்னணி தலைவர்களுள் ஒருவனானேன். 

இப்போது நான் முஸ்லிகளோடு நித்திய வாழ்க்கை தொடங்கிவிட்டேன். 

அதாவது நான் ஆரம்பத்தில் எந்த முஸ்லிகளை வெறுப்பதற்குக் கற்றுத் தரப்பட்டேனோ அந்த முஸ்லிகளை நான் இப்போது நேரில் சந்திக்கின்றேன். 

எந்த முஸ்லிம்களை இங்கே இந்த நாட்டில் வாழவிட்டிருப்பது தன்மானக் குற்றம் என எண்ணினேனோ அந்த முஸ்லிகளோடு நான் வாழத் தொடங்கி இருகின்றேன். 


(இதைச் சொல்லிக்கொண்டிருக்கும்போது ஒரு வினாவைத் தொடுக்கின்றார்) 

நான் என் வாழ்க்கையைப் பற்றி மேற்கொண்டு சொல்வதற்கு முன்னால் உங்களிடம் ஒரு கேள்வி: 

நாசர் மஹ்தனியைப் பற்றி உங்கள் கருத்தென்ன ? 

நாசர் மஹ்தனி ஏனைய முஸ்லிம் அரசியல் இயக்கங்களை போல் ஓர் இயக்கத்தை நடத்திக் கொண்டிருப்பவர். விஷேஷமாகச் சொல்வதற்கு எதுவுமில்லை. மேற் கொண்டு சொல்லுங்கள். 

நாசர் மஹ்தனி எனக்கு இஸ்லாத்தைப் பற்றியத் தெளிவுகளைத் தந்தவர். அதனால் நான் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கின்றேன். 
P.D.P.யின் தலைவர் நாசர் மஹ்தனியின் பெயரைக் குறிப்பிடும் போதெல்லாம் முஹம்மத் பிலால் தன்னுடைய நன்றிப் 
பெருக்கைக் காட்டுகின்றார். 

தான் இஸ்லாத்தில் இணைவதற்கு அதாவது நேர்வழி பெறுவதற்கு காரணமாய் இருந்தவர் நாசர் மஹ்தனி என்பதால் அவர் அவரை நன்றியோடும், கண்ணியத்தோடும் பார்க்கின்றார். 

நான் இதை அவரிடம் கேட்டும் விட்டேன். அவர் அதை ஒப்புக் கொண்டார். தனக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் நாசர் மஹ்தனி தனக்கும், தனது சமுகத்திற்கும் நேர்வழி காட்டியிருக்கின்றார் என்பதுதான் அவரது நன்றிப் பெருக்கிற்குக் காரணம். 

[மீண்டும் தொடர்ந்தார்] 

நான் பி.டி.பி.யில் சேர்ந்தபோது முஸ்லிம்களோடு வாழ ஆரம்பித்திருந்தேன். 

அதாவது நான் முஸ்லிம்களை ஊன்றிக் கவனித்தேன். அவர்களோடு வாழ்ந்தேன். 

பி.டி.பி யின் பணிகளுக்காக நான் வெளியூர் சென்றபோதெல்லாம் பி.டி.பி யின் பிரதிநிதிகள் என்னை வரவேற்றார்கள். 

முஸ்லிம்கள் அதிலும் பஞ்சையர்கள் - அன்றாடம் காய்ச்சிகள் யாதார்த்தமாக என்னை வரவேற்றார்கள். அவர்கள் உழைத்து ஈட்டிய பொருளில் எனக்குத் திண்பண்டங்கள் வாங்கித் தருவார்கள். இவர்கள் காட்டிய யதார்த்தம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. 

அது வரை நான் எங்கேயும் சந்திக்காக ஒரு எதார்த்தத்தை இந்தத் தொண்டர்களிடம் சந்தித்தேன். 

அதே போல் நாசர் மஹ்தனி கண்ணியப்படுத்தப்படும் போதும், அவர் கற்றவர்களாலும், செல்வந்தவர்களாலும் விருந்து வைத்து உபசரிக்கப்படும் போதும் நான் விலகி நிற்க வேண்டியதில்லை. நான் அவர்களோடு இயைந்து இணைந்து நிற்க முடிந்தது; உண்ண முடிந்தது; உறங்க முடிந்தது. 


அதன் பின்னர் முஸ்லிம்களால் மிகவும் அதிகமாக மதிக்கப்படும் பிலால் (அல்லாஹ்வின் ஆசியும் அருளும் அவர்கள் மீது உண்டாக்கட்டும்) அவர்களின் வரலாற்றைக் கற்றேன். 

முஹம்மது(ஸல்)அவர்கள் பிலால்(ரலி)அவர்களை வைத்திருந்த விதமும், அவர்கள்பால் கொண்டிருந்த அன்பும் என்னை மிகவும் நெகிழச் செய்தது. இன்றளவும் பிலால் (ரலி) அவர்கள் பால் முஸ்லிம்கள் காட்டும் நேசத்திற்கும், பாசத்திற்கும் அளவேயில்லை. இது என்னுள் பல நிரந்தர மாற்றங்களைக் கொண்டுவந்தது. 

தொழுகையில் காட்டும் சமாதானம் அல்லாஹ்வின் முன் அனைவரும் சமம் என்ற எண்ணத்தை என்னுள் ஆழப்பதிய வைத்தது. 

இஸ்லாத்தை ஏற்பது என முடிவு செய்தேன். சில நூல்களைக் கற்றேன். மனதால் மாறினேன். இறைவனின் அடியானாக, இது நடந்தது இரண்டு மாதங்களுக்கு முன். 

நான் முஹம்மது பிலால் ஆனேன். என் மனைவி ஃபாத்திமா ஆனாள். என் முதல் குழந்தை ஷாகிதா ஆனாள். இரண்டாவது குழந்தை தஸ்லீம் ஆனாள். 


இப்போது நான் குழிவேலிப் புலியில் இருக்கிறேன். 

இங்கே ஒரு பள்ளிவாசல் இருக்கின்றது. இந்த பள்ளிவாசலுக்கு எதிர்புறத்தில் ஒரு முஸ்லிம் இருக்கின்றார். அவருடைய வசதியையும், வளத்தையும் வைத்துப் பார்க்கும் போது நான் எந்த விதத்திலேயும் அவருக்கு ஈடாக மாட்டேன். 

ஆனால் பள்ளியில் தொழப்போகும்போது நான் முன்னே சென்றால் நான் முன் வரிசையில் தொழுவேன். அவர் எனக்குப் பின்னால் நின்று தொழுவார். அவர் அல்லாஹ்வை ஸஜ்தா செய்திடும் போது என் கால் அவர் தலையைத் தொடும். 

இதில் அல்லாஹ்வைத் தொழுவதில் அணிவகுத்து நிற்பதில் பின்னே நிற்பவன், முன்னே நிற்பவன் என்ற எண்ணங்கள் யாரிடமுமில்லை. 

மாறாக அந்தத் தனவந்தர் என்னைப் பார்த்திடும் போதெல்லாம் மிகவும் மகிழ்ச்சியடைகின்றார். கட்டித் தழுவுகின்றார். உடன் பிறந்த ஓர் சகோதரனாகவே என்னை நடத்துகின்றார். 

இது என்னுள் நிரந்தர களிப்பை ஏற்படுத்துகின்றது. 


பதிந்தது அபூ சுமையா 

முஸ்லிகள் – இஸ்லாம்தான் இந்தியாவின் அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க வல்ல மார்க்கம் என்பதை எடுத்துச் சொல்லிடவேண்டும். 

இந்த நிலையில் "இந்தியாவின் விடுதலை இஸ்லாத்தின் மூலம்" எத்துணை பொருள் செறிந்த, காலத்திற்கேற்ற முழக்கம் என்பதை உணர்ந்தேன். 


அம்பேத்கர் "மதமாற்றம் தான் தீண்டாமைக்குத் தீர்வு" எனக் குறிப்பிட்டார். அம்பேத்கர் இஸ்லாத்திற்கு வந்திருக்கவேண்டும். அப்போது இருந்தவர்கள் இஸ்லாத்தைச் சரிவர அவரிடம் எடுத்துச் சொல்லவில்லை என்றே எனக்குப் படுகின்றது. 

நான்: "இல்லை" (நான் குறுக்கிட்டேன்.) 

"அம்பேத்கருக்கு அழைப்பே விடுக்கப்பட்டது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளச் சொல்லி ஹைதராபாத் நிஜாம் அவர்கள் அம்பேத்கர் அவர்களுக்கும் அவர்களோடு இஸ்லாத்திற்கு வருபவர்களுக்கும் எல்லா உதவிகளையும் செய்திட முன் வருவதாகச் சொன்னார். 

டாக்டர் அம்பேத்கர் அவர்கள் ஒரு கல்வி கூடத்தை ஆரம்பிக்க முன் வந்த போது, அதற்கான இடத்தை அவர் பெறுவதில் முஸ்லிம்கள் பெருமளவில் உதவி செய்தார்கள். 

தலித் மக்களை மட்டுமே கொண்ட அந்தக் கல்விக் கூடத்தில் பாடங்கள் பயிற்றுவிக்க உயர்ஜாதி ஆசிரியர்கள் முன்வாராத போது முஸ்லிம்கள் முன் வந்தார்கள். 

அதே போல்தான் புகழ்பெற்ற பூனா ஒப்பந்தத்திற்கு முன்னால் நடை்பெற்ற வட்டமேஜை மாநாட்டில் ஜின்னா அத்தனை எதிர்ப்புகளையும் பொருட்படுத்தாமல், முஸ்லிம்களுக்குக் கிடைக்கவிருந்த சலுகைகளை விட்டுக்கொடுத்திடவும் தயாராக இருந்தார். 

இதற்கு அம்பேத்கர் அவர்களும் நன்றி சொல்லியுள்ளார்கள்"


என்று அவரிடம் விளக்கிவிட்டு, "நீங்கள் அடுத்து என்ன செய்வதாகத் திட்டம்?" என்று கேட்டோம். அவர் தொடர்ந்தார். 

பிலால் சாஹிப்: அடுத்து என் மக்களை விடுவிக்க என்னால் இயன்ற அளவு எல்லாவற்றையும் செய்திடத் தயாராக இருக்கின்றேன். 

நான் திண்ணையில் தூங்குகின்றேனா, உண்கின்றேனா என்பவையெல்லாம் எனக்குப் பொருட்டல்ல. 

என் மக்களின் விடுதலைக்குப் பாடுபட்டிட சித்தமாக இருக்கின்றேன். 

நான்: உங்கள் வாழ்க்கை ஒரு வித்தியாசமான வரலாற்றைக் கொண்டது. முஸ்லிகளையும் இஸ்லாத்தையும் வெறுக்கக் கற்றுக் கொண்டு, முஸ்லிகளுக்கு எதிராகத் தீவிரமாகப் பணியாற்றிட முன் வந்து இறுதியில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளீர்கள். 

இதற்கு முன்னால் தமிழகத்தில் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றார்கள். 

பகுத்தறிவு பாசறைகள் என்று பறைசாற்றப்பட்டவற்றிலிருந்து வந்ததால் அவர் இஸ்லாத்தை ஏற்றுகொண்டது ஒரு புது வரலாற்றையும், அனுபவத்தையும், அணுகுமுறையையும் தந்தது. 

அதன் பின்னர் அப்துல்லாஹ் அடியார் அவர்கள் வழி இஸ்லாத்தை அறிந்து அதனை ஏற்றுக்கொண்ட கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள், கம்யூனிசத்திலிருந்து வந்தார். அஃது ஒரு புதிய வரலாற்றையும் அனுபவத்தையும் தந்தது. 

நீங்கள் ஹிந்துத்வாவிலிருந்து வந்திருப்பது பிறிதோர் புது அனுபவத்தைத் தருகின்றது. 

உங்கள் வாழ்க்கையை எழுதி மக்களுக்குச் சொன்னாலே அஃதோர் விடுதலை வேட்கையை ஏற்படுத்துமே? 

பிலால் சாஹிப்: ஆமாம். ஆனால் என்னால் அமர்ந்து எழுதுவது இயலாது. நான் களத்தில் உழைத்துப் பழக்கப்பட்டவன். நீங்கள் யாரையாவது அமர்த்தினால் நான் சொல்கின்றேன். அவர் எழுதித் தரலாம். 

இந்தப் பணிக்காக தேஜஸ் மலையாளப் பத்திரிகையின் ஆசிரியரை நியமித்து விட்டு வந்தேன். 

எங்களை முதலில் அழைத்துப்போய் பிலால் அவர்களின் வீட்டைக் காட்டிய இரண்டு சகோதரர்களும் பிலால் அவர்களுக்கு ஒரு பாதுகாப்பு அரணாகவே இருந்து வருகிறார்கள் என்பதைத் தெரிந்தோம் பின்னால். 

முஸ்லிகள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். நம்மைச் சுற்றியிருக்கும் முஸ்லிமல்லாதவர்கள் அனைவரும் நாம் இஸ்லாத்தை அவர்களிடமிருந்து மறைத்து விட்டதாகவே கருதுகின்றனர். 

அவர்களாக இஸ்லாத்தைப் புரிந்து கொண்டு, இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வைப் புரிந்து கொள்ளும்போது நம்மீது வேகப்படுகின்றார்கள். 


குறிப்பாக நாம்தான் உண்மையான தேசியவாதிகள் என வாதிடும் போது, நாம் தான் மதச் சார்பின்மையின் திரு உருவங்கள் எனக் காட்டிக் கொள்ளும் போதும், எங்களுக்கும் உங்கள் அரசாங்கத்தில் ஏதேனும் கொடுங்கள் என யாசிக்கும்போதும் அவர்களுக்கு இஸ்லாம் தெரியாமலேயே போய்விடுகின்றது. 

இவற்றிற்கெல்லாம் மேலாக நாம் இஸ்லாத்தின் போதனைகளின்படி வாழ்ந்து காட்டுபவர்களாக இருந்திட வேண்டும். 

இஸ்லாத்திற்கு வருவது என்பது ஒளியை நோக்கி வருவதாகும். 

அப்படியானால் முஸ்லிம்கள் ஒளிக்கு - வெளிச்சத்திற்கு சொந்தக்காரர்கள் என்று பெயர் பெற்றவர்கள். நாம் இருட்டிலிருப்பவர்களிடம் யாசகம் கேட்டால் நாமும் ஒளியை மறைத்தக் குற்றத்திற்கு ஆளாவோம்....! 

அல்ஹம்துலில்லாஹ்! (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) 

நிறைவு பெற்றது. 

RSS.முழு நேர ஊழியனின் வாழ்க்கைப் பயணம் - 
பதிந்தது: அபூ சுமையா 

No comments:

Post a Comment