Wednesday, January 11, 2012

மீண்டும் அமெரிக்காவிடம் கையேந்தும் இந்தியா!


ஈரான் மீதான அமெரிக்காவின் தடை இந்தியாவை பெருமளவில் பாதிக்கப்போகிறது. சவூதி அரேபியாவிற்கு அடுத்து இந்தியாவுக்கு அதிகமாக கச்சா எண்ணெயை அளிப்பது ஈரான் ஆகும். நம் நாட்டிற்கு தேவையான சுத்திகரிக்கப்படாத 80 சதவீத கச்சா எண்ணெயும் வெளிநாட்டில் இருந்துதான் இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் 12 சதவீதம் ஈரானிடமிருந்து வாங்குகிறோம்.
ஈரானுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா கையெழுத்திட்ட மசோதாவில் ஈரான் மத்திய வங்கியுடன் நிதியியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உள்நாட்டு, வெளிநாட்டு நிதி நிறுவனங்கள் மீது தடை விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு முன்பே ஈரானின் ஷிப்பிங் லைசன்சுடன் தொடர்புடைய 10 கப்பல் போக்குவரத்து நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்த 10 நிறுவனங்களில் ஒன்று இந்தியா-ஈரான் கூட்டு நிறுவனமான ஈரானோ ஹிந்த் ஆகும். புதிய தடை விதிப்பின் மூலம் இந்தியா கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ரஷ்யா, சீனா நாடுகளைப் போல இந்தியாவிடம் ஈரானுக்கு எதிரான தடையில் அணிசேர அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்பது அமெரிக்காவின் கோரிக்கை. அதேவேளையில், தடையில் சில தளர்வுகளை ஏற்படுத்தக்கோரி இந்தியா அமெரிக்காவை அணுகியுள்ளது.
தற்போதைய நெருக்கடிக்கு காரணம் இந்தியா அல்ல. ஈரானுக்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் தனிப்பட்ட விருப்பங்களே ஆகும். ஆனால், ஈரானிடம் இருந்து அதிகமாக எண்ணெயை எதிர்பார்க்கும் இந்தியாவுக்கு அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளின் கோரிக்கையை கடைப்பிடிக்க நடைமுறையில் ஏராளமான சிரமங்கள் உள்ளன. ஆனால், ஒரு உண்மையை எடுத்துக்கூறாமல் இருக்க இயலாது. நடைமுறையில் சிரமங்கள் ஏதும் இல்லையெனில் அமெரிக்காவின் விருப்பத்தை பூர்த்தி செய்வதில் இந்திய அரசு முன்னணியில் நின்று இருக்கும். ஏனெனில் அவ்வளவு தூரம் அமெரிக்காவிற்கு அடிமை விசுவாசத்தை காட்டி வருகின்றார்கள் நமது ஆட்சியாளர்கள். குறிப்பாக பொருளாதார, வெளிநாட்டு கொள்கைகளில் கடந்த சில ஆண்டுகளாக அதனை நாம் கண்டு வருகிறோம்.
இந்தியா-அமெரிக்கா அணு சக்தி ஒப்பந்தத்திற்காக ஈரானுக்கு எதிரான நிலைப்பாட்டை ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை இந்தியா எடுத்துள்ளது. எரி சக்தி துறையில் கூட அமெரிக்காவை சார்ந்திருக்கும் சூழலுக்கு அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவை கொண்டு செல்கிறது. இவற்றையெல்லாம் அடையாளம் கண்டு அமெரிக்காவின் விருப்பத்தை விட நமது விருப்பங்களுக்கு நமது அரசு முன்னுரிமை அளித்திருக்க வேண்டும். ஆனால், அதனை செய்ய நமது ஆட்சியாளர்கள் முன்வரவில்லை. அதற்கும் மேலாக இந்தியாவின் துவக்க கால கொள்கையான அணிசேராக் கொள்கையை கைவிட்டது இந்தியாவின் மீதான நேர்மைக்கு களங்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரான் மீது தடைகளை விதிக்க பொய் காரணங்களை கூறி அமெரிக்கா ஐ.நாவில் முயற்சிகளை மேற்கொண்ட வேளையில் இந்தியாவின் நிலைப்பாடு பலகீனமானதாக இருந்தது. சுருக்கமாக கூறினால், இந்தியாவின் வெளிநாட்டு க்கொள்கையில் அமெரிக்க சார்பு கலந்ததன் காரணமாக ஈரான் தடை விவகாரத்தில் அமெரிக்காவிடம் கெஞ்சும் நிர்கதியான சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரான் எரிவாயு குழாய் திட்டம் நமது நாட்டிற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக இருந்தது. ஆனால், அங்கேயும் அமெரிக்காவின் நிர்பந்தங்களின் காரணமாக அதிக தூரம் முன்னேற முடியவில்லை.
அமெரிக்காவிடம் பயம்; அதேவேளையில் ஈரானின் எண்ணெயும் வேண்டும். இத்தகையதொரு நெருக்கடி இந்தியாவை வாட்ட துவங்கி பல நாட்கள் ஆகிவிட்டன. கடந்த பல வருடங்களாக ஈரானுடன் வர்த்தக நடவடிக்கைகளை ஏசியன் க்ளியரிங் யூனியன் என்ற அமைப்பின் மூலமாகவே இந்தியா நடத்தி வந்தது. அமெரிக்காவிற்கு அஞ்சி இந்திய ரிசர்வ் வங்கி அந்த அமைப்பை கைகழுவியது. இந்நடவடிக்கை ஈரானுடனான வர்த்தகத்தை பெருமளவில் பாதித்தது. வாங்கும் எண்ணெய்க்கான பணத்தை அவர்களுக்கு கொடுக்க முடியாத சூழலில் எண்ணெய் வர்த்தகம் ஸ்தம்பிக்க துவங்கியது. பின்னர் ஒரு ஜெர்மன் வங்கி நியமிக்கப்பட்டது. அமெரிக்காவின் தலையீட்டின் காரணமாக அந்த ஜெர்மன் வங்கியும் பின்வாங்கியது. தற்பொழுது ஒரு துருக்கி வங்கி மூலமாக ஈரானுக்கு பணத்தை இந்தியா அனுப்பி வருகிறது. இங்கேயும் அமெரிக்க-ஐரோப்பிய யூனியனின் நெருக்கடி துவங்கி விட்டது. தினமும் மூன்றே முக்கால் லட்சத்திற்கும் மேற்பட்ட பீப்பாய் சுத்திகரிக்கப்படாத எண்ணெயை ஈரானில் இருந்து பெற்றுவரும் இந்தியாவிற்கு அமெரிக்காவிடம் சில சலுகைகளுக்காக கெஞ்சவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா தற்காலம் ஏதேனும் சலுகைகளை வழங்கினால் கூட அதற்கு பதிலாக வேறு வகையில் ஈடு செய்யப் போவது உறுதி.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் இந்திய அரசின் அமெரிக்க சார்பால் நாட்டிற்கு கிடைக்கும் பலன் பூஜ்ஜியமாகும். ஆனால், அமெரிக்காவோ அரசியல், பொருளாதார, வர்த்தக துறைகளில் இந்தியாவிடமிருந்து ஆதாயம் அடைந்துவருகிறது.
அமெரிக்காவின் நோக்கங்களையும், ரகசிய திட்டங்களையும் இந்திய அரசு அவ்வப்போது அடையாளம் கண்டுகொள்ளாமல் அலட்சியப் போக்கை கடைப்பிடித்ததுதான் தற்போதைய நெருக்கடிக்கு காரணமாகும். அமெரிக்க ஏகாதிபத்தியம் கடந்த நூற்றாண்டில் நடத்திய போர்கள் அனைத்தும் அவர்களின் சொந்த விருப்பங்களுக்கு ஆகும். கடைசியாக போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து ஈராக் என்றதொரு தேசத்தை சீரழித்தார்கள். அதே தந்திரத்தை தான் ஈரான் மீது தற்பொழுது சாட்டுகிறார்கள். பேரழிவு ஆயுதங்களை சதாம் ஹுஸைன் சேகரித்து வைத்துள்ளார் என்ற போலி குற்றச்சாட்டை முன்பு ஈராக்கின் மீது சாட்டிய அமெரிக்காதான் தற்பொழுது ஈரானின் மீது அணுகுண்டு தயாரிப்பதாக குற்றம் சாட்டுகிறது.ஆனால் அமெரிக்காவோ 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அணுகுண்டுகளை தயாரித்து பாதுகாத்து வருகிறது.
ஜப்பானில் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை அணுகுண்டுகளை வீசி கொடூரமாக கொலைச்செய்து எதிர்கால சந்ததியினரையும் துயரத்தில் ஆழ்த்திய அமெரிக்கா என்ற சர்வதிகார தேசம் ஒருபோதும் அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில்(என்.பி.டி) கையெழுத்திட்டதில்லை. ஆனால் ஈரான் கையெழுத்திட்டுள்ளது.ஆகையால் அவர்களுக்கு உள்நாட்டு தேவைகளுக்காக அணுசக்தியை தயாரிக்கும் உரிமை உள்ளது.
என்.பி.டியில் கையெழுத்திடாத இஸ்ரேல் அணுகுண்டு தயாரித்தது குறித்து பிரச்சனையை கிளப்பாத அமெரிக்கா எரி சக்திக்கு கூட அணுசக்தியை ஈரான் உபயோகிக்கக் கூடாது என்ற பிடிவாதத்தில் உள்ளது.அமெரிக்காவிற்காக நேர்மையை இழந்த இந்தியா உள்ளிட்ட நாடுகளை தனக்கு சேவகம் புரியும் அடிமை நாடுகளாகவே அந்நாடு கருதுகிறது.இதன் காரணமாக அமெரிக்காவின் பொய்ப் பிரச்சாரங்களை அடையாளம் காட்டவோ எதிர்க்கவோ இந்த நாடுகளால் இயலாமல் போனது. தற்போதைய நெருக்கடியை இந்தியா சமாளித்தாக வேண்டும். அதற்கு தேவை உண்மையை அங்கீகரிக்கும் துணிச்சலாகும்.
தற்பொழுது அமெரிக்காவுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளும், ஈரானுடன் விவாதிப்பதும் பலனை தரலாம். அமெரிக்கா சில தற்காலிக சலுகைகளை அளிக்கலாம்.ஈரானோ, தங்களுக்கு கிடைக்கவேண்டிய எண்ணெய்க்கான பணம் டாலரிலும், யூரோவிலும் கிடைக்காது என்பதால் ரூபாய்  அல்லது ரூபிள் மூலமாக ஏற்றுக்கொள்ளும். ஆனால் இவையெல்லாம் தற்காலிக் ஆறுதலாகும்.
நீண்டகால அடிப்படையில் இந்தியா தமது கொள்கைகளை மறுபரிசீலனை செய்தே தீரவேண்டும்.இந்தியாவின் கொள்கைகளை தீர்மானிப்பது வாஷிங்டனில் யுத்த பிரபுக்களும், கார்ப்பரேட் முதலாளிகளும், வெள்ளை மாளிகை குமஸ்தாக்களும் அல்லர் என்பதை வெளிப்படையாக அறிவிக்கும் துணிச்சல் இந்திய ஆட்சியாளர்களுக்கு உருவாகவேண்டும். அதன் அடிப்படையில்தான் உறுதியான கொள்கைகளை இந்தியாவால் வகுக்க முடியும்.


நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் கன்னியாஸ்திரி!


நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி!
Posted By நிர்வாகி On June 27, 2008 (5:40 pm) In இயேசு கிறிஸ்து, ஏன் முஸ்லிம் ஆனேன்?

கட்டுரைப் பற்றிய சிறு குறிப்பு: - இது முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono அவர்கள் நான் ஏன் இஸ்லாத்தை தழுவினேன் என்று விளக்கிய வீடியோ தொகுப்பிலிருந்து எழுத்தாக்கம் செய்யப்பட்டதாகும்.

வீடியோ வெளியீட்டாளர் : Truth Vision World wide

 
நான் ஏன் முஸ்லிம் ஆனேன்? - ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ கன்னியாஸ்திரி Irena Handono

நான் ஆறு வயதாக இருக்கும் போது கிறிஸ்தவ தேவாலயத்தைச் சேர்ந்த பள்ளி ஒன்றுக்கு கத்தோலிக்க கிறிஸ்தவத்தைப் பற்றி பயில்வதற்காக அனுப்பப்பட்டேன். என்னுடைய படிப்பிற்கான முழு செலவுகளையும் அந்த தேவாலய நிர்வாகவே பொறுப்பு ஏற்றுக் கொணடிருந்தது. ஏனென்றால் என்னுடைய பெற்றோர்கள் இந்தோனேசியாவில் உள்ள மிகப்பெரிய சர்ச்சுகளில் ஒன்றின் அமைப்பாளர்கள் (Organisors) ஆவார்கள்.

பின்னர் பருவ வயதில் தேவாலயத்தைச் சேர்ந்த “Liaision Maria” என்ற கல்வி நிறுவனத்தில் சேர்ந்தேன். Maria என்பது ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) அவர்களைக் குறிக்கும். இந்த நிறுவனத்தின் முக்கிய குறிக்கோள் என்னவெனில் “Stray Sheeps” என்று சொல்லப்படக் கூடிய “காணாமல் போன ஆடுகளை” தேடுவதாகும். “காணாமல் போன ஆடுகள்” என்று அவர்கள் குறிப்பிடுவது, நம்முடைய உணவுக்காகவும் ஈதுல்-அல்ஹா பெருநாள் குர்பானி கொடுப்பதற்காக அறுக்கிறோமே அந்த ஆடுகளை அல்ல. மாறாக “காணாமல் போன ஆடுகள் என்று அவர்கள் குறிப்பிடுவது, “கிறிஸ்தவர்களல்லாத மற்றவர்களை”. அதாவது இந்த பள்ளி வாசலில் குழுமியிருக்கும் நம்மைப் போன்ற முஸ்லிம்களை அவர்கள் “காணாமல் போன ஆடுகள் என்று குறிப்பிடுகிறார்கள். நம்மையெல்லாம் கிறிஸ்தவர்களாக்கும் ஒரு மிகப்பெரும் செயல் திட்டம் அவர்களிடம் இருந்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடம் கழித்த பிறகு நான், இந்தோனேசியாவில் மிக அதிக அளவில் றுப்பினர்களையுடைய ஒரு கிறிஸ்தவ அமைப்பின் தலைவியானேன். பின்னர் கன்னியாஸ்திரி ஆவதற்காக ஒரு கிறிஸ்தவ தேவாலயத்தில் சேர்ந்தேன்.

சகோதர சகோதரிகளே! நான் ஒரு முஸ்லிம் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஒரு போதும் இருந்ததில்லை. நான் கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியது. கன்னியாஸ்திரியாக வேண்டுமென்ற என்னுடைய எண்ணம் நிறைவேறியதிலிருந்து, அல்லாஹ் அவனுடைய அடிமையாகிய எனக்கு நேர்வழி காட்டத் துவங்கினான்.

பின்னர் கிறிஸ்தவ பாதிரியார்கள் படிக்கும் மேற்படிப்பாகிய மதங்கள் மற்றும் தத்துவங்களைப் பற்றிய (Theology & Philosophy) உயர்ந்த படிப்பைப் படிப்பதற்காக நான் அனுப்பப்பட்டேன்.  அங்கு நான் மதங்களைப் பற்றிய ஒப்பாய்வு (Comparative Religion) பாடங்களைப் படித்தேன். இஸ்லாத்தைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டேன். ஆனால் உண்மையான இஸ்லாத்தைப் பற்றி அல்ல! இஸ்லாம் என்பது மிக மோசமான மதம் என்று பயிற்றுவிக்கப்பட்டேன்.

“இஸ்லாத்தைப் பற்றி நீங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டுமானால் இந்தோனேசியாவிலுள்ள முஸ்லிம்களைப் பாருங்கள்” என்று எங்களுக்கு விளக்கினார்கள்.

இந்தோனேசியாவில்,

- ஏழைகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- முட்டாள்களாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- வெள்ளிக் கிழமை தொழுகையின் போது தங்களின் காலனிகளை தொலைக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- ஒற்றுமையாக இருப்பதற்கு மறுக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

- தீவிரவாதிகளாக இருக்கிறார்களே, அவர்களுடைய மதம் என்ன? - இஸ்லாம்

இவர்களுடைய இத்தகைய தவறான போதனையினால் என்னுடைய நன்பர்கள் அனைவரும் “இஸ்லாம் என்பது ஒரு மிக மோசமான மதம்” என்ற தீர்மானத்திற்கு வந்தார்கள். ஆனால் அதே சமயத்தில் நான் அவர்கள் எடுத்திருக்கின்ற முடிவு உண்மைக்கு புறம்பானது என்றும் தவறானது என்றும் அவர்களிடம் கூறினேன். நான் அவர்களிடம், “நாம் இந்தோனேசியாவை மட்டும் பார்க்கக் கூடாது, மற்ற நாடுகளில் உள்ள நிலவரங்களையும் நாம் பார்க்க வேண்டும்” என்று கூறினேன்.

உதாரணமாக,

பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏழைகளாகவும், படிப்பறிவில்லாதவர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களுடைய மதம் இஸ்லாம் அல்ல!.அவர்களெல்லாம் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

மெக்ஸிகோ ஒரு ஏழை நாடு. அந்நாட்டில், குற்றவாளிகளாகவும், திருடர்களாகவும், குடிகாரர்களாகவும், கற்பழிப்பு செய்பவர்களாகவும், சூதாட்டக்காரர்களாகவும் இருக்கிறார்களே! அவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அவர்கள் அனைவரும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்!

அயர்லாந்து குடியரசு நாடு. இந்த நாடு வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளுக்கிடையே தீர்க்க இயலாத உள் நாட்டு பிரச்சனையில், சச்சரவில் சக்கித் தவிக்கும் ஒரு நாடு. இந்தப் சச்சரவில் ஒரு முஸ்லிம் கூட  இல்லை. இந்தப் சச்சரவு நடப்பது கத்தோலிக்க மற்றும் புரோட்டஸ்டன்ட் கிறிஸ்தவர்களுக்கிடையில் தான். அவர்கள் தமக்குள்ளாகவே சன்டையிட்டுக் கொண்டு கொலை செய்கின்றார்கள். ஐரோப்பிய சமூகம் அவர்களை “அயர்லாந்தின் தீவிரவாதிகள்” என்று கருதுகிறது. அவர்கள் “ஐரோப்பிய தீவிரவாதிகள்” என்றும் வகைப்படுத்தப்படுகிறார்கள்.

இத்தாலியைப் பாருங்கள்! போதைப் பொருள் கடத்துபவர்கள், சூதாட்டக்காரர்கள் - இவர்களில் ஒருவர் கூட இஸ்லாமியர் அல்லர். அனைத்து மாஃபிய்யாக் கும்பல்களும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள்.

அப்போது நான் என்னுடைய மேலதிகாரியான பாதிரியாரிடம், “இஸ்லாம் ஒரு மோசமான மதம் என்று நிரூபிக்கப்படவில்லையே” கூறினேன். அப்போது நான், இஸ்லாத்தை, இஸ்லாமியர்களிடமிருந்தே படிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையை முன் வைத்தேன். அதற்கு, “நான் இஸ்லாத்தின் பலவீனங்களைப் பற்றி மட்டும் படிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டுடன் அனுமதியளிக்கப்பட்டென்.

நான் குர்ஆனைப் படித்த போது, அது குறிப்பாக “இறைவன் ஒருவனே! ஒரே ஒருவன் தான்” என்று வலியுறுத்தியது. அது நான் கிறிஸ்தவ தேவாலயங்களில் பயின்ற “திரித்துவக் கடவுள் கொள்கைக்கு” (Trinity of God) முற்றிலும் மாற்றமானதாக இருந்தது. ஆனால் இரவில் நான் குர்ஆனைப் படித்தபோது (சூரா இக்லாஸ்), இறைவன் ஒருவனே! என்றிருக்கிறது. ஆனால் அன்று காலையிலோ தேவாலயத்தில்  மதங்களைப் பற்றிய பாடத்தை ரெவ. பாதிரியார் அவர்கள் போதித்த போது “கடவுள் ஒருவரே! ஆனால் மூவரில் இருக்கிறார் (திரித்துவம் - Trinity) என்று போதித்தார். அதனால் அந்த இரவில் ஒரு சக்தி என்னை மேலும் குர்ஆனைப் படிக்க உந்தியது. என் ஆழமான உள் மனது “இறைவன் ஒருவனே! என்றும் மேலும் இது (குர்ஆன்) உண்மையானது தான்” என்றும் கூறிற்று.

மறு நாள் காலையில் தேவாலயத்தில் நான் என்னுடைய பாதிரியாரிடம், விவாதித்தேன்.

“கடவுளின் திரித்துவக் கொள்கை” (Trinity of God) என்பது பற்றி எனக்கு சரியாக விளங்கவில்லை என்று அவரிடம் நான் கூறினேன்.

கிறிஸ்தவ கன்னியாஸ்திரியாகிய நான் இதுவரைக்கும் கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி எப்படி விளக்கம் பெறாமல் இருக்கமுடியும் என்பதைப் பற்றி அந்த பாதிரியார் மிகவும் ஆச்சரியமடைந்தார்.

அந்தப் பாதிரியார் முன் வந்து ஒரு முக்கோனத்தை வரைந்தார். பின்னர் அவர், ஒரு முக்கோனத்திற்கு மூன்று மூலைகள் (three corners) இருப்பதைப் போல, ஒரு கடவுள் மூன்று பேரில் இருக்கிறார் என்று கூறினார்.

அதற்கு நான், உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும். எனவே கடவுள் மூவரை வைத்து சமாளிப்பது என்பது கடினம். எனவே கடவுள் மற்றொருவருக்கு தேவையுடைவராக இருக்க சாத்தியக்கூறு இருக்கிறதல்லவா? இது சாத்தியம் தானே? என்று கேட்டேன்

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார் ”இதற்கு சாத்தியமே இல்லை” என்று கூறினார். அதற்கு நான், இது சாத்தியமானதே! கூறி முன்னாள் வந்து, ஒரு சதுரத்தை வரைந்தேன்.  முக்கோனத்திற்கு மூன்று கோணங்கள் இருப்பதைப் போன்று சதுரத்திற்கு நான்கு மூலைகள் (Four corners) இருக்கின்றனவே என்று கூறினேன்.

அதற்கு நன்கு கற்றறிந்த என்னுடைய பாதிரியார், ‘முடியாது’ என்று கூறினார். முன்பு  ‘இதற்கு சாத்தியமே இல்லை’ என்று கூறிய அவர், தற்போது ‘முடியாது’ என்று மட்டும் கூறினார்.

நான் கேட்டேன், ஏன்?

அதற்கு பாதியார், ‘இது நம்பிக்கை’. நீ புரிந்துக் கொண்டாயோ இல்லையோ அப்படியே ஏற்றுக்கொள், அப்படியே இதை விழுங்கிவிடு. இதைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! கடவுளின் திரித்துவக் கொள்கையைப் பற்றி கேள்விகள் எதுவும் கேட்காதே! இதைப் பற்றி சந்தேகப்பட்டு கேள்வி கேட்டால் நீ பாவம் செய்தவளாகி விடுவாய்! என்று கூறினார்.

இந்த மாதிரியான பதில் எனக்கு கிடைக்கப் பெற்றும் அன்று இரவு குர்ஆனை தொடர்ந்து படிக்க வேண்டும் என்ற உறுதியான ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. ஏகத்துவம் குறித்த கடவுள் கொள்கையைக் குறித்து கற்றறிந்த என்னுடைய பாதிரியாருடன் விவாதம் செய்ய விரும்பினேன்.

ஒரு சமயம் நான் என்னுடைய பாதிரியாரிடம், ‘இந்த மேசைகளை உருவாக்கியது யார் என்று கேட்டேன். அதற்கு பாதிரியார் பதிலளிக்க விரும்பாமல் என்னையே பதிலளிக்குமாறு கூறினார்.

அதற்கு நான் ‘ இந்த மேசைகளை உருவாக்கியது “தச்சர்கள்” (Carpenters) என்றேன்.

ஏன்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான் இந்த மேசைகள் ஒரு வருடத்திற்கு முன்பாகவோ அல்லது நூறு வருடத்திற்கு முன்பாகவோ உருவாக்கப்பட்டவைகள். இவைகள் இன்னமும் மேசைகளாகவே இருக்கின்றன.  இந்த மேசைகள் எப்போதும் “தச்சார்களாக” (Carpenters) மாறமுடியாது. மேலும் ஒரே ஒரு மேசை கூட தச்சராக (Carpenter) மாறுவதற்கு ஒருபோதும் முடியாது.

நீ என்ன சொல்ல வருகிறாய்? - பாதிரியார் கேட்டார்.

அதற்கு நான், இந்த பிரபஞ்சத்திலே உள்ள மனிதன் உட்பட உயிருள்ள மற்றும் உயிரற்ற ஒவ்வொன்றையும் கடவுளே படைத்தார். ஒரு வருடத்திற்கு முன்னாள் ஒரு மனிதன் பிறந்தால் அடுத்து வரக் கூடிய நூறு வருடங்களாயினும் அவன் மனிதனாகவே இருப்பான். உலக முடிவு நாள் வரைக்கும் கூட அவன் மனிதனாகவே தான் இருப்பான். ஒரே ஒரு மனிதன் கூட கடவுளாக அவதாரம் எடுக்க முடியாது! மேலும் கடவுளை மனிதனோடு ஒப்பிட முடியாது.

அதற்கு நான் ஒரு உதாரணமும் கூறினேன். ஒரு இராணுவத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தங்களில் ஒருவரை தேர்தெடுத்து அவரை தங்களின் “ஜெனரலாக” தேர்தெடுத்தால் அந்த தேர்வு செல்லாததாகிவிடும். ஏன் அவர்களில் 99 சதவிகிதத்தினர் அவரை தேர்வு செய்திருப்பினும் சரியே!

நீ என்ன சொல்ல வருகியாய்? - பாதிரியார்

அதற்கு நான், “மனிதன் உட்பட இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கடவுள் படைத்தார். மனிதர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரை கடவுளாக ஆக்கினால் அந்த தேர்வு செல்லாதது” என்று நான் அந்த பாதிரியாரிடம் விளக்கினேன்.

பின்னர் நான் தொடர்ந்து படித்து வந்தேன். ஒருநாள் நான் என்னுடைய பாதிரியாரிடம், “என்னுடைய ஆராய்ச்சிகளின் படியும், மதங்களைப் பற்றிப் வகுப்புகளில் படித்ததிலிருந்தும் கி.பி. 325 ஆம் ஆண்டில் தான் முதன் முதலாக இயேசு கடவுளாக கருதப்பட்டார்” என்று கூறினேன்.

இவ்வாறு இந்த கன்னிகாஸ்திரி அவர்கள் பலவிதங்களில் அந்த பாதிரியாரிடம் விவாதம் புரிந்ததாகக் கூறினார்கள்.

பலவித ஆராய்ச்சிகளுக்குப் பிறகு தாம் இஸ்லாமே ஏகத்துவத்தை வலியுத்தும் உண்மையான மார்க்கம் என்றறிந்து இஸ்லாத்தை தழுவிய இந்த முன்னாள் ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச்  சேர்ந்த கன்னிகாஸ்திரி Irena Handono அவர்கள் தற்போது இந்தோனேசியாவில் இருக்கும் Central Muslim Women Movement என்ற அமைப்பின் தலைவியாக இருந்துக் கொண்டு இஸ்லாமிய அழைப்புப் பணியைச் செய்து கொண்டுவருகிறார்.

அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாகவும்.

உணரப் படாத தீமை சினிமா


‘நம் பிள்ளைகளுக்குப்
பல் முளைக்கும் முன்பே இந்த சினிமா
மீசை முளைக்க வைத்து விட்டது.
இந்த அழுக்குத் திரை
சலவை செய்யப்படுமா?
இல்லையெனில்…
மக்களைச் சுருள வைக்கும்
திரைப்பட சுருளையெல்லாம்
ஒரு தீக்குச்சிக்குத் தின்னக் கொடுப்போம்’
சினிமாவை குடித்து, உண்டு உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் வைரமுத்துவின் வைர வரிகள். சினிமா என்ற சாக்கடையில் புரண்டு கொண்டிருக்கும் ஒருவரால் கூட சினிமாவுக்கு நற்சான்றிதழ் கொடுக்க முடியவிலை.
கவியரசின் வரிகளுக்கு ஒப்புதல் அளிப்பது போல், “அனைத்து குற்றங்களுக்கும் காரணம் சினிமா’ என, மதுரை ஐகோர்ட் நீதிபதி வி. தனபாலன், வழக்கு விசாரணை ஒன்றில், சாட்டையை சுழற்றியுள்ளார். இது, நம்மூர் சினிமாக்காரர்கள் காதில் விழவில்லை போலும்; இல்லையென்றால் இந்நேரம் கண்டனக் கூட்டம் தான். இவையெல்லாம் சினிமாவுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் கொடுக்கும் certificates.
முஸ்லிம்களால் உணரப்படாத தீமைகள் என்று பட்டியல் போட்டால் அதில் வட்டி, சினிமா, கிரிக்கெட் என்று தொடரும். இவற்றில் சினிமாவைப் பற்றிய இஸ்லாத்தின் பார்வையை குர்ஆன், ஹதீஸில் ஆதாரத்துடன் சுருக்கமாக ஆராய்வோம்.
அனைத்து மக்களையும் எளிதில் சென்றடையக் கூடிய ஒரு தகவல் தொடர்பு சாதனம் ‘சினிமா’ என்று பட்டிமன்றம் வைக்காமல் முடிவு செய்து விடலாம். அந்த அளவுக்கு சினிமா என்பது மக்களோடு மக்களாக இரண்டறக் கலந்து விட்டது. ஆனால் அதன் அவலநிலை அதல் பாதாளத்தில் உள்ள்து.

நடிப்புத் துறையில் நடைபெறும் அவலங்கள், ஒழுக்கச் சிதைவுகள், கோடிகளில் பணம் புரண்டும் நிம்மதியற்ற வாழ்க்கை,  தற்கொலைகள், அதிகமான விவாகரத்துகள், ஆபாசங்கள், இயற்கையாக ஏற்படக்கூடிய காம உணர்வை முக்கால் நிர்வாணத்துடன் நடித்து விரசத்தை தூண்டி பணத்துக்காக எதையும் செய்யும் நடிகைகள், மணிதனை மிருகமாக்கும் குரூர சிந்தனை கொண்ட வசனங்கள், இரட்டை அர்த்தம் கொண்ட ஆபாச வசனங்கள்,  ஏகத்துவத்துக்கே வேட்டு வைக்கும் பாடல் வரிகள், தீவிரவாத செயல்களுக்கு வழிவகுக்கும் சண்டைக் காட்சிகள்,  சினிமாவைப் பார்த்து கொலை செய்தேன் என்று கூறும் வாலிபர்கள்..  அப்பப்பா பட்டியல் நீள்கிறது!   இதுதான் இன்றைய சினிமாவின் எதார்த்த நிலை என்பதை யாராலும் மறுக்க முடியாது.

ஆபாசத்தின் இருப்பிடம் சினிமா. ஆபாசத்தை உற்று நோக்கும் ஒருவனின் கடைசி நிலை கண்டிப்பாக விபச்சாரமாகத்தான் இருக்கும். தொடர்ந்து சினிமா பார்க்கும் ஒருவன் கடைசி வடிகால் விபச்சாரம்.
‘விபச்சாரனோ, விபச்சாரியோ முஃமினான நிலையில் இருக்கும்போது விபச்சாரம் செய்வதில்லை’ எனற ஹதிஸை இந்த இடத்தில் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
சாமானியர்கள் முதல் சாமியார்களிடம் வரை விபச்சாரம் பெருகி வருவதைப் பார்க்கும் போது எதிர்கால சமுதாயம் பற்றிய அக்கறை கவலை கொள்ளச் செய்கிறது. “விபசாரத்தை ஒழிக்க முடியாவிட்டால் அதை சட்டபூர்வமாக்க வேண்டியது தானே?” என்று அண்மையில் உயர்நீதிமன்றம் கூறியதை இங்கு நினைவு கொள்ள வேண்டியது அவசியம். இது சினிமா செய்த சாதனை.
‘கண்ணால் பார்ப்பது கண் செய்யும் விபச்சாரம்.  காதால் கேட்பது காது செய்யும் விபச்சாரம், கையால் தொடுவது கை செய்யும் விபச்சாரம்.  இவை எல்லாவற்றையும் மர்மஸ்தான உறுப்பு உண்மைப்படுத்தும் அல்லது ஒதுக்கித் தள்ளிவிடும்’ – ஹதீஸின் சுருக்கம்.
சினிமாவில் நடிப்பவர்கள், மனித சமுதாயம் முழுவதையும் அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

தன்னை ஒரு முஸ்லிம் என்று சொல்லக் கூடியவர் வீட்டில் என்ன நடக்கிறது?  குழந்தைகளை கூட வைத்துக் கொண்டு, பெற்றோரும், உற்றாரும் குடும்ப சகிதமாக, தொழுகை நேரம் என்றில்லாமல், சினிமாவை ரசித்துக் கொண்டிருக்கிற காட்சியை பரவலாக காண முடிகிறது (விதிவிலக்காக இருப்பவர்களைத் தவிர்த்து). கடைசியில் தன் குழந்தை, படத்தில் வருவது போல யாரையாவது இழுத்துக் கொண்டு ஓடிய பிறகுதான் பெற்றோர்கள் விழித்துக் கொள்வார்கள்.

வேதனையான விஷயம் என்னவென்றால், நான் ஏகத்துவத்தில் இருக்கிறேன் என்று சொல்லக்கூடிய எத்தனையோ பேர் சினிமா பார்ப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.  முக்கியமாக வெளிநாட்டில் வசிப்பவர்கள்,  வார விடுமுறை நாட்களில் அன்றைய ரிலீஸ் படத்தை பார்த்துவிட்டு, தாமதமாக உறங்கி, ஷைத்தான் காதில் சிறுநீர் கழிப்பதையும் சட்டை செய்யாமல், கொரட்டை விட்டு தூங்கி, பஜ்ர் தொழுகையை கோட்டை விட்டு,  நேராக ஜும்ஆ தொழுகைக்கு எழுந்திருப்பவர்கள் நம்மில் எத்தனை பேர்?  சிலர் பஜ்ர் தொழுகைக்கு பாங்கு சொல்லும் போது தயாராவதை பார்த்தால் நமக்கே ஆச்சரியமாக இருக்கும்!  எதற்காக தொழுகக்காக அல்ல! தூங்குவதற்காக! 
‘நிச்சயமாக கண், காது, இதயம் இவைகள், ஒவ்வொன்றும் மறுமையில் விசாரிக்கப்படும்’ 17:36.
சினிமவைப் பார்த்து பொழுதை கழிப்பவர்கள் மேற்கண்ட இறைவசனத்தின்படி, மறுமையில் இறைவனிடம் எப்படித் தான் பதில் சொல்லப் போகிறார்களோ!

முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடவேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையை நடத்திக் கொண்டிருப்பார்கள்! முடிவாகாத நிலையில், TV யில் நடிகையின் two piece உடையை ரசித்து கொண்டிருப்பார்கள். வெட்கக்கேடு!
கலாச்சாரச் சீரழிவு எந்த அளவுக்கு இருக்கிறது என்றால், “கல்யாண நாள் பார்க்கச் சொல்லலாமா’ என்ற காலம் போய், “பிள்ளக் குட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா?’ என்ற ரீதியில் அல்லவா சென்று கொண்டிருக்கிறது நமது கலாசாரம்! கலாசார சீரழிவு, வன்முறை, மாணவர்களிடையே ஹீரோயிசம் என, சமூகத்தை சீரழிக்கும் செயல்கள் அனைத்திற்கும் வித்திடுவதில், இன்றைய சினிமா முக்கிய இடத்தைப் பிடிப்தை யாராலும் மறுக்க முடியாது.

கதையை நம்பி இருந்த காலம்போய், சதையை நம்பி இருக்கும் கலியுக காலம். “கருத்தம்மா’ என்று படமெடுத்தாலும், அதில், “செவத்தம்மாவை’ போட்டால் தான் படம் ஓடும்; அதனால், ரசிகர்கள் ரசனை அறிந்து அவர்கள் கேட்பதையே நாங்கள் தருகிறோம் என்பதே இயக்குனர்கள் பதிலாக இருக்கும்.  அப்படியானால், இவர்கள் கூறுவது என்ன? மனிதனுக்கு ரசனையே கிடையாதா? ஆபாசத்தையும், அசிங்கத்தையும், பார்ப்பதையும், சிந்திப்பதையும் தவிர அவனுக்கு வேறு சிந்தனையே கிடையாதா? நவூதுபில்லாஹ்.
எதுவரை இந்த சினிமா சதையை நம்பி இருக்கிறதோ, ஆபாசத்தை காட்டுகிறதோ, வக்கிரங்களை ஊக்குவிக்கிறதோ, கலாசார சீரழிவை உண்டுபண்ணுகிறதோ, வன்முறைக்கு வித்திட்டுகிறதோ, இஸ்லாத்துக்கு எதிராக உள்ளதோ அதுவரை இந்த சினிமாவை புறம் தள்ளிவிடுவோம்.
அல்லாஹ்வும் அவனுடைய தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையிலும் வாழ இறைவன் நம் அனைவருக்கும் உதவி புரிவானாக.

கஸ்டம்ஸில் எச்சரிக்கையாக இருங்கள்!


இந்தத் தடவை short vocation 15 நாட்கள் விடுப்பு எடுத்து பக்ரீத்தை குடும்பத்துடன் கொண்டாட எண்ணி நானும் என் நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரே நாளில் ஊருக்கு விமான சீட்டு (Emirates Airlines இல்) எடுத்தோம். விமான சீட்டு எடுத்ததிலிருந்து மனம் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது. ஒரு வழியாக இங்கு (அமீரகத்தில்) பக்ரீதை கொண்டாடி விட்டு மதியம் 2:45 மணிக்கு விமானம் புறப்பட, மனம் முழுவதும் வீட்டை நோக்கியே இருக்க மூவரும் அன்று இரவு சந்தோஷமாக சென்னை விமான நிலையத்தை அடைந்தோம்.
எல்லா வேலையும் (Emigration, Baggage Collection) முடித்துக் கொண்டு கஸ்டம்ஸ் அதிகாரியிடம் கஸ்டம்ஸ் சீட்டைக் கொடுத்த போது அவர் எங்களுடைய பொருட்களை scan செய்து விட்டு சுமார் 15 முஸல்லா (தொழுக பயன்படும் துணியினால் ஆன விரிப்பு) உள்ள ஒரு பெட்டியை (நண்பனுடையது) மட்டும் மறுபடியும் தனியாக scan செய்ய வேண்டும் என்று கூறி இன்னொரு அதிகாரியிடம் அனுப்பினார்.
அவரும் ஸ்கேனரில் பார்த்து விட்டு ''இது என்ன?'' என்று வினவினார். நானும் என் நண்பரும் அதைப் பற்றி விளக்கி விட்ட பிறகு ''எத்தனை இருக்கிறது?'' என்று வினவினார். நாங்கள் ''15 முஸல்லா இருக்கிறது'' என்று கூறினோம். அப்போது ''இதற்கு ஒரு கிலோவிற்கு 300 ரூபாய் பணம் கட்ட வேண்டும்'' என்று அந்த அதிகாரி கூறவே, எனக்கும் என் நண்பருக்கும் சரியான கோபம் வந்து விட்டது.
காரணம் இது வியாபார ரீதியாக எடுத்துச் செல்லவில்லை, இதைக் கொண்டு செல்வதற்கு தடையோ, கட்டுப்பாடோ இல்லை. நான் கடுமையான குரலில் ''இது முஸ்லீம்கள் பயன்படுத்தும் தொழுகை விரிப்பு, இதற்கு ஏன் நாங்கள் customs duty கட்ட வேண்டும்?'' என்று கேட்கவே, ''அது எப்படி இருக்கும் எனக்கு sample காட்டுங்கள்'' என்று கூறினார்.
எங்களிடம் தனியாக hand baggage இல் ஒரு முஸல்லா இருந்ததால் அதை எடுத்து காண்பிக்க முயற்சி செய்தோம். அப்போது அதைக் கண்டுக் கொள்ளாமல் ''எங்களுடைய கஸ்டம்ஸ் மூத்த அதிகாரியும் முஸ்லீம் தான், அவரிடம் காட்டுங்கள், அவர் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்'' என்று கூறினார்.
அப்போது அங்கு சென்ற கஸ்டம்ஸ் அதிகாரி, மூத்த முஸ்லீம் அதிகாரியிடம் விஷயத்தை கூறவே அதைச் சற்றும் சட்டை செய்யாத மூத்த அதிகாரி எங்களைப் போக சொன்னார். உடனே நாங்கள் மூவரும் எங்களுடைய தள்ளு வண்டிகளை  தள்ளிக் கொண்டு வண்டியில் வந்து அமர்ந்தோம்.
ஆக நாங்கள் அவரிடத்தில் ''சார் இதுக்கு எதுக்கு சார் கஸ்டம்ஸ் டூட்டி கட்டனும், விட்ருங்க சார்'' என்று பம்மியிருந்தால் ''நான் விட்டு விடுகிறேன், எனக்கு ஆயிரம், இரண்டாயிரம் கொடுங்கள்'' என்று கூறியிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி கூறாது அவரிடத்தில் தைரியமாக பேசியதால் எங்களை விட்டுவிட்டார்.
ஆகவே உங்களிடத்தில் தவறு இல்லேயன்றால் அழகான முறையில் ஆனால் கெஞ்சாமல்/ பயப்படாமல் விஷயத்தை எடுத்து சொல்லுங்கள். நாம் பயப்படுவது போல் நடித்தாலும், அல்லது பெட்டியைப் பிரித்து காட்டு என்று சொன்னால் மறுபடியும் கட்ட வேண்டும் என்று பயப்படுவதாலும் தான் அந்த பலகீனத்தைப் பயன்படுத்தி காசு பார்த்துவிடுகின்றனர் சில கஸ்டம்ஸ் அதிகாரிகள். பெட்டியைப் பிரித்து காட்ட சொன்னால், தயங்காதீர்கள், ''காட்டுகிறேன், ஆனால் திரும்பவும் பெட்டியை கட்டிக் கொடுக்க வேண்டும்'' என்று சொல்லுங்கள்; தைரியமாக பேசுங்கள்; ''இவன் வெளிநாட்டிலிருந்து வருகிறான், இவனை ஈசியாக ஏமாற்றி விடலாம்'' என்று நினைப்பவர்களின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்குங்கள்.
இதைப் போல் என் நண்பனின் மச்சான் (அக்கா மாப்பிள்ளை) இந்த முறை அமீரகத்தில் இருந்து ஊருக்குச் செல்லும் போது Panasonic LCD TV (32”) கொண்டு சென்றார். சாதாரண மாடல்களில் 32” வரை கொண்டு செல்லலாம். ஆனால் புதிதாக வந்துள்ள மாடல்களில் Sony Bravia வில் சில series மாடல்கள் மற்றும் புதிதாக வந்துள்ள மாடல்களுக்கு மட்டும் customs duty கட்ட வேண்டும். இவர் கொண்டு சென்றதோ பழைய மாடல் LCD TV. முழுவதுமாக கவர் செய்யப்பட்டதால் டிவியின் பெயரும், மாடலும் தெரியவில்லை.
அவரை வழிமறித்த கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவர் ''இது எத்தனை இன்ச் டி.வி.'' என்று கேட்க, அவர் ''32 இன்ச்'' என்று சொல்லியிருக்கிறார். அதை மறுத்த கஸ்டம்ஸ் அதிகாரி ''இல்லை, இது 42” மாதிரி தெரிகிறது'' என்று கூறியவுடன் டிவி வாங்கிய பில்லைக் காண்பித்து இருக்கிறார். அப்போதும் அதை மறுத்த அதிகாரியிடம், ''சார் உங்களுக்கு 32 இன்ச் டிவிக்கும், 42 இன்ச் டிவிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?'' என்று அதட்டலுடன் கேட்டவுடனே இவரை மறுப்பேதும் சொல்லாமல் அனுப்பி விட்டார். அவர் கொஞ்சம் அசந்தாலும் அவரிடத்திலும் காசு பார்த்திருப்பார்கள் கஸ்டம்ஸ் அதிகாரிகள்.
ஆக நாம் அமைதியாக ஜெண்டிலாக, சாஃப்டாக சொன்னால் வேலை நடக்காது என்னும் இடத்தில் இப்படி பேசினால் தான் நம்மை நாம் தற்காத்துக் கொள்ள முடியும். இல்லையென்றால் நம்மை இலகுவாக ஏமாற்ற ஒரு கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.
உஷார் தோழர்களே! விமான நிலைய கஸ்டம்ஸ் அதிகாரிகளுடன் எப்போதும் பயப்படாமல், நேரடியாகத் தெளிவாகப் பேசுங்கள். நாம் எச்சரிக்கையாக இல்லாவிட்டால், நம் தலையில் அவர்கள் மிளகரைப்பது உறுதி!

Tuesday, January 10, 2012

பள்ளிக்கு அருகில் வாழ்வோம்


பள்ளிக்கு அருகில் வாழ்வோம்… பள்ளியின் தொடர்போடு வாழ்வோம்…
எந்த அளவு பள்ளிக்கு நெருக்கமாய் வாழ்கிறோமோ அந்தளவு சுவர்க்கத்திற்கு நெருக்கமாய் வாழ்கிறோம்,
அதாவது ஷைத்தானை விட்டும் நரகத்தை விட்டும் தூரமாய் வாழ்கிறோம் என்று பொருள். 
  •  பள்ளிவாசலுக்கு அருகில் வீடு விலைகோ / வாடகைக்கோ வாங்க வேண்டும்
  • பாங்கோசை கேட்டவுடன் பள்ளிக்கு செல்ல வேண்டும்
  • ஒருபோதும் இமாம் ஜமாத்தை விட்டு விடக் கூடாது
  • ஒருவேளை இமாம் ஜமாத் தவறி விட்டாலும், Fபர்ளான தொழுகைகளை பள்ளியில் தான் தொழ வேண்டும்.
  • பள்ளியினுள் எப்போது நுளைந்தாலும் பள்ளியின் காணிக்கை நfபில் தொழ வேண்டும்.
  • எப்போது பள்ளியில் நுளைந்தாலும் இஃதிகாFபுடைய நிய்யத்தில் செல்ல வேண்டும்.
  • பள்ளியினுள் நுளையும் போது ஓது துஆவை ஓதி நுளைய வேண்டும்.
  • பள்ளியினுள் fபர்ளு தொழுகைக்காக காத்திருக்க வேண்டும்.
  • ஒரு Fபர்ளு தொழுகைக்கு பின் அடுத்த Fபர்ளு தொழுகைக்காக காத்திருப்பது
  • Fபர்ளு தொழுகைக்கு பின் அதிக நேரம் அந்த இடத்திலேயே அமர்த்திருக்க வேண்டும்.
  • Fபர்ளு தொழுகைக்கு பின் ஹதீஸில் கூறப்பட்ட திக்ருகளை ஓத வேண்டும்.
  • காலை மாலை திக்ருகள் பள்ளியில் செய்ய வேண்டும்.
  • பள்ளியில் வழமையாக குர்ஆன் ஓத வேண்டும்.
  • ரமளானின் கடைசி பத்து நாட்களில் பள்ளியில் இஃதிகாfப் இருக்க வேண்டும்.
  • ஜும்ஆ தொழுகைக்கு மிக விரைவில் பள்ளிக்கு செல்ல வேண்டும்.
  • ஏதேனும் பிரச்சனை அல்லது சிரம்மமான நேரங்களில் பள்ளிக்கு சென்று இரண்டு ரக்ஆத் தொழுது இறைவனிடம் துஆ செய்ய வேண்டும்.
  • பயணத்திலிருந்து திரும்பி வந்தால் பள்ளிக்கு சென்று இரண்டு ரக்ஆத் தொழ வேண்டும்.
  • பள்ளியில் தனிமையில் இறைவனை அஞ்சி அழ வேண்டும். 
  • பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் (குர்ஆன் ஹதீஸ் விளக்க்க்கூட்டங்கள், அரபி
    வகுப்புகள், வாராந்திர மற்றும் மாதந்திர பயான்கள்) கலந்து கொள்ள வேண்டும்.
  • பள்ளியை காணும் போதெல்லாம் முகமலர வேண்டும்.
  • பள்ளியை நாமே வழமையாக சுத்தம் செய்ய வேண்டும்.
  • பள்ளியை மார்க்க விஷயங்களை கற்கும் கற்பிக்கும் பாடசாலையாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.

வரலாறு புகட்டும் பாடம்


உலக ஆசையில் மூழ்கி கிடக்கும் முஸ்லிம் சமூகம் பணத்திற்க்காகவும், புகழுக்காகவும், அந்தஸ்திற்காகவும் அழைந்துதிரிகின்றது. உயிர் மேல் கொண்ட பயமும், உலகத்தின் மேல் கொண்ட பற்றும் அவர்களது கொள்கையை கொன்று கொண்டிருக்கிறது. ஆனால் இதே கொள்கையில் குர் ஆனாலும், நபிகளின் வாழ்க்கை வரலாற்றின் படிப்பினைகளாலும் பின்னி பிணைந்த ஒரு சமூகம் வாழ்ந்தது.
உடலும், உயிறும் – நீதிக்கும், சத்தியத்திற்கும் என்று உறுதியாய் முழங்கிய கூட்டம் அது. அந்த காலகட்டத்தில் வாழ்ந்த ஒவ்வொரு தோழர்களின் வாழ்க்கையிலும் படிப்பினைகள் பல பொதிந்து கிடக்கின்றன. அவர்களில் ஒருவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரலி). மிக சாதரமான மனிதர். ஆனால் இஸ்லாத்தின் பால் உறுதி மிக்கவர். நபிகளாரின் நேசத்திற்கு உரியவர்.
உமர் (ரலி) கலீபாவாக இருந்த போது ரோம பேரரசின் பைஸாந்திய படையுடன் போர் நடந்த காலகட்டம் அது. அதில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபாவும் கலந்து கொண்டிருந்தார். ரோம பேரரசின் ஒவ்வொரு பகுதியாக முஸ்லிம்களின் கட்டுக்குள் வந்து கொண்டிருந்தது. காரணம் முஸ்லிம்கள் அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் அவனுடைய மார்க்கத்தின் மீதும் கொண்ட அன்பும் உறுதியும் அவர்களை களத்தில் நிலைத்து நிற்க வைத்தது. அதற்கு கிடைத்த பரிசு ரோம பேரரசு பின் வாங்கி கொண்டிருந்தது.
ரோம பேரரசனுக்கோ ஆச்சரியம். ஆனால் அவனால் அதை பொறுத்துக் கொள்ள முடியவில்லை. பாலைவனத்திலிருந்து கிளம்பி வந்த கூட்டத்தின் வீரம், தீவிர இறை நம்பிக்கை தம்முடைய இறை தூதருக்காக அவர்கள் செய்யும் தியாகம் இவற்றை அறிய பேராவல் கொண்டிருந்தான் அவன்.
யார் தான் அவர்கள்? அவர்களுக்கு அப்படி என்ன கொம்பு முளைத்திருக்கிறது? அதனை நான் பார்க்க வேண்டும். போரில் கைதிகளாக சிறைபிடிக்கப்படும் முஸ்லிம் படையினரை கொலை செய்யாதீர்கள் அவர்களை என்னிடம் அழைத்து வாருங்கள் என்று கர்ஜித்தான்.
அதனடிப்படையில் போரில் கைதிகளாக சிக்கிய ஒரு கூட்டம் ரோம பேரரசினிடம் அழைத்து செல்லப்பட்டது. அந்த கைதிகளில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யும் ஒருவர். அப்பொழுது அவர்களை பற்றி அறிமுகம் செய்து வைத்தான் படைவீரன் ஒருவன். இவர் தான் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). மக்காவில் இஸ்லாத்தில் இணைந்த மூத்தவர்களில் இவரும் ஒருவர், முஹம்மது நபியின் முக்கியமான தோழர்களில் ஒருவர் ஆவார் என்றான்.
நீண்ட நேரம் அவரை உற்று பார்த்த மன்னனுக்கு எந்த சிறப்பம்சமும் தென்படவில்லை. காரணம் நீண்ட தாடி, புழுதிபடிந்த ஆடை, கிரீடங்களோ அலங்காரமோ இல்லாத துணியிலான தலைப்பாகை.
நீர் பார்ப்பதற்கு மிக எளிமையாக தோற்றமளிக்கிறீர், மதிக்கதக்கவராய் இருக்கிறீர் ஆதலால் நான் உனக்கு விடுதலை அளிக்கிறேன் ஆனால் ஒரு விஷயம் என்றான்.
என்ன அது?
நீர் கிறிஸ்துவ மதத்தை ஏற்றுக் கொண்டால் நான் உன்னை விடுதலை செய்கிறேன், உமக்கு போதுமான அளவு கவனிப்பும் என்னிடம் உண்டு என்றான்.
அவன்  கூறி முடித்த வினாடிகள் நகரவில்லை உரக்க திடமான பதில் வந்தது எதிர்புறத்திலிருந்து ” நீ அளிக்கும் சலுகையை விட மரணம் எனக்கு ஆயிரம் மடங்கு உவப்பானது”. அதிர்ந்து போனான் மன்னன். ஆசை வார்த்தைகளை அள்ளி வீசினான், எனது மகளை உனக்கு திருமண முடித்து வைக்கிறேன் எனது ஆட்சி அதிகாரத்தில் பெரும் பங்கு உனக்கு உண்டு என்றான்.
இவ்வுலக மதிப்பீட்டில் மிகப்பெரும் வாழ்வும், சலுகையும் அது. அன்றும், இன்றும், என்றும் மனிதர்கள் ஆசைப்பட்டு, வாயைபிழந்து ஓடுவதெல்லாம், பணத்திற்காகவும், பதவிக்காகவும் தானே. அதுவும் ரோம பேரரசின் மன்னன் அழைத்து நேரடியாக தன் பெண்னையும், பொன்னையும் கொடுத்து பதவியை அளிக்கிறேன் என்று கூறியது, அண்டை நாட்டு மன்னனுக்கோ அல்லது பதவி, பணம், அந்தஸ்தில் உயர்ந்தோங்கி நின்றவருக்கோ அல்ல. பாலைவனத்திலிருந்து வந்த ஒரு போர் கைதி, நிராயுதபானியாய் நிற்கும் ஓர் அடிமை.
“எங்கிருந்து வந்தது இத்தகைய சிறப்பும் அங்கிகாரமும் அந்த சாதாரண மனிதருக்கு ?
“இஸ்லாம்” ! ! அதில் எத்தகைய சமரசமும் செய்து கொள்ளாத திடமான உறுதி.
ஆனால் இப்பொழுது அந்த இஸ்லாம் விலை பேசப்பட்டிருந்ததை உண்ர்ந்திருந்தார் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி). உறுதியான நெஞ்சுடன் உரக்க முழங்கினார், “உன்னிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும், அதனுடன் அரபிகளிடமுள்ள செல்வங்கள் அனைத்தையும் சேர்த்து மூட்டை கட்டி என்னிடம் கொட்டினாலும் சரியே! அதற்க்காகவெல்லாம் ஒரு நொடி கூட முஹம்மது கற்றுத்தந்த மார்க்கத்திலிருந்து மாரமாட்டேன்” என்றார்.


இந்த நிலையில் இன்று வாழும் முஸ்லிம்களின் நிலை-தன்னுடைய வேலைக்காக, பணத்திற்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக மார்க்கத்திலிருந்து விலகி வாழத்தயார். தாடி வைப்பது இஸ்லாத்தின் அடிப்படை என்று தெரிந்தும் தனது ஆடம்பர வேலைக்காக மலுங்க வளிப்பதற்குதயார்.
வரதட்சனை ஹராம் என்று தெரிந்தும் தன் பெற்றோர்கள் வற்புறுத்துகின்றனர், குடும்பத்தில் பிரச்சனை வரும் என்று கூறி இஸ்லாத்தை விலை பேசுவதற்குதயார்.
சத்தியத்தை சொல்லி நன்மையை ஏவி தீமையை தடுப்புதான் இறைகட்டளை என்று உணர்ந்த பின்னும் தனக்கு வரும் சிறு சிறு பிரச்சனைகளுக்கு அஞ்சி இஸ்லாத்தை நடைமுறைபடுத்தாமலிருக்க தயார்.
சின்ன சின்ன அன்றாட இன்பத்திற்காக இஸ்லாத்தை தியாகம் செய்யும் நம்மவர்களின் மத்தியில் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வின் வாழ்க்கையில் நமெக்கெல்லாம் படிப்பினைகள் பல கொட்டி கிடக்கின்றன.


இப்பொழுது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் வார்த்தையை கேட்ட மன்னன், கோபத்தில் கொக்கரித்தான், கொலை செய்ய உத்தரவிட்டான்.
எவ்வாறு ?
சாதாரணமாக அல்ல கொடூரமாக சித்ரவதை செய்து கொலை செய்ய உத்தரவிட்டான். அப்துல்லாஹ்வின் கைகளிலும், கால்களிலும் அம்புகள் எய்யப்பட்டன.
குருதி குப்பளித்து குபுக், குபுக் என வெளியேறிக் கொண்டிருந்தது. மீண்டும் அவரிடம் சலுகை பேசினான், ஆசை காட்டினான். கிறிஸ்துவத்தை ஏற்றுக்கொள்கிறாயா? என்றான். உறுதி கொலையாமல் உறக்க மறுத்தார் உன்னதர்.
எதற்கும் மசியாத இவருக்கு இந்த தண்டனை போதாது என்று யோசித்து கட்டளையிட்டான். எண்ணையை கொதிக்க வைத்து அதில் இவரை தூக்கி போட்டு பொசுக்குவதற்கு முடிவெடுத்தான்.
தீ மூட்டப்பட்டது, திகுதிகுவென கொழுந்துவிட்டு எரிந்த தீயில் எண்ணெய் கொதிக்க ஆரம்பித்து. மன்னன் கைதிகளில் இருவரை அழைத்துவர சொன்னான். அழைத்துவரப்பட்ட நபர் கொதிக்கும் எண்ணெயில் போடப்பட்ட மறு வினாடி அவர் அலறுவதற்கு கூட நேரமில்லை கருகி பொசுங்கி போனார்கள். காரணம் அந்த அளவிற்கு கொதித்திருந்தது எண்ணெய். அவர்கள் தோல்கள் கருகி எலும்பு மட்டுமே தெரிந்தது.
இந்த கோர சம்பவத்தை பார்த்து கொண்டிருந்த அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யிடம் கேட்டான் மன்னன். இது உனக்கு கடைசி சந்தர்ப்பம் என்ன சொல்கிறாய் என்றான். முன்னதாக இருந்தை விட உறுதியாய் பதில் வந்தது “முடியாது” என்று.
எண்ணெய் கொதிப்பதை போன்று கொதித்து போன மன்னன் ” இழுத்துச் செல்லுங்கள் இவரை கொப்பரையில் தள்ளுங்கள்” என்று அலறினான்.
சேவகர்கள் அவரை எண்ணெய் கொப்பரையை நோக்கி அழைத்து செல்ல, எண்ணெயை நெருங்க, நெருங்க அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் கண்களில் இருந்து கண்ணீர் கசிய ஆரம்பித்தது.
இதனை எதிப்பார்த்திராத அந்த சேவகர்கள் இச்செய்தியை மன்னனிடம் தெரிவித்தார்கள் மழிச்சியுற்றான் மன்னன். ஆஹா! மரண பயம் வந்துவிட்டது அவருக்கு அழைத்து வாருங்கள் என்னிடம் என்றான். இப்பொழுது சொல் இஸ்லாத்தை விட்டு விடுகிறாய் அல்லவா?
“நிச்சயமாக இல்லை”
நீர் நாசமாய்ப் போக! பிறகு எதற்கு அழுதீர் ?
அவர் உரைத்த பதிலில் அப்படியே அதிர்ந்து போனான் அந்த பைஸாந்திய சக்கரவர்த்தி.
“என் கவலைக்கும் பயத்திற்க்கும் உன் மரணம் பயம் அல்ல காரணம். அல்லாஹ்வின் அன்பை பெறுவதற்கு அவனுடைய பாதையில் தியாகம் புரிவதற்கு என்னிடம் இருப்பதோ ஒரே உயிர். அதற்கு பதிலாய் என் தலையில் இருக்கும் உரோமங்கல் அளவிற்கு உயிர்கள் பல இருந்தால் அவை அத்தனையும் ஒன்றன் பின் ஒன்றாய் மகிழ்ச்சி பொங்க இந்த கொப்பரையில் கொட்டித் தீர்க்கலாமே என்று எண்ணிப் பார்த்தேன் ! !
கைசேதம் கண்ணீராகி விட்டது!!!.

கொதிக்கும் கொப்பரை, எலும்பாய் மிதக்கும் சக முஸ்லிம், கூடி இருக்கும் எதிரிப்படை என்று  எதற்கும் அஞ்சாமல் உயிர் ஒன்று தான் இருக்கிறது இறைவன் பாதையில் அர்பனிக்க என்று கவலைப்பட்டு அவர்கள் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சத்தியம்.
சமரசத்தின் நிழல் கூட விழாமல் அவர் கூறிய பதில்கள் இஸ்லாத்தின் எதிரிகள் மத்தியில் அச்சத்தையும், அவர்களது ஈமானிய பலத்தையும் நிலை நிறுத்தியது.
இதனை கேட்ட மன்னன் திகைத்து போனான். என்ன செய்வதென்று அறியாது தன் நெற்றியில் முத்தமிடுமாறு  அன்பு கட்டளையிட அதனையும் மறுத்து அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) தன்னுடன் கைது செய்யப்பட்ட முஸ்லிகளை விடுவித்தால் தான் முத்த மிடுவதாக கூற அவ்வாறே ஆகட்டும் என் கட்டளையிட்டான்.
வெற்றிகரமாய் மதினா திரும்பிய அனைவரும் கலீஃபா உமரிடம் (ரழி) யிடம் நடந்ததை கூற விடுதலை ஆகி வந்தவர்களை பார்த்து பெருமிதம் பொங்க.” ஒவ்வொரு முஸ்லிமும் அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) யின் நெற்றியை முத்தமிட கடமை பட்டிருக்கிறார்கள்”, அதில் நான் முந்திக் கொள்கிறேன் என்றார்கள் ! ! என்று வரலாறு அவர்களது தியாகத்தை பறைசாற்றுகிறது.
உலகத்தின் மீதுள்ள ஆசையும், மரணத்தின் மீதுள்ள பயமும் முஸ்லிம்களிடம் இருக்க கூடாத பண்பு என்பது அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா (ரழி) வாழ்க்கையில் இருந்து நமக்கு கிடைக்கும் பாடம்.
இந்த பாடத்தின் அடிப்படையில் அல்லாஹ்விற்கு மட்டும் அஞ்சி அவன் படைத்தவற்றிற்கு அஞ்சாமல் கொண்ட கொள்கயில் உறுதியாய் இருந்தால் கண்ணியமும், மரியாதையும், பதவியும், அந்தஸ்தும் அகில உலக அதிபதி அல்லாஹ்விடம் நமக்கு நிச்சயம் உண்டு. சிந்திப்போம்…

நேர மேலாண்மை / திட்டமிடல்


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
 
அன்பு சகோதரர்களே!
 
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (வார நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
 
5 am – 6 am
Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
6 am – 7 am
உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை
7 am – 8 am
குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, அலுவலகத்துக்கு தயாராகுதல் மற்றும் ளுஹா தொழுகை
8 am – 6 pm
அலுவலக பணிகள்
6 pm – 7 pm
மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை
7 pm – 8 pm
குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல…
8 pm – 9 pm
இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு
9 pm – 10 pm
குடும்ப பராமரிப்பு
10 pm – 5 am
தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம்
 
நம் தினசரி 24 மணி நேர திட்டமிடல் (விடுமுறை நாட்களில்)
காலை 5 மணி முதல் காலை 5 மணி வரை
 
5 am – 6 am
Fபஜர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
6 am – 7 am
உடற்பயிற்சி, நாளிதழ் வாசித்தல், மற்றும் பொது/சமூக சேவை
7 am – 9 am
குடும்ப பராமரிப்பு, குளியல், காலை உணவு, மற்றும் ளுஹா தொழுகை
9 am – 12 pm
கடைவீதி/சந்தைக்கு போவது, குடும்பத்தினருக்கு உதவுதல், சமூக சேவை
12 pm – 1 pm
ஓய்வு / சிறு உறக்கம்
1 pm – 2 pm
லுஹர் தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல் மற்றும் ஹதீஸ் படித்தல்
2 pm – 4 pm
மதிய உணவு, குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில், மற்றும் பல…
4 pm – 6 pm
அஸ்ர் தொழுகை, குடும்பத்துடன் வெளியில் செல்லுதல் அல்லது நண்பர்களை / உறவினர்களை வீட்டிற்கு அழைக்குதல்
6 pm – 7 pm
மஃரிப்B தொழுகை, திக்ரு மற்றும் பொது/சமூக சேவை
7 pm – 8 pm
குடும்ப பராமரிப்பு, புத்தகங்கள் வாசித்தல், இமெயில் மற்றும் பல…
8 pm – 9 pm
இஷா தொழுகை, திக்ரு, குர்ஆன் ஓதுதல், ஹதீஸ் படித்தல் மற்றும் இரவு உணவு
9 pm – 4 am
தூங்கும் முன் ஓதும் திக்ருகள், சுயபரிசோதனை பின் உறக்கம்
4 am – 5 am
இரவுத் தொழுகை, குர்ஆன் ஓதுதல் மற்றும் துஆ கேட்குதல்
பின்வரும் விஷயங்களில் உங்களுடைய நேரங்களை வீனடிக்காதீர்கள்:
1. தொலைபேசி / அலைபேசியில் பேசுவது
2. தொலைக்காட்சி அல்லது இனையதளங்கள் பார்ப்பது
3. பகல் நேரங்களில் உறங்குவது
4. தேவையின்றி வெளியில் செல்லுவது
5. வெறுவெனெ சும்மா வீட்டில் உட்காந்திருப்பது
குறிப்பு:
- உங்களுக்கென்று இது போன்று திட்டங்கள் நடைமுறையில் இருக்குமானால் அதை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
- இந்த விஷயங்களை இதயங்களில் பதித்து நடைமுறைபடுத்துங்கள்.
- இது போன்று உங்களுடைய நடைமுறை அல்லது வசதிக்கு தக்கவாரு இதில் கூடுதல்/குறைத்தல் அல்லது சில மாற்றங்கள் செய்து கொள்ளலாம்.
- ஆனால், கண்டிப்பாக இதை தொடர்ந்து கடைபிடித்து வர வேண்டும்.
பொது/சமூக சேவை: மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பது, இஸ்லாமிய கூட்டங்களில் கலந்து கொள்ளுதல், இஸ்லாமியர்களுக்கு கல்வி புகட்டுதல், மக்களுக்கு உதவி புரிதல், மற்றும் பல…
குடும்ப பராமரிப்பு: குடும்பத்திற்கு (பெற்றோருக்கு, மனைவி மக்களுக்கு) செய்யும் அனைத்து வகையான உதவிகள், பிள்ளைகளுக்கு கல்வி கற்பித்தல் இன்னும் பல…
திக்ரு: காலை மாலை திக்ருகள், ஐவேளை தொழுகைக்கு பின்னால் ஓதும் திக்ருகள், அன்றாடம் ஓதும் ஔராதுகள், இன்னும் பல…