Tuesday, January 10, 2012

மனதோடு மனதாய் – சரித்திர சகோதரர்கள்


சொந்த பந்தங்களைக் காண்பதற்காக மக்காவுக்கு வந்திருந்தார் அம்ர் இப்னு ஆஸ் (ரலி). கஅபாவுக்கு அருகில் சில நபர்கள் தன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் கவனித்தார். அவர்கள் உரையாடும்பொழுது தன் பெயர் அடிபடுவதையும் கவனித்தார் அம்ர்.
ஆர்வம் மேலிட அவர்களை அணுகினார் அம்ர். “நீங்கள் என்ன பேசிக் கொண்டிருந்தீர்கள்?” என்று கேட்டார்.
அவர்கள் நழுவப் பார்த்தார்கள். ஆனால் அம்ர் விடவில்லை. “நீங்கள் என்னைக் குறித்து என்னவோ பேசிக்கொண்டிருந்தீர்கள். என்ன அது?” என்று மீண்டும் கேட்டார்.
“உங்களைப் பார்த்ததும் உங்கள் சகோதரர் ஹிஷாம் எங்கள் நினைவுக்கு வந்தார். தாங்கள் சிறந்தவரா, ஹிஷாம் சிறந்தவரா என்று நாங்கள் விவாதம் செய்து கொண்டிருந்தோம்” என்று அந்த நபர்களில் ஒருவர் கூறினார்.
அம்ர் கூறினார்: “அந்த விஷயத்தில் கருத்து சொல்வதற்கு அதிக தகுதி படைத்தவன் நான்தான். நானும், என் தம்பி ஹிஷாமும் யர்முக் யுத்தத்தில் ஒன்றாகப் பங்கெடுத்தோம். அன்றிரவு முழுவதும் நாங்களிருவரும் பிரார்த்தித்தோம். எங்களுக்கு இரத்த சாட்சியம் (ஷஹாதத்) தரவேண்டுமே என்று. என்னுடைய பிரார்த்தனை பலிக்கவில்லை. ஹிஷாமின் பிரார்த்தனையை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். ஹிஷாம் என்னை விட சிறந்தவர் என்பதற்கு இதனைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும் உங்களுக்கு?”
அம்ருக்கு முன்பே ஹிஷாம் இஸ்லாத்தை ஏற்றிருந்தார். குடும்பத்தார் இதற்காக அவருக்கு சொல்லொணா துயரங்களைக் கொடுத்தனர். ஆதலால் அவர் அபிசீனியாவுக்குச் சென்றார். பின்னர் மக்கா திரும்பினார். மதீனாவுக்குச் செல்வதற்கு தயாராகும் பொழுது குடும்பத்தார் அவரைப் பிடித்து அடைத்து வைத்தனர். மயக்கம் வரும் வரை கடுமையாக அடித்தனர். அப்படி அடைந்து கிடந்த சமயத்தில் கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பை ஹிஷாம் நழுவ விடவில்லை. வீட்டை விட்டு தப்பித்தார். மதீனா வந்தடைந்தார்.
அங்கே இஸ்லாத்திற்காக அரும் பணியாற்றினார். இறுதியில் ஹஸ்ரத்உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் யர்முக் யுத்தத்தில் ஷஹீதானார்.
அவருடையய சகோதரர் அம்ர் இப்னு ஆஸ் (ரலி) இஸ்லாத்தை நிலைநாட்டுவதில் பெரும் பங்காற்றினார். “எகிப்தின் விடுதலையாளர்” என்று வரலாற்றாசிரியர்கள் அவருக்குப் பட்டப் பெயர் சூட்டியுள்ளனர்.
ரோம சாம்ராஜ்யத்தின் அரசியல்-சமூக-மானசீகமான பிடியிலிருந்து எகிப்தியர்களை விடுதலை செய்தவர்தான் அம்ர் இப்னு ஆஸ் (ரலி).
இதேபோல் இகம் போற்றும் இன்னொரு ஜோடியைப் பார்ப்போம்.
அப்துல்லாஹ் இப்னு ஜஹ்ஷ் (ரலி) அவர்களும், ஸஃது இப்னு அபீவக்காஸ்(ரலி) அவர்களும் உற்ற தோழர்கள். உஹத் யுத்தத்தின் பொழுது இருவரும் இறைவனிடம் பிரார்த்தித்தார்கள். அப்துல்லாஹ்வின் பிரார்த்தனையில் இரத்த சாட்சியத்தின் தாகம் அதிகமாக இருந்தது. அல்லாஹ் அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டான்.
இஸ்லாம் இகமெங்கும் பரவியபொழுது அதில் உறுதியாகப் பங்காற்றிய ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) நீண்ட நாள் உயிர் வாழ்ந்தார். பாரசீக சாம்ராஜ்யத்தின் ஆதிக்கத்திலிருந்து உலகத்தை மீட்டெடுத்ததில் அவரது பங்கு அளப்பரியது; காலத்தால் அழிக்க முடியாதது.
எடுத்துக்கொண்ட இறைப்பணியின் இலட்சியம் வாழ்க்கையில் தனித்துவத்தைத் தேடித் தருகிறது. பொது வாழ்க்கையின் அனுபவங்களும், அந்தப் புனிதப் பாதையில் ஆற்றிய அரும் சேவைகளும் நாளை அல்லாஹ்வின் முன்பு சாட்சிகள் பகரும்.
இவர்களைப் பற்றித்தான் இறைவன் தன் இறைமறையில் இவ்வாறு கூறுகின்றான்:
முஃமின்களில் நின்றுமுள்ள மனிதர்கள் அல்லாஹ்விடம் அவர்கள் செய்துள்ள வாக்குறுதியில் உண்மையாக நடந்து கொண்டார்கள்; அவர்களில் சிலர் (ஷஹீதாக வேண்டும் என்ற) தம் இலட்சியத்தையும் அடைந்தார்கள்; வேறு சிலர் (ஆர்வத்துடன் அதை) எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள் – (எந்த நிலைமையிலும்) அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து சிறிதும் மாறுபடவில்லை. (திருக்குர்ஆன் 33:23)

No comments:

Post a Comment